Sunday, July 29, 2007

பிறை முடித்த ஐயன் திருமனையாள்! (பாடல் 52)


வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி

துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்

மதகரி - பெரிய பெரிய யானைகள்

மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள்

சிவிகை - அழகிய பல்லக்கு

பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்


பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்

பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்


அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு

அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு - பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு


உளவாகிய சின்னங்களே - கிடைக்கும் அடையாளங்கள்.

இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வையகத்தே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வையம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சின்னங்களே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்கும்.

எதுகை: வையம், பெய்யும், ஐயன், செய்யும்

மோனை: வையம் - மதகரி - மாமகுடம், பெய்யும் - பெருவிலை - பிறைமுடித்த, ஐயன் - அடி - அன்பு, செய்யும் - தவம் - சின்னங்களே.

Friday, July 20, 2007

மரணம் பிறவி இரண்டும் எய்தார் (பாடல் 51)


அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே


அரணம் பொருள் என்று - தாங்கள் கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து

அருள் ஒன்றும் இலாத - யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த

அசுரர் தங்கள் - திரிபுர அசுரர்களின்

முரண் அன்று அழிய - பகை முன்னொரு நாள் அழிந்து போகும் படி

முனிந்த பெம்மானும் - சினம் கொண்டு சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும்

முகுந்தனுமே - அவருக்குத் துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும்

சரணம் சரணம் என நின்ற நாயகி - சரணம் சரணம் என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே!

தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே - அவள் தம் அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில் மீண்டும் இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள்.

***

அருஞ்சொற்பொருள்:

அரணம்: கோட்டை, மதில்
முரண்: முரண்பாடு, பகைமை
முனிதல்: சினம் கொள்ளுதல்

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அரண் நமக்கே என்று நிறைந்தது. இந்தப் பாடல் அரணம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வையகத்தே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் வையம் என்று தொடங்கும்.

எதுகை: அரணம், முரண், சரணம், மரணம்

மோனை: அரணம் - அருள் - அசுரர், முரண் - முனிந்த - முகுந்தனுமே, சரணம் - சரணம் - தன், இரண்டும் - இந்த.