Tuesday, June 17, 2008

புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே (பாடல் 97)


ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


ஆதித்தன் - அதிதியின் மகனான கதிரவன்

அம்புலி - நீரைப் போல் குளிர்ந்த நிலவன்

அங்கி - தீக்கடவுளாம் அக்கினி

குபேரன் - செல்வத்திற்குத் தலைவனாம் குபேரன்

அமரர் தம் கோன் - மரணமிலாதவராம் விண்ணவர்கள் தம் தலைவன் இந்திரன்

போதிற் பிரமன் - தாமரைப்பூவில் பிறந்த/வாழும் பிரமன்

புராரி - திரிபுரங்களை அழித்த சிவன்

முராரி - முராசுரனை அழித்த திருமால்

பொதியமுனி - பொதிகை மலையில் வாழும் அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் - போரிட்டு அழிக்கும் படைக்கலம் கொண்ட கந்தன்

கணபதி - கணங்களின் தலைவன் கணபதி

காமன் - மன்மதன்

முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் - முதலான சாதனை புரிந்தவர் எண்ணற்றவர்

போற்றுவர் தையலையே - எப்போதும் அன்னையைப் போற்றுவார்கள்.

அன்னையைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியம் செய்து அந்தப் புண்ணியத்தால் புண்ணியர் என்ற பெருமையைப் பெற்று அதனை பயனால் உயர்ந்த இடத்தைப் பெற்று சாதித்தவர்கள் எண்ணற்றவர்கள். எல்லோரையும் பட்டியலிட முடியாவிட்டாலும் முடிந்தவரை செய்யலாம் என்று தொடங்கினார் போலும் அபிராமி பட்டர்.

அப்படி எண்ணியவுடன் கண்ணெதிரே தோன்றினான் கதிரவன். அவனைச் சொன்னார் முதலில். அவன் தன் ஒளியையும் வெம்மையையும் பெற்றது அன்னையிடம். அவனைச் சொன்னவுடன் அம்புலி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் குளுமையைப் பெற்றது அன்னையிடம். உலகத்தில் முச்சோதி என்று புகழப்படும் கதிரவன், நிலவன், தீ என்ற மூவரில் அடுத்ததாக அக்கினி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் தன் திறனையெல்லாம் பெற்றது அன்னையிடம். அக்கினி தேவர்களில் ஒருவனாகவும் இருப்பதால் அடுத்து இரு தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். குபேரனையும் இந்திரனையும் சொன்னார். குபேரன் செல்வத்திற்கெல்லாம் அதிபதியாக இருப்பதும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் இருப்பதும் அன்னையின் அருளால்.

தேவர்களின் தலைவன் என்று இந்திரனைச் சொன்ன பிறகு அவனுக்கும் மேலான முப்பெரும்தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். பூவில் பிறந்த பிரமனையும், சிவனையும், திருமாலையும் சொன்னார். இம்மூவரும் தத்தம் படைத்தல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களைச் செய்யும் வல்லமை பெற்றது அன்னையின் திருவருளால். அடுத்து யார் என்று சிந்திக்க பொதிய முனி நினைவிற்கு வந்தார். அகத்தியர் தமிழைப் பெற்று வளர்த்ததும் அன்னையின் திருவருளால். தமிழ் என்றதும் காதிப்பொருபடை கந்தன் நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அன்னையின் சக்தியே உருவான சக்திவேலைக் கொண்டு தானே கந்தன் போரிடுகிறான். அந்தச் சக்தி வேலை குறிப்பாகச் சொல்லுவது போல் காதிப்பொருபடை என்ற அடைமொழியைக் கந்தனுக்குத் தந்தார். தம்பியைச் சொன்னவுடன் அண்ணன் நினைவு வந்தது. அவனையும் சொன்னார். எல்லோரையும் சொன்ன பின்னர் 'அடடா மிக முக்கியமான ஒருவனை விட்டுவிட்டோமே. அன்னையின் திருவருளால் அன்றோ இவன் காமேஸ்வரனையும் வெல்ல முடிகிறது' என்று எண்ணி காமனையும் சொன்னார். இனி சொல்லி முடியாது என்று எண்ணிலர் என்று நிறைவு செய்தார்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆதிபரே என்று நிறைய இந்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தையலையே என்று நிறைய அடுத்தப் பாடல் தைவந்து என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஆதித்தன், போதிற்பிரமன், காதிப்பொருபடை, சாதித்த

மோனை: ஆதித்தன் - அம்புலி - அங்கி - அமரர், போதில் - பிரமன் - புராரி - பொதியமுனி, காதிப்பொருபடை - கந்தன் - கணபதி - காமன், சாதித்த - தையலையே