Monday, December 31, 2007

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் (பாடல் 71)


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி - இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள்

பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க - குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை.

மனத்தில் ஏதேனும் குறை ஏற்படும் போது இந்தப் பாடலைப் படிக்கலாம் போலிருக்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரழகே என்று நிறைய இந்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கியது. இந்தப் பாடல் என் குறையே என்று நிறைய அடுத்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அழகுக்கு, பழகி, குழவி, இழவுற்று

மோனை: அழகுக்கு - அருமறைகள்; பழகி - பதாம்புயத்தாள் - பனிமாமதியின், குழவி - கோமளயாமளை - கொம்பிருக்க, இழவுற்று - இரங்கேல் - என்குறையே

Friday, December 21, 2007

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் (பாடல் 70)


கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் - என் கண்கள் மகிழ்வு எய்திக் களிக்கும் படி நான் கண்டு கொண்டேன்


கடம்பாடவியில் - கடம்ப வனத்தில்


பண் களிக்கும் குரல் - இசை விரும்பி உறைகின்ற குரலையும்


வீணையும் கையும் - வீணையை ஏந்திய கைகளையும்

பயோதரமும் - அழகிய திருவயிற்றையும்

மண் களிக்கும் பச்சை வண்ணமும் - மண்மகள் விரும்பி மகிழும் பச்சை நிறமும்

ஆகி - பெற்று

மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே - மதங்கர குலத்தில் தோன்றிய என் தலைவியின் பேரழகையே.

அம்மையின் திருமேனி அழகைப் போற்றுகிறார் இந்தப் பாடலில். பச்சை நிறம் செழுமையின் வண்ணமாதலால் மண்களிக்கும் வண்ணம் என்கிறார். பண் பாடும் குரல் என்று சொல்வார்கள்; இவரோ பண்ணே களிக்கும் குரல் என்கிறார். கடம்பவனத்தையும் பச்சை நிறத்தையும் சொன்னதால் இது மீனாட்சியம்மையைப் போற்றும் பாடல் என்று நினைக்கிறேன். மதங்கர் குலம் என்பது எந்தக் குலம்? மதங்கரிஷி என்ற ஒரு முனிவரைப் பற்றி படித்திருக்கிறேன். அவர் குலத்தில் அன்னை தோன்றினாளா? சொல்லுங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கடைக்கண்களே என்று நிறைய இந்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரழகே என்று நிறைய அடுத்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கண், பண், மண், பெண்

மோனை: கண் - களிக்கும் - கண்டு - கொண்டேன் - கடம்பாடவி, பண் - பயோதரமும், மண் - மதங்கர், பெண் - பெருமாட்டி - பேரழகே.

Tuesday, December 18, 2007

தனம் தரும் கல்வி தரும் (பாடல் 69)


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும் - எல்லாவிதமான செல்வங்களும் தரும்


கல்வி தரும் - எல்லாவிதமான கல்வியையும் தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் - என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்


தெய்வ வடிவும் தரும் - தெய்வீகமான உருவத்தையும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்


நல்லன எல்லாம் தரும் - இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்

அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் - எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும். அருமையான பாடலும் கூட.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தனமில்லையே என்று நிறைய இந்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கடைக்கண்களே என்று நிறைய அடுத்தப் பாடல் கண்களிக்கும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தனம், மனம், இனம், கனம்

மோனை: தனம் - தரும் - தளர்வு, மனம் - வடிவும் - வஞ்சம், இனம் - என்பவர்க்கே, கனம் - கடைக்கண்களே.

Friday, December 14, 2007

சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் (பாடல் 68)


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் - உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும்


ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் - இவற்றின் தன்மையாக நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை எல்லாம் ஒன்றுபட்டுச்


சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே - சேரும் சிறிய திருவடிகளை உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே


சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே - சார்ந்து நிற்கும் புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள் பெறாத செல்வம் எதுவும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஐம்பூதங்களாகவும் அவற்றின் தன்மைகளான ஐம்புலன் உணர்வுகளாகவும் ஒன்று பட்டு நிற்கும் அன்னையின் திருவடிகளை அடைந்த பின் இந்தப் பிரபஞ்சம் எல்லாமும் கிடைத்ததாகுமே. அதனால் தான் அவர் பெறாத தனம் பிறிதில்லை என்கிறார்.

***
அருஞ்சொற்பொருள்:

பார் - உலகம்
புனல் - நீர்
கனல் - நெருப்பு
கால் - காற்று
விசும்பு - ஆகாயம்
முருகு - நறுமணம்
ஊறு - உணர்வு (தொடுதல் உணர்வு)
சீறடி - சிறிய அழகிய திருவடி

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாரெங்குமே என்று நிறைய இந்தப் பாடல் பாரும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தனமில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் தனம்தரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாரும், ஊரும், சேரும், சாரும்

மோனை: பாரும் - புனலும் - படர்விசும்பும், ஊரும் - ஒளி - ஊறு - ஒலி - ஒன்றுபடச், சேரும் - சிவகாமசுந்தரி - சீறடிக்கே, சாரும் - தவம் - தனம்.