Saturday, November 26, 2005

66: சுந்தரி எந்தை துணைவி (பாடல் 8)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

சுந்தரி - அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

Thursday, November 17, 2005

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி (பாடல் 7)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.

தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் - அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.

கமலாலயனும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்

மதியுறு வேணி மகிழ்நனும் - நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்

மாலும் - திருமாலும்

வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் - என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே

சிந்துரானன சுந்தரியே - சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.

Sunday, November 06, 2005

சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.

சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.

சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!

முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.

முறை முறையே பன்னியது - தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது

உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே

செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.