Tuesday, November 27, 2007

மின்னல் போலும் உன் திருவுருவம் (பாடல் 67)


தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே


தோத்திரம் செய்து தொழுது - உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுது

மின் போலும் நின் தோற்றம் - மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை

ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் - ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்

வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி - அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று

நாளும் - தினந்தோறும்

குடில்கள் தொறும் - வீடுகள் தோறும்

பாத்திரம் கொண்டு - பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு

பலிக்கு உழலா நிற்பர் - பிச்சைக்குத் திரிவார்கள்

பார் எங்குமே - உலகமெங்குமே

***

இந்தப் பாடலைப் படிக்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. சாபம் இடுவது போன்ற தொனி.

அருஞ்சொற்பொருள்:

வண்மை - வள்ளன்மை; வன்மை என்பதற்கும் வண்மை என்பதற்கும் உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். வன்மை என்பது வலிமை என்ற பொருள் தரும். வண்மை வள்ளல்தன்மையைக் குறிக்கும்.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தோத்திரமே என்று நிறைய இந்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாரெங்குமே என்று நிறைய அடுத்தப் பாடல் பாரும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தோத்திரம், மாத்திரை, கோத்திரம், பாத்திரம்

மோனை: தோத்திரம் - தொழுது - தோற்றம், மாத்திரை - மனத்தில், கோத்திரம் - கல்வி - குலம் - குணம் - குன்றி - குடில்கள், பாத்திரம் - பலிக்கு - பார்.

4 comments:

said...

குமரா!
இப்பாடலைப் படிக்கும் போது , 'நலமிலன் நள்ளார்க்கு,நள்ளினர்க்கு நல்லன் சலமிலன் பேர் சங்கரன்.
சங்கரன்= விருப்பு வெறுப்பற்றவன் என்பது அடிபட்டுப் போகுமாப் போல்
உள்ளது.
உலகத்தாய் தன் குழந்தைகளை,மன்னித்துக்
காப்பாள்...

said...

ஆம் ஐயா. உலகத்தாய் தன் குழந்தைகளை மன்னித்துக் காப்பாள்.

நீங்கள் சொன்ன பாடலுக்கு என் மனத்தில் தோன்றும் விளக்கம்.

விரும்பாதவர்களுக்கு எந்த சிறந்த குணங்களும் இல்லாதவனாகத் தோன்றுகிறான்; விரும்புபவர்களுக்கு எல்லா சிறந்த குணங்களும் கொண்டவனாகத் தோன்றுகிறான். ஆனால் மறைவான துரோக சிந்தனை இல்லாதவன் சங்கரன்.

'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் வித்தகன்' என்று நம்மாழ்வாரும் இதே போல் சொல்லியிருக்கிறார்.

said...

Intha paadalai parayanam seithaal pagai aliyum

said...

நன்றி திரு.கன்பூசியஸ்.