பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது - தகுதி இல்லாதவன் இவன் என்று எண்ணி இழிந்தவனான என்னைத் தள்ளாதே
தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய - தகாதவற்றைச் செய்த திரிபுராசுரர்களின் முப்புரங்களும் எரியும் படி மேரு மலையை வில்லாக ஏந்திய
போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் - தாமரை மலரில் பிறந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சினம் கொண்டு அறுத்த கையை உடையவனான சிவபெருமானின்
இடப்பாகம் சிறந்தவளே - இடப்பாகத்தில் நீங்காமல் நிலை பெற்றவளே.
தகாதன செய்த திரிபுராசுரர்களைக் கொன்றவனும் தகாதன பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்தவனும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் 'தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்' என்று என்னைத் தள்ளக் கூடாது. நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்.
ஈருயிர் ஓருடல் என்று உலகவழக்கில் ஒற்றுமையைக் குறிக்கச் சொல்லுவார்கள். இங்கோ ஒரே உடலில் ஒரு பக்கம் ஐயனும் ஒரு பக்கம் அம்மையுமாகக் காட்சி தருகிறார்கள். ஐயனோ தகுதியில்லாதவர்கள் என்றால் தண்டிக்காமல் விடமாட்டான். அப்படிப் பட்டவனைச் சரணடைந்தாலும் நான் செய்த குற்றங்களை மனத்தில் கொண்டு என்னைத் தண்டித்துவிடுவான் என்று அன்னையே உன்னைச் சரணடைந்தேன். ஆனால் நீயோ அவன் உடலில் ஒரு பாகத்தில் சிறப்பாக விளங்குகிறாய். நீயும் அவனைப் போலவே தகுதியில்லாதவர்களைத் தண்டித்துவிடுவாயோ? அன்னையே நீ அப்படி செய்யக் கூடாது. உன்னையன்றி மற்றோர் கதி இல்லை என்று உன்னையே அடைந்துவிட்டேன்.
***
தரியலர் என்று தகாதன செய்த திரிபுரர்களைக் குறித்தார் பட்டர். மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுர அசுரர்களுடன் போருக்குச் சென்றதனால் பொருப்பு வில் வாங்கிய என்றார் பட்டர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன் தன்னைப் படைத்தவர் திருமால்; அவனும் சிவபெருமானும் ஓருருவானவர்கள் என்பதை மறந்துவிட்டு, தனக்கும் ஐந்து தலைகள் சிவனுக்கும் ஐந்து தலைகள் - அதனால் தானும் சிவனும் ஒரே தரத்தவர் என்று தகாதன பேசினான். அதனால் சினந்த சிவபெருமான் அவன் ஐந்தாவது சிரத்தை அறுத்தார். திருமாலின் உந்தியில் பிறந்தவர் என்பதைக் குறிக்க 'போதில்' என்றார் பட்டர். சினம் கொண்டு சிரத்தை அறுத்தான் சிவன் என்பதைக் குறிக்க 'செற்ற' என்றார் பட்டர். அப்படி சினம் கொண்டு அறுத்த சிரம் சிவபெருமானின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டதைக் குறிக்க 'கையான்' என்று சொன்னார் பட்டர். இப்படி திரிபுராசுரர்களைப் போல் தகாதன செய்தும் பிரம்மனைப் போல் தகாதன பேசியும் திரிந்த என்னையும் அவர் அவர்களைத் தண்டித்தது போல் தண்டித்துவிடாதே என்கிறார் பட்டர்.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் பராபரையே என்று நிறைய இந்தப் பாடல் பரமென்று என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிறந்தவளே என்று நிறைய அடுத்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: பரமென்று, தரமன்று, புரமன்று, சிரமொன்று
மோனை: பரம் - பத்தருக்குள், தரம் - தள்ளத் - தகாது - தரியலர் - தம், புரம் - பொருப்புவில் - போதில், சிரம் - செற்ற - சிறந்தவளே.
10 comments:
//சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் 'தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்' என்று என்னைத் தள்ளக் கூடாது//
இப்போதைய என் மனநிலையை ஒத்து வந்திருக்கிற பாடல். படித்ததும் ஏதோ புரிந்தாற்போலவும், புரியாதது போலவும்... அவளருளாலே அவள் தாள் வணங்குதல் வேண்டும். நன்றிகள், குமரன்!
இதனால் தான் ஸ்ரீமாத்ரே-ன்னு ஆரம்பிக்கிறோம் குமரன். நாம் பண்ணின குற்றங்களை எல்லாம் மறந்து, மன்னித்து அருளும் தாயல்லவா அவள். கண்டிப்பாக தள்ள மாட்டாள்.....பட்டரிடமும் சொல்லுங்க..:-)
ரொம்பநாளாச்சு நான் இந்த வலைபூ பக்கம் வந்து வரும் 2 நாட்களில் படிக்கிறேன். :-)
தாயவள் தள்ள மாட்டாள் எனத் தெரிந்தும், நம் குறை நமக்குத் தெரிவதால் இப்படி ஒரு அச்சம் வருவது இயல்பே!
இப்பாடல் அதனைத் தெளிவுபடுத்துகிறது!
மிக அருமையான விளக்கம் குமரன்!
அம்மா! அடிக்காதே! எனத்தானே வேண்ட முடியும் நம்மால்!
அதையே தொடர்ந்து செய்வோம்!
[உங்கள் தயவால்!]
இதைப் படிக்கும் போதுதான் அதுகூட நினைவுக்கு வருகிறது!!
திடமான நம்பிக்கை வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னாலும் நம் குறைகள் நமக்குத் தெரியும் என்பதாலும் அவள் பெருமையும் சிறிதளவேனும் தெரியும் என்பதாலும் இந்த மனநிலை மீண்டும் மீண்டும் வருகின்றது போலும் கவிநயா. பல முறை இந்த 'புரிந்தது போலும் புரியாதது போலும்' உணர்வுகள் பக்திப்பனுவல்களைப் படிக்கும் போது தோன்றும். நீங்களும் அதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அன்னை என்பதால் உரிமையுடன் 'தள்ளத் தகாது' என்று சொல்கிறார்.
உண்மை மௌலி. என்ன தான் நாம் ஸ்ரீமாத்ரே என்று தொடங்கி அவள் நம் அன்னை என்பதை நினைவுபடுத்திக் கொண்டாலும் அடுத்ததாகவே அவள் மஹாராக்ஞி என்பதும் நினைவிற்கு வந்துவிடுகிறதே. அதனால் தான் இந்த தயக்கம் பட்டருக்கும் எனக்கும் கவிநயாவிற்கும் எஸ்.கேவிற்கும் இன்னும் பலருக்கும்.
அடிக்கடி வாங்க. நீங்களே வந்து அபிராமி அந்தாதி படிக்காம இருந்தா எப்படி? :-)
மஹாராக்ஞி - மஹாராணி
குடி-படைக்களுக்கு நல்லதே செய்யும் ராணியவள். தேசத்தின் மீது பக்தி/நம்பிக்கை மிகுந்த குடிமக்களுக்கு அரசன்/அரசி என்றும் நல்லதே செய்வார். பயங்கொள்ளலாகாது. :-)
உண்மை தான் எஸ்.கே. பேரறிவள் ஆகிய அவள் அனைத்தையும் அறிவாள்; நம் குறைகளையும் தவறுகளையும் அறிவாள் என்பதும் தெரிவதால் வரும் அச்சம் தான்.
நம்மாழ்வாரும் சொல்கிறாரே
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்சோதிக்கே
இழிந்தவன்; நல்லது ஒன்றுமில்லாதவன் - அப்படிப்பட்ட என் மேல் பாசம் வைத்த பரஞ்சுடர்சோதியை வானவர்களுக்கு ஈசன் என்று சொல்வேன்; அதுவோ அவனுக்குப் புகழ் தருவது? இல்லை குறையில்லாத நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் தலைவனாக இருப்பது பெருமையில்லை; குறை நிறைய உள்ளவன் என் மேல் பாசம் வைத்தானே அது தான் அவனுக்குப் புகழ் தருவது!!!
பயமே அங்கு தானே வருகிறது மௌலி. குடிபடைகளுக்கு நல்லது செய்வதில் தீயவர்களைத் தண்டிப்பதும் உள்ளதே. மஹாராணி என்னும் போதே நீதி தவறாதவள் என்றும் ஆகிறதே! அப்படி நீதி தவறாதவள் நான் செய்த குற்றங்களுக்காக என்னைத் தண்டித்தால்?! அதனால் தானே அச்சமே வருகிறது. :-)
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகையின் அருள் எப்போதும் கிடைக்கும்'.
பொருத்தமான பயன் சிவமுருகன். நன்றிகள்.
Post a Comment