Tuesday, November 27, 2007

மின்னல் போலும் உன் திருவுருவம் (பாடல் 67)


தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே


தோத்திரம் செய்து தொழுது - உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுது

மின் போலும் நின் தோற்றம் - மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை

ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் - ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்

வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி - அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று

நாளும் - தினந்தோறும்

குடில்கள் தொறும் - வீடுகள் தோறும்

பாத்திரம் கொண்டு - பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு

பலிக்கு உழலா நிற்பர் - பிச்சைக்குத் திரிவார்கள்

பார் எங்குமே - உலகமெங்குமே

***

இந்தப் பாடலைப் படிக்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. சாபம் இடுவது போன்ற தொனி.

அருஞ்சொற்பொருள்:

வண்மை - வள்ளன்மை; வன்மை என்பதற்கும் வண்மை என்பதற்கும் உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். வன்மை என்பது வலிமை என்ற பொருள் தரும். வண்மை வள்ளல்தன்மையைக் குறிக்கும்.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தோத்திரமே என்று நிறைய இந்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாரெங்குமே என்று நிறைய அடுத்தப் பாடல் பாரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தோத்திரம், மாத்திரை, கோத்திரம், பாத்திரம்

மோனை: தோத்திரம் - தொழுது - தோற்றம், மாத்திரை - மனத்தில், கோத்திரம் - கல்வி - குலம் - குணம் - குன்றி - குடில்கள், பாத்திரம் - பலிக்கு - பார்.

Wednesday, November 21, 2007

நின் நாமங்கள் தோத்திரமே (பாடல் 66)


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே


வல்லபம் ஒன்றறியேன் - பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை.


சிறியேன் - மிகச் சிறியவன்


நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் - சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான்.


பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் - பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே


வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

***

சென்ற இடுகையில் வாரியார் சுவாமிகளின் கருத்தை வந்து சொன்னார் இராகவன். நாம் என்ன தான் புகழ்ந்தாலும் அது நம்மை வைத்துப் பார்க்கும் போது பெரிய செயல்களாக இருந்தாலும் இறைச்சக்தியின் பெருமைக்கு முன்னர் அது மிக மிக சாதாரணமானதொன்றாக இருக்கும். அதே போன்ற கருத்தினை நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார் என்று நான் இராகவனுக்குப் பதில் உரைக்கும் போது சொன்னேன். அவற்றைச் சென்ற இடுகையின் பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

இப்படி நாங்கள் பேசப்போகின்றோம் என்பது அன்றைக்கே அபிராமி பட்டருக்குத் தெரிந்துவிட்டது போலும். இந்தப் பாடலில் 'வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்' என்று அந்தக் கருத்தை அவரே சொல்லிக் கொள்கிறார். அன்னையின் பெருமைக்கு முன்னர் நாம் என்ன தான் அவளைப் போற்றிப் பாடினாலும் அவை எல்லாம் மிகச் சாதாரணமே என்பதை 'சொல் அவமாயினும்' என்பதன் மூலம் சொல்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

வல்லபம்: சாமர்த்தியம், வல்லமை

பல்லவம்: தளிர், அம்பு. இங்கே தளிர் என்னும் பொருள் பொருந்துகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வல்லபமே என்று நிறைய இந்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தோத்திரமே என்று நிறைய அடுத்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கும். இப்படி ஒரு பாட்டின் முடிவு அடுத்தப் பாட்டின் தொடக்கமாக அமைத்துத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வல்லபம், பல்லவம், வில்லவர், சொல்லவம்

மோனை: வல்லபம் - மலரடி, பல்லவம் - பற்று - பசும் - பொற் - பொருப்பு, வில்லவர் - வீற்றிருப்பாய் - வினையேன், சொல் - திரு - தோத்திரமே.

Saturday, November 17, 2007

ஆறுமுகன் மூதறிவின் மகன் (பாடல் 65)


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே


ககனமும் வானும் புவனமும் காண - பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி

விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு - கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு

தடக்கையும் - நீண்ட வலிய கைகளையும்

செம்முகனும் - சிவந்த திருமுகமும்

முந்நான்கு - பன்னிரு கரங்களும்

இருமூன்று - ஆறுமுகங்களும்

எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது - என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது

அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!


***

மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று எல்லோரும் மயங்கி இருக்கும் போதில் அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி தகனம் செய்தார் என்று கூறுகிறார். அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார். அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார். ஒரே கல்லில் மூன்று மாங்காய். அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று; யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று; அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று.

காமன் அழிந்து போகவில்லை. அவன் உடல் மட்டுமே காணாமல் போனது. அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை 'காமன் அங்கம்' தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால் மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் 'ககனம்' என்பதன் மூலம்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ககனமுமே என்று நிறைய இந்தப் பாடல் ககனமும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வல்லபமே என்று நிறைய அடுத்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கும்.

எதுகை: ககனமும், தகனம், முகனும், மகனும்

மோனை: ககனமும் - காண - காமன், தகனம் - தவப்பெருமாற்கு - தடக்கையும், முகனும் - முந்நான்கு - மூன்று - மூதறிவின், மகனும் - வல்லி - வல்லபமே.

Thursday, November 08, 2007

உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் (பாடல் 64)


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே


வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் - தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன்


உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் - இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன்


நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் - என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன்


திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே - நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

***

தாம் வணங்கும் தெய்வத்தை அன்றி மற்ற தெய்வங்களை 'வீணே பலி கவர் தெய்வங்கள்' என்று சொல்வது ஒவ்வொரு பக்தரின் இயற்கை. 'சர்வ தர்மான் பரித்யஜ்ய' என்று கீதையில் கண்ணன் சொல்லுவதையே இங்கு அபிராமி பட்டர் சொல்கிறார் என்று என் ஆசிரியர் ஒருவர் சொல்வார். திருப்பாவையிலும் 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்று ஆண்டாள் சொல்வதும் இதுவே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வீணருக்கே என்று நிறைய இந்தப் பாடல் வீணே என்று தொடங்கியது. இந்தப் பாடல் ககனமுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ககனமும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வீணே, பூணேன், பேணேன், காணேன்

மோனை: வீணே - மிக்க, பூணேன் - பூண்டுகொண்டேன் - புகழ்ச்சி, பேணேன் - பொழுதும் - ப்ரகாசம், காணேன் - ககனமுமே.

Sunday, November 04, 2007

தேறும்படி சில ஏதுகள் காட்டுவாள் (பாடல் 63)


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் - சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை

சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் - அப்படி அவள் காட்டிய வழிகளில் ஆறு சமயங்கள் முதன்மையானவை. அவற்றை அருளி அவற்றின் தலைவியாய் இவள் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே - வேறு சமயம் உயர்ந்தது என்று கொண்டாடும் வீணர்கள் செய்வது

குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - மலையை ஒரு சிறு தடி கொண்டு தகர்க்க முயல்வார்களை ஒத்தது.

***

ஆறு சமயங்களாவன: சூரியனை வணங்கும் சௌரம், குமரனை வணங்கும் கௌமாரம், சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், சக்தியை வணங்கும் சாக்தம், கணபதியை வணங்கும் காணபத்யம்

***

அந்தாதித் தொடை:சென்ற பாடல் சிந்தையதே என்று நிறைய இந்தப் பாடல் தேறும்படிக்கு என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் வீணருக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் வீணே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தேறும், கூறும், ஆறும், வேறும்

மோனை: தேறும் - சில - செல்கதிக்கு, கூறும் - குன்றில் - கொட்டும் - குறிக்கும், ஆறும் - அறிந்திருந்தும், வேறும் - வீணருக்கே