Monday, July 28, 2008

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே (பாடல் 99)




குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை - கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள்



கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை - குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள்



வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் - வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள்



கமலத்தின் மீது அன்னமாம் - தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள்



கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை.


கடம்ப மலர்கள் அம்மைக்கும் பிடிக்கும் அறுமுகனுக்கும் பிடிக்கும். கடம்ப மலர்கள் சூடி மகிழ்கிறான் குமரன். அந்த கடம்ப வனத்திடை வசித்து மகிழ்கிறாள் அன்னை. கடம்பவனம் எங்கும் இருக்கலாம். ஆனால் பொதுவாக 'கடம்பவனம்' என்றதும் நினைவிற்கு வருவது மதுரை. மீனாட்சி திருக்கோவிலின் தல மரமும் கடம்பமே. இந்தக் கடம்பவனத்திலே வசிப்பவள் பச்சை நிறம் கொண்டவள். கிளியைக் கையில் கொண்டவள். அவளது இன்னொரு பெயர் மாதங்கி. அவள் இசையில் வல்லவள். அவளை வணங்குபவர்களுக்கு இசையை அருள்பவள். இசையின் உருவகம் குயில். இசையை அருள்வதாலும் இசையில் வல்லவள் என்பதாலும் கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் குயிலென அன்னையைக் கூறினார் போலும்.

குயிலுக்கு குரல் அழகு உண்டு. மேனி அழகு இல்லை. மயிலுக்கோ குரல் அழகு இல்லை. மேனி அழகு உண்டு. அன்னையோ குரல் அழகும் கொண்டவள்; வியக்கத்தக்க மேனி அழகும் கொண்டவள். அதனால் தான் குயிலைப் போலும் இருக்கிறாள்; மயிலைப் போலும் இருக்கிறாள் என்றார் போலும்.

ஹிம என்றால் குளிர் என்று பொருள். குளிர் மிகுதியாகக் கொண்ட மலையாதலால் ஹிமயம், ஹிமாசலம், ஹிமாலயம் என்ற பெயர்கள் அந்த மலைத்தொடருக்கு உண்டானது. அந்தக் குளிர்ந்த இமயாசலத்தில் அழகிய மயிலாக இருக்கிறாள் அன்னை.

காலையில் செங்கதிராம் உச்சி வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பராசக்தி நீலவானத்தினிலே


என்று பாடினான் ஒரு புலவன். அபிராமி பட்டர் அன்னையை 'விசும்பில் வந்துதித்த வெயில்' என்று சொன்னதை வைத்துத் தான் பாடினான் போலும் அந்தப் புலவனும். உலகங்களுக்கெல்லாம் ஒளி தரும் சோதிகளாக இருப்பவள் அன்னை. அறிவும் தெளிவும் தருபவள் அன்னை.

தாமரை மலருக்கும் அன்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆன்மிக மலர்ச்சிக்குத் தாமரையை குறியீடாகச் சொல்லுவார்கள். ஆன்மிக மலர்ச்சி அடைந்த அறிவும் தெளிவும் நிறைந்த ஆன்றோர்களை அன்னப்பறவையாகச் சொல்வார்கள். ஹம்ஸர்கள் என்றும் பரமஹம்ஸர்கள் என்றும் அவர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட பரமஹம்ஸர்களைக் குறிக்க தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவை குறியீடாக அமையும். இராமகிருஷ்ண இயக்கத்தின் குறியீடாகவும் அதனைக் காணலாம். அப்படி பரமஹம்ஸர்களின் மொத்த உருவமாக அமர்பவள் அன்னை.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பூங்குயிலே என்று நிறைய இந்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கனங்குழையே என்று நிறைய அடுத்தப் பாடல் குழையை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குயிலாய், மயிலாய், வெயிலாய், கயிலாயருக்கு

மோனை: குயிலாய் - கடம்பாடவி - கோலவியன், மயிலாய் - வந்து, வெயிலாய் - விசும்பில், கயிலாயருக்கு - கனங்குழையே.

Wednesday, July 16, 2008

மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் (பாடல் 98)


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே


தை - தையலே; பெண்களில் சிறந்தவளே.

வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு - நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு

கை வந்த தீயும் - கையிலிருந்த தீயும்

தலை வந்த ஆறும் - திருமுடி மேல் இருந்த கங்கையும்

கரந்ததெங்கே - மறைந்ததெங்கே?

மெய் வந்த நெஞ்சின் அல்லால் - உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி

ஒரு காலும் - ஒரு போதும்

விரகர் தங்கள் - வஞ்சகர்களில்

பொய் வந்த நெஞ்சில் - பொய் தங்கும் நெஞ்சில்

புகல் அறியா மடப்பூங்குயிலே - புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே

***

திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது.

அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தையலையே என்று நிறைய இந்தப் பாடல் தைவந்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் பூங்குயிலே என்று நிறைய அடுத்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தைவந்து, கைவந்த, மெய்வந்த, பொய்வந்த

மோனை: தைவந்து - தாமரை, கைவந்த - கரந்தது, மெய்வந்த - விரகர், பொய்வந்த - புகலறியா - பூங்குயிலே.