Tuesday, April 01, 2008

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே (பாடல் 86)



மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

மால் அயன் தேட - திருமாலவனும் பிரம்மனும் தேட
மறை தேட - வேதங்கள் தேட
வானவர் தேட - வானவர் தேட
நின்ற காலையும் - நிற்கும் திருப்பாதங்களையும்
சூடகக் கையையும் கொண்டு - வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு
கதித்த கப்பு வேலை - பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை)
வெங்காலன் என் மேல் விடும் போது - வெம்மையுடைய காலன் என் மேல் விடும் போது
வெளி நில் கண்டாய் - முன் வந்து நின்று அருள்வாய்

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே - பாலைப் போன்ற, தேனைப் போன்ற, பாகைப் போன்ற இனிமையான திருக்குரலை உடையவளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மாலையுமே என்று நிறைய இந்தப் பாடல் மாலயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பணிமொழியே என்று நிறைய அடுத்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மாலயன், காலையும், வேலை, பாலை.

மோனை: மாலயன் - மறை - வானவர், காலை - கையை - கொண்டு - கதித்த - கப்பு, வேலை - வெங்காலன் - விடும்போது - வெளிநில், பாலையும் - பாகையும் - போலும் - பணிமொழியே.

10 comments:

said...

படங்களெல்லாமும் அழகாக இடுகிறீர்கள். அன்னையின் அழகே அழகு!

said...

வருகைக்கு நன்றி கவிநயா. அன்னையின் அழகு பேரழகே.

said...

குமரா!
வெங்காலன்= கொடிய காலன் என வராதா??

said...

காலனின் கொடுமையே நம் மேல் வெம்மையாகக் கொளுத்துகிறது. அதனால் அவன் வெங்காலன். சரி தான் ஐயா.

said...

//மால் அயன் தேட - திருமாலவனும் பிரம்மனும் தேட//
அன்னையை மிகச்சரியாகச் சொல்லி இருக்கிறார் பட்டர்!

said...

உங்களுடைய வலைப்பூவின் இணைப்பை என்னுடயதில் சேர்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே? :)

said...

இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி கவிநயா.

said...

நன்றி ஜீவா.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'ஆயுதங்களால் உண்டாகும் அச்சம் நீங்கும்'.

said...

வேலை வெங்காலன் என் மேல் விடும் பொழுது வெளி நில் கண்டாய் என்று சொன்னதால் இந்தப் பயன் பொருத்தமானது சிவமுருகன். மிக்க நன்றி.