Tuesday, April 29, 2008

இனி எனக்குக் கிடைக்காத பொருள் எதுவுமில்லை (பாடல் 90)


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து - நான் பிறப்பிறப்பு சூழலில் தொடர்ந்து வருந்தாத வகையில் என் மனத்தையே அவள் வீற்றிருக்கும் தாமரையாகக் கொண்டு அவளாக அவள் கருணையினால் வந்து புகுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக - பல நாட்களாகப் பழகிய பழைய இருப்பிடத்தைப் போல் நிலையாக அமர்ந்துக் கொண்டாள்

இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை - இனி எனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. நான் அப்படியே விரும்பினாலும் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை.

விண் மேவும் புலவருக்கு - விண்ணில் வாழும் அறிவில் சிறந்த புலவராம் தேவர்களுக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே - விருந்தாக கடலில் விளைந்த மருந்தான அமுதத்தைப் பெற்றுத் தரும் மென்மையான இயல்புடையவளே.

கிடைத்தற்கு அரியது கடல் மருந்தான அமுதம். அதனையே அன்னை விண்ணவர்களுக்குப் பெற்றுத் தந்தாள். மோகினி உருவமாக பெருமாள் அந்த அமுதத்தைத் தேவர்களுக்குத் தந்ததாகப் புராணம் சொல்லும். அந்த மோகினி இந்த அபிராமி தான் என்கிறார் பட்டர். அப்படி கிடைத்தற்கரிய அமுதத்தையே பெற்றுத் தருபவள் என் மனத்தாமரையில் பழைய இருப்பிடம் போல் பல நாள் பழகிய இருப்பிடம் போல் வந்து அமர்ந்த பின்னர் எனக்கு வேறு ஏது குறை?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வருந்தியுமே என்று நிறைய இந்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கியது. இந்தப் பாடல் மெல்லியலே என்று நிறைய அடுத்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வருந்தாவகை, இருந்தாள், பொருந்தாது, விருந்தாக

மோனை: வருந்தா - வகை - வந்து, இருந்தாள் - இருப்பிடமாக - இனி, பொருந்தாது - பொருள் - புலவருக்கு, விருந்தாக - வேலை.

Tuesday, April 22, 2008

சிறக்கும் கமலத் திருவே (பாடல் 89)


சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

சிறக்கும் கமலத் திருவே
- தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளே! சிறப்பான செல்வ வடிவானவளே!

நின் சேவடி சென்னி வைக்க - உன் சிறந்த திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் - உயர்ந்த வானுலகத்தை அருளும் தரும் உன் துணைவராம் இறைவரும் நீயும்

துரியம் அற்ற உறக்கம் தர வந்து - தன்னைத் தான் அறியும் நான்காவது நிலையையும் தாண்டிய என்றும் நிலைத்த உறக்கமாம் சாக்காட்டைத் தர வந்து

உடம்போடு உயிர் உறவு அற்று - உடம்போடு உயிர் உறவு இல்லாமல் பிரிந்து

அறிவு மறக்கும் பொழுது - அறிவு மயக்கம் ஏற்படும் போது

என் முன்னே வரல் வேண்டும் - என் முன்னே வர வேண்டும்

வருந்தியுமே - வருந்தி அழைக்கின்றேன்.

தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் உயர்ந்த செல்வ வடிவானவளே! அபிராமி அன்னையே! உயர்ந்த வானுலகத்தை அருள்பவர்கள் நீயும் உன் துணைவரான இறைவரும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற இயற்கையான மூன்று நிலைகளிலும் வேறுபட்ட நான்காவது நிலையான 'தன்னைத் தான் அறிதல்' என்னும் ஞான நிலையாம் துரியமும் கடந்த நிலை என்றும் நீங்காத் துயில் கொண்டு நீயும் இறைவரும் அருள வானுலகம் அடைதல். அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சி இல்லை. என் உடம்போது உயிர் உறவு அறும் போது, மதி மயக்கம் ஏற்படும் போது உன்னை நினைப்பது எளிதில்லை. அதனால் இப்போதே வருந்தி வேண்டுகிறேன். அந்த நிலையில் நீயும் உன் துணைவரும் உங்கள் திருவடிகளை என் சென்னி மேல் வைக்க என் முன்னே வரல் வேண்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சிறந்தவளே என்று நிறைய இந்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வருந்தியுமே என்று நிறைய அடுத்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: சிறக்கும், துறக்கம், உறக்கம், மறக்கும்

மோனை: சிறக்கும் - சேவடி - சென்னி, துறக்கம் - தரும் - துணைவரும் - துரியம், உறக்கம் - உடம்பொடு - உயிர் - உறவு, மறக்கும் - முன்னே.

Friday, April 18, 2008

தரமில்லாதவன் என்று தள்ளிவிடாதே (பாடல் 88)


பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே


பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்

தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது - தகுதி இல்லாதவன் இவன் என்று எண்ணி இழிந்தவனான என்னைத் தள்ளாதே

தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய - தகாதவற்றைச் செய்த திரிபுராசுரர்களின் முப்புரங்களும் எரியும் படி மேரு மலையை வில்லாக ஏந்திய

போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் - தாமரை மலரில் பிறந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சினம் கொண்டு அறுத்த கையை உடையவனான சிவபெருமானின்

இடப்பாகம் சிறந்தவளே - இடப்பாகத்தில் நீங்காமல் நிலை பெற்றவளே.

தகாதன செய்த திரிபுராசுரர்களைக் கொன்றவனும் தகாதன பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்தவனும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் 'தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்' என்று என்னைத் தள்ளக் கூடாது. நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்.

ஈருயிர் ஓருடல் என்று உலகவழக்கில் ஒற்றுமையைக் குறிக்கச் சொல்லுவார்கள். இங்கோ ஒரே உடலில் ஒரு பக்கம் ஐயனும் ஒரு பக்கம் அம்மையுமாகக் காட்சி தருகிறார்கள். ஐயனோ தகுதியில்லாதவர்கள் என்றால் தண்டிக்காமல் விடமாட்டான். அப்படிப் பட்டவனைச் சரணடைந்தாலும் நான் செய்த குற்றங்களை மனத்தில் கொண்டு என்னைத் தண்டித்துவிடுவான் என்று அன்னையே உன்னைச் சரணடைந்தேன். ஆனால் நீயோ அவன் உடலில் ஒரு பாகத்தில் சிறப்பாக விளங்குகிறாய். நீயும் அவனைப் போலவே தகுதியில்லாதவர்களைத் தண்டித்துவிடுவாயோ? அன்னையே நீ அப்படி செய்யக் கூடாது. உன்னையன்றி மற்றோர் கதி இல்லை என்று உன்னையே அடைந்துவிட்டேன்.

***
தரியலர் என்று தகாதன செய்த திரிபுரர்களைக் குறித்தார் பட்டர். மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுர அசுரர்களுடன் போருக்குச் சென்றதனால் பொருப்பு வில் வாங்கிய என்றார் பட்டர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன் தன்னைப் படைத்தவர் திருமால்; அவனும் சிவபெருமானும் ஓருருவானவர்கள் என்பதை மறந்துவிட்டு, தனக்கும் ஐந்து தலைகள் சிவனுக்கும் ஐந்து தலைகள் - அதனால் தானும் சிவனும் ஒரே தரத்தவர் என்று தகாதன பேசினான். அதனால் சினந்த சிவபெருமான் அவன் ஐந்தாவது சிரத்தை அறுத்தார். திருமாலின் உந்தியில் பிறந்தவர் என்பதைக் குறிக்க 'போதில்' என்றார் பட்டர். சினம் கொண்டு சிரத்தை அறுத்தான் சிவன் என்பதைக் குறிக்க 'செற்ற' என்றார் பட்டர். அப்படி சினம் கொண்டு அறுத்த சிரம் சிவபெருமானின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டதைக் குறிக்க 'கையான்' என்று சொன்னார் பட்டர். இப்படி திரிபுராசுரர்களைப் போல் தகாதன செய்தும் பிரம்மனைப் போல் தகாதன பேசியும் திரிந்த என்னையும் அவர் அவர்களைத் தண்டித்தது போல் தண்டித்துவிடாதே என்கிறார் பட்டர்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பராபரையே என்று நிறைய இந்தப் பாடல் பரமென்று என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிறந்தவளே என்று நிறைய அடுத்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பரமென்று, தரமன்று, புரமன்று, சிரமொன்று

மோனை: பரம் - பத்தருக்குள், தரம் - தள்ளத் - தகாது - தரியலர் - தம், புரம் - பொருப்புவில் - போதில், சிரம் - செற்ற - சிறந்தவளே.

Monday, April 07, 2008

விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற திருவுருவம் (பாடல் 87)




மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் - எத்தனை தான் சொன்னாலும் உன் பெருமை சொல்லி முடியாது என்ற வகையில் மொழிக்கு எட்டாமலும், எந்த வகையில் நினைத்தாலும் உன் திருவுருவை எண்ணி முடியாது என்ற வகையில் நினைவுக்கு எட்டாமலும் இருக்கும் உன் திருவுருவம்



எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் - என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! இது என்ன வியப்பு?!



விழியால் மதனை அழிக்கும் தலைவர் - தன்னுடைய நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த எங்கள் தலைவராம் சிவபெருமானின்


அழியா விரதத்தை - என்றும் தீராத தவமென்னும் விரதத்தை


அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - உடம்பின் இடப்புறத்தில் ஒரு பாகத்தையே கொண்டு இந்த அம்மை நிற்க அதன் பின்னரும் தவம் செய்வாரும் உளரோ என்று உலகம் எல்லாம் பழிக்கும் படி நிற்கின்ற பரதெய்வத்திற்கும் பரதெய்வமானவளே.

அம்மையே உன் திருவுருவம் மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருவுருவம். அந்தத் திருவுருவத்தின் பெருமைச் சொல்லி முடியாது. மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் தவத்தையே உலகோர் பழிக்கும் படி செய்யும் பேரழகுடைய திருவுருவம் நின் உருவம். அப்படிப் பட்ட வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவம் என்னுடைய முன்வினைப்பயன்கள் என்னும் தடைகளையும் மீறி என் கண்களுக்கு முன்னர் வந்து நிற்கின்றது என்றால் அது என்னுடைய முயற்சியாலும் தவத்தாலும் ஏற்பட்டது இல்லை. உன்னுடைய அளவில்லாத பெருங்கருணையாலே மட்டும் நடக்கின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பணிமொழியே என்று நிறைய இந்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பராபரையே என்று நிறைய அடுத்தப் பாடல் பரமென்று என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மொழிக்கும், விழிக்கும், அழிக்கும், பழிக்கும்

மோனை: மொழிக்கும் - மூர்த்தம், விழிக்கும் - வினைக்கும் - வெளி - விழியால், அழிக்கும் - அழியா -அண்டம், பழிக்கும் - பாகம் - பராபரையே.

Tuesday, April 01, 2008

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே (பாடல் 86)



மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

மால் அயன் தேட - திருமாலவனும் பிரம்மனும் தேட
மறை தேட - வேதங்கள் தேட
வானவர் தேட - வானவர் தேட
நின்ற காலையும் - நிற்கும் திருப்பாதங்களையும்
சூடகக் கையையும் கொண்டு - வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு
கதித்த கப்பு வேலை - பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை)
வெங்காலன் என் மேல் விடும் போது - வெம்மையுடைய காலன் என் மேல் விடும் போது
வெளி நில் கண்டாய் - முன் வந்து நின்று அருள்வாய்

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே - பாலைப் போன்ற, தேனைப் போன்ற, பாகைப் போன்ற இனிமையான திருக்குரலை உடையவளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மாலையுமே என்று நிறைய இந்தப் பாடல் மாலயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பணிமொழியே என்று நிறைய அடுத்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மாலயன், காலையும், வேலை, பாலை.

மோனை: மாலயன் - மறை - வானவர், காலை - கையை - கொண்டு - கதித்த - கப்பு, வேலை - வெங்காலன் - விடும்போது - வெளிநில், பாலையும் - பாகையும் - போலும் - பணிமொழியே.