Wednesday, November 21, 2007

நின் நாமங்கள் தோத்திரமே (பாடல் 66)


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே


வல்லபம் ஒன்றறியேன் - பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை.


சிறியேன் - மிகச் சிறியவன்


நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் - சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான்.


பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் - பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே


வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே - தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

***

சென்ற இடுகையில் வாரியார் சுவாமிகளின் கருத்தை வந்து சொன்னார் இராகவன். நாம் என்ன தான் புகழ்ந்தாலும் அது நம்மை வைத்துப் பார்க்கும் போது பெரிய செயல்களாக இருந்தாலும் இறைச்சக்தியின் பெருமைக்கு முன்னர் அது மிக மிக சாதாரணமானதொன்றாக இருக்கும். அதே போன்ற கருத்தினை நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார் என்று நான் இராகவனுக்குப் பதில் உரைக்கும் போது சொன்னேன். அவற்றைச் சென்ற இடுகையின் பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

இப்படி நாங்கள் பேசப்போகின்றோம் என்பது அன்றைக்கே அபிராமி பட்டருக்குத் தெரிந்துவிட்டது போலும். இந்தப் பாடலில் 'வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்' என்று அந்தக் கருத்தை அவரே சொல்லிக் கொள்கிறார். அன்னையின் பெருமைக்கு முன்னர் நாம் என்ன தான் அவளைப் போற்றிப் பாடினாலும் அவை எல்லாம் மிகச் சாதாரணமே என்பதை 'சொல் அவமாயினும்' என்பதன் மூலம் சொல்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

வல்லபம்: சாமர்த்தியம், வல்லமை

பல்லவம்: தளிர், அம்பு. இங்கே தளிர் என்னும் பொருள் பொருந்துகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வல்லபமே என்று நிறைய இந்தப் பாடல் வல்லபம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தோத்திரமே என்று நிறைய அடுத்தப் பாடல் தோத்திரம் என்று தொடங்கும். இப்படி ஒரு பாட்டின் முடிவு அடுத்தப் பாட்டின் தொடக்கமாக அமைத்துத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வல்லபம், பல்லவம், வில்லவர், சொல்லவம்

மோனை: வல்லபம் - மலரடி, பல்லவம் - பற்று - பசும் - பொற் - பொருப்பு, வில்லவர் - வீற்றிருப்பாய் - வினையேன், சொல் - திரு - தோத்திரமே.

6 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'கவி பாடும் ஆற்றல் பெறலாம்'.

said...

மூகம் கரோதி வாசாலம் - ஊமையனை பெரும்பேச்சாளனாகச் செய்வாய் என்ற வடமொழி சுலோகம் தான் நினைவிற்கு வருகிறது சிவமுருகன். சொல் அவமாயினும் என்று சொல்லும் இந்தப் பாடலின் பயன் 'கவி பாடும் திறன் பெறலாம்'. நல்லது. நன்றி.

said...

குமரா!
சொல்லவமாயினும், அது அன்புடன் இருந்தால் அன்னை ஏற்றுக் கொள்வாள், பித்தாவை ஏற்றவர் துணைவியல்லவா??

said...

உண்மை தான் ஐயா.

said...

அற்புதமான கருத்துள்ள பாடல். கண்ணீர் துளிர்க்க வைத்தது. மழலை என்ன சொன்னாலும் நமக்குப் புளகிதம் தருவதில்லையா? அதே போலத்தான். அத்துடன், அன்னை அவளின் பெருமைகளின் எல்லை நமக்குத் தெரியாததால், நமக்கு தெரிந்தவைகளை வைத்து மட்டுமே நம்மால் அவளைப் போற்ற முடிகிறது. அது அவளுக்குத் தெரியாதா, என்ன :)

said...

உண்மை தான் கவிநயா அக்கா. நன்கு சொன்னீர்கள்.