Saturday, November 17, 2007

ஆறுமுகன் மூதறிவின் மகன் (பாடல் 65)


ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே


ககனமும் வானும் புவனமும் காண - பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி

விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு - கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு

தடக்கையும் - நீண்ட வலிய கைகளையும்

செம்முகனும் - சிவந்த திருமுகமும்

முந்நான்கு - பன்னிரு கரங்களும்

இருமூன்று - ஆறுமுகங்களும்

எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது - என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது

அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே - அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!


***

மன்மத லீலையை வென்றார் உண்டோ என்று எல்லோரும் மயங்கி இருக்கும் போதில் அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி தகனம் செய்தார் என்று கூறுகிறார். அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார். அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார். ஒரே கல்லில் மூன்று மாங்காய். அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று; யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று; அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று.

காமன் அழிந்து போகவில்லை. அவன் உடல் மட்டுமே காணாமல் போனது. அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை 'காமன் அங்கம்' தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால் மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் 'ககனம்' என்பதன் மூலம்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ககனமுமே என்று நிறைய இந்தப் பாடல் ககனமும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வல்லபமே என்று நிறைய அடுத்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கும்.

எதுகை: ககனமும், தகனம், முகனும், மகனும்

மோனை: ககனமும் - காண - காமன், தகனம் - தவப்பெருமாற்கு - தடக்கையும், முகனும் - முந்நான்கு - மூன்று - மூதறிவின், மகனும் - வல்லி - வல்லபமே.

15 comments:

said...

நல்ல பாடல். நல்ல விளக்கம்.

வாரியார் சொல்வார். "புழுவைத் தேய்த்த வீரனே...எறும்மை ஏய்த்த எத்தகனே" இப்பிடிப் பாராட்டுனா வெக்கம் வந்து வந்தவன் ஓடிப் போயிருவான். அப்படித்தான் நாம சாமிய "மன்மதனை எரித்தவனே" முப்புரம் தீய்த்தவனேன்னு சொல்றதெல்லாம். அவரு எல்லாத்துக்கும் மேல...அப்படீன்னு சொல்லீருக்காரு. இருந்தாலும் நாம சொல்லாம விடுறதில்லை. இது உங்க பதிவைக் கிண்டல் செய்தில்லை. தோணிச்சுன்னு சொன்னேன். அவ்ளோதான். நானும் இதெல்லாம் எழுதுறவந்தானே. :)

said...

இராகவன்.

வாரியார் சுவாமிகள் சொன்னது சரி தான். நம்மாழ்வாரும் 'நான் உன்னை தேவாதி தேவன்; உலக நாயகன் என்றெல்லாம் புகழ்கிறேனே. அதனால் உன் புகழ் மாசுபட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்' என்று சொல்வார். அதனைத் தான் வாரியார் சுவாமிகளும் சொல்லியிருக்கிறார். மன்மதனை எரித்தவன், முப்புரம் எரித்தவன் என்பதெல்லாம் இறைவனின் பெருமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை தான்; அவை எல்லாம் ஈசனுக்குப் புழுவைத் தேய்ப்பதைப் போலும் எறும்பை ஏய்ப்பது போலவும் தான்.

வேறு வகையில் பார்க்கலாம். அவனுக்கு வேண்டுமானால் மன்மதனை வெல்வது சின்ன வேலையாக இருக்கலாம். நமக்கு? வானிலும், மண்ணிலும், ககனத்திலும் என்று எங்கெல்லாம் உயிர்த்திரள்கள் இருக்கின்றன என்று இந்தியத் தத்துவங்கள் சொல்கின்றனவோ அங்கெல்லாம் இருக்கும் உயிர்த்திரள்கள் மன்மதனை வெல்வது பெரும் காரியமாகத் தானே கொண்டிருக்கின்றன. அவனை வென்றான் என்று ஈசனைப் போற்றுவது இவர்கள் பார்வையில் மலையைப் புரட்டிய செயல் தானே. அந்த வகையில் அபிராமி பட்டர் பாடினார் என்று எடுத்துக் கொள்வோம்.

நீங்களும் நானும் எழுதுவதும் இந்த வகை தானே.

நல்ல வேளை 'எழுதுறவன் தானே'ன்னு சொன்னீங்க. இப்ப எல்லாம் எழுதுறதில்லையே; அதனால 'எழுதுனவன் தானே'ன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன். :-)

said...

மன்மதனை எரித்தவர்ன்னு ஈசனை புகழ்வதாக மட்டும் இல்லை குமரன். அந்த மன்மதனுக்கு மறுவாழ்வும் (ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி) தந்த அன்னையேன்னு சொல்லற மாதிரித்தான் எனக்கு தெரியுது....

said...

உண்மை தான் மௌலி. அன்னையின் கருணையால் தானே காமன் அனங்கனாக எழுந்து நின்றான்.

said...

குமரன் 'ககனம்' என்ற சொல்லுக்கு 'வான் வெளி/ஆகாய வெளி' என்ற பொருளல்லவா நினைத்தேன்?

said...

குமரன்,

அருமையான விளக்கம் !

சங்க கால பாடல்களிலிலோ, அல்லது பழைய வேதாந்தங்களிலோ கடவுளர்களின் உறவு முறை எதும் இருக்கிறதா ?

said...

நானும் அந்தப் பொருளில் தான் சொல்லியிருக்கிறேன் ஜீவா. ககனம் என்பதற்கு பூமிக்கும் வானத்திற்கும் இடைப்பட்ட வெளி என்ற பொருள் தான் தந்திருக்கிறார்கள். அந்தரிக்ஷம் என்று வடமொழியில் சொல்லும் அதே பொருளுக்குத் தான் தமிழில ககனம் என்ற சொல்.

said...

கோவி.கண்ணன்.

பாராட்டிற்கு நன்றிகள். சங்க காலப் பாடல்களில் எங்கெல்லாம் இறைவனைப் பற்றி (எந்த உருவத்திலும்) சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தான் இப்போது ஒவ்வொன்றாக எடுத்து எழுதி வருகிறேன். முன்பே ஒரு முறை அதனையும் பேசியிருக்கிறோம். அப்படி எழுதி வரும் போது எங்காவது உறவு முறை சொல்லப்பட்டிருந்தால் அதனையும் எடுத்துச் சொல்லுகிறேன். நீங்களும் தொடர்ந்து படித்து வருவீர்கள் என்று எண்ணுகிறேன்.

கொற்றவை சிறுவன் என்றும் சிவனது மகன் என்றும் முருகனைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும், மற்ற உறவு முறைகளைப் பற்றிய குறிப்புகளும் இருப்பதாகவும் படித்திருக்கிறேன். ஆனால் தரவுகளை இனி மேல் ஒவ்வொன்றாக இடுகைகளில் தருகிறேன்.

வேத வேதாந்தங்களில் உறவு முறைகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கும் அந்த முறையில் நான் கவனித்ததில்லை என்பதால் உறுதியான பதில் தெரியவில்லை. அந்தப் பார்வையில் வேத வேதாந்தங்களை இப்போது பார்க்க நேரமும் இல்லை. சங்க இலக்கியங்களைப் பார்த்த பின்னர் இறைவன் திருவுள்ளம் அப்படி இருப்பின் வேத வேதாந்தங்களில் அந்தப் பார்வையிலும் 'சங்க இலக்கியம் - வேத வேதாந்தம்' என்ற ஒப்பீட்டு வகையிலும் ஆய்வினைச் செய்யும் ஆவல் இருக்கிறது.

said...

நல்ல பாடல், மூன்று மாங்காய்! நல்ல சொல்லாடல்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'புத்திர பாக்கியம் உண்டாகும்'.

said...

நன்றி சிவமுருகன். பாடலுக்குப் பொருத்தமான பயன்.

said...

குமரா!!
இது அழகன் முருகனைப் பற்றிய பாடல் என்பதை இப்போதறிந்து
மிக மகிழ்ந்தேன்.
நல்ல பொருள் மிக்க நன்றி

said...

மிக்க நன்றி ஐயா.

said...

எவ்வளவு அழகான பாடல்! என்ன அருமையான விளக்கம்! படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது!

said...

நன்றிகள் கவிநயா அக்கா.