Thursday, May 29, 2008

ஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் (பாடல் 96)


கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

கோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
அல்லியம் தாமரைக் கோயில் வைகும் - அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்
யாமளவல்லியை - இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை
ஏதம் இலாளை - குற்றமொன்றில்லாதவளை
எழுத அரிய - வரைவதற்கு எளிதில்லாத
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை - அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை
தம்மால் ஆமளவும் தொழுவார் - தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்
எழு பாருக்கும் ஆதிபரே - சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.

அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும்

மோனை: கோமளவல்லியை - கோயில், யாமளவல்லியை - ஏதம் - இலாளை - எழுதரிய, சாமளமேனி - சகலகலாமயில் - தன்னை - தம்மால், ஆமளவும் - ஆதிபரே.
***
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர்

Friday, May 16, 2008

நான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் (பாடல் 95)


நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே


நன்றே வருகினும் - எனக்கு நன்மைகளே விளைந்தாலும்

தீதே விளைகினும் - தீமைகளே விளைந்தாலும்

நான் அறிவது ஒன்றேயும் இல்லை - நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை

உனக்கே பரம் - உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம்.

எனக்கு உள்ளதெல்லாம் - என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம்

அன்றே உனது என்று அளித்து விட்டேன் - எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன்.

அழியாத குணக்குன்றே - என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே

அருட்கடலே - அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே


இமவான் பெற்ற கோமளமே - இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே.

அபிராமி அன்னையே! நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன். இனி மேல் எனக்கு நன்மைகளே வந்தாலும் தீமைகளே வந்தாலும் நான் அவற்றைப் பிரித்து அறிய மாட்டேன். அவை அனைத்துமே உன் அருளால் வருவதால் எல்லாமே எனக்கு நன்மையாகத் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பிரித்துப் பார்த்து நடத்திக் கொள்வதெல்லாம் உன் பரம்; உன் கடமை. அன்பு, அறிவு, அருள் போன்ற நற்குணங்களின் குன்றே. அவற்றுள்ளும் சிறந்த அருளின் கடலே. மலைமகளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நன்றே என்று நிறைய இந்தப் பாடல் நன்றே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கோமளமே என்று நிறைய அடுத்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நன்றே, ஒன்றேயும், அன்றே, குன்றே

மோனை: நன்றே - நான், ஒன்றேயும் - உனக்கே - உள்ளம், அன்றே - அளித்துவிட்டேன் - அழியாத, குன்றே - கோமளமே.

அபிராமி சமயம் நன்றே (பாடல் 94)


விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே


விரும்பித் தொழும் அடியார் - அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள்


விழி நீர் மல்கி - கண்களில் கண்ணீர் மல்கி


மெய் புளகம் அரும்பி - மெய் சிலிர்த்து


ததும்பிய ஆனந்தம் ஆகி - மகிழ்ச்சி பெருகித் ததும்பி


அறிவு இழந்து - அறிவு மயக்கம் உற்று


கரும்பின் களித்து - இனிய கரும்பினை உண்டது போல் களித்து


மொழி தடுமாறி - சொற்கள் தடுமாறி


முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் - இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால்


அபிராமி சமயம் நன்றே - அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே.

அபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர். கண்ணீர் மல்கி, மெய் சிலிர்த்து, மகிழ்ச்சி பெருகி, அறிவிழந்தவர் போல் சொற்குழறி பித்தரைப் போல் அன்னையின் மேல் அன்பு பெருகி வணங்குவது அடியார்களின் பக்திக்கு அடையாளங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரும்புவதே என்று நிறைய இந்தப் பாடல் விரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் நன்றே என்று நிறைய அடுத்தப் பாடல் நன்றே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரும்பி, அரும்பி, கரும்பின், தரும்பித்தர்

மோனை: விரும்பி - விழிநீர், அரும்பி - ஆனந்தம் - ஆகி - அறிவு, கரும்பின் - களித்து, தரும் - சமயம்.

Wednesday, May 14, 2008

தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல் 93)


நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே

நகையே இது - பெரும் நகைச்சுவை இது.


இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு

முகையே முகிழ் முலை - முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும்

மானே முதுகண் - அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும்

முடிவுயில் அந்த வகையே பிறவியும் - சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை

மலைமகள் என்பதும் - மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது

வம்பே - இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே

மிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே - இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே.

இறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை 'தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்' வகையில் சொல்கிறார் பட்டர். உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் மொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே.

அடியேன் சிறிய ஞானத்தன் என்று தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுர வரிகளை அடியேனின் பதிவு முகவுரையில் இட்டிருக்கிறேன். அங்கும் நம்மாழ்வார் சொல்லுவது இதே கருத்தினைத் தான்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் முகிழ்நகையே என்று நிறைய இந்தப் பாடல் நகையே என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரும்புவதே என்று நிறைய அடுத்தப் பாடல் விரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நகையே, முகையே, வகையே, மிகையே

மோனை: நகையே - நாயகிக்கு, முகையே - முகிழ் - முலை - மானே - முதுகண் - முடிவு, வகையே - வம்பே - மலைமகள், மிகையே - விரும்புவதே.

Thursday, May 08, 2008

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே (பாடல் 92)


பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பதத்தே உருகி - உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி

நின் பாதத்திலே மனம் பற்றி - உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து

உந்தன் இதத்தே ஒழுக - உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட

அடிமை கொண்டாய் - என்னை அடிமையாகக் கொண்டாய்.

இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் - இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன்.

அவர் போன வழியும் செல்லேன் - அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்.

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே - மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே

தேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே! உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ? தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பதந்தருமே என்று நிறைய இந்தப் பாடல் பதத்தே என்று தொடங்கியது. இந்தப் பாடல் முகிழ்நகையே என்று நிறைய அடுத்தப் பாடல் நகையே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பதத்தே, இதத்தே, மதத்தே, முதத்தேவர்

மோனை: பதத்தே - பாதத்திலே - பற்றி, இதத்தே - இனி, மதத்தே - மதி - மயங்கேன், முதல் - மூவரும் - முகிழ்ந்கையே.

Tuesday, May 06, 2008

அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 91)


மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

மெல்லிய நுண் இடை மின்னனையாளை - மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை


விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை - விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை


புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் - புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற


அடியாரைத் தொழுமவர்க்கு - அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு


பல்லியம் ஆர்த்தெழ - பலவித இசைக்கருவிகள் முழங்கி வர

வெண்பகடு ஊரும் பதம் தருமே - வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள்.

அடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறார். மெல்லிய நுண்ணிய இடையும், இறைவரால் அணைக்கப்பட்ட மென்முலையும் கொண்ட மின்னலையும் பொன்னையும் ஒத்த இறைவி, அவளை முறைப்படித் தொழும் அடியவர்களைத் தொழுபவர்களுக்கு, இந்திர பதவி முதலிய செல்வங்களை அருளுவாள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மெல்லியலே என்று நிறைய இந்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கியது. இந்தப் பாடல் பதந்தருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பதத்தே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மெல்லிய, புல்லிய, சொல்லிய, பல்லியம்

மோனை: மெல்லிய - மின்னனையாளை, புல்லிய - பொன்னனையாளை - புகழ்ந்து, சொல்லிய - தொழும் - தொழுமவர்க்கு, பல்லியம் - பகடூரும் - பதந்தருமே.