Saturday, November 26, 2005

66: சுந்தரி எந்தை துணைவி (பாடல் 8)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

சுந்தரி - அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

15 comments:

said...

Dear Kumaran
Nanparin valaipathivay padithen(then) Ithil enakku ooru santhegam.Anpudan karuthukku pathil urai tharungal. Abhiramiyay neeli (karuppu) nirathaval enkirar Bhatter. adutha variyel sikappu nirathaval endrum solkirar.idu muranpadaga ullathu pol thondrm.Vishnuvin thagai enpathal karuppu niram Porunthum. Melum intha pathigathil sivaniyum nanmuganayum kurupittullar karuppu nirathin mulam vishnuvin amsamum Abhiramyedam irukkirathu enpathy cootikatukirar.ini siavappu nirathukku varuvom.Sinthura vannathinal makitan thalaimel anthari. makitan than pertra varathinal avanathu udalilurunthu sottum ovvoru thuli rathamum oru arkkanaga marum. Athanal ambigai avanathu udalilurunthu vizhum uthirathy mannil vizhamal kudithu athanal udambu muzhuvathum sithurathy pondra ratha niramakiya Sivappu nirathay kondal endrum porul kollala nanbare Malar PATHAGALKU nandri TRC

said...

அன்புள்ள TRC சார். சிவபெருமானும் பிரம்மனும் இந்தப் பாட்டில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளார்கள். அபிராமி நீல நிறம் கொண்டவள் என்பதன் மூலம் விஷ்ணுவும் கூறப்பட்டுள்ளார் என்பது நல்ல விளக்கம்.

மகிடன் தலைமேல் அந்தரி என்பதையும் சிந்துர வண்ணத்தினாள் என்பதையும் தொடர்புறுத்தி நீங்கள் சொன்ன விளக்கமும் நன்றாய் இருக்கிறது. நன்றி.

said...

அருமையான விளக்கம் குமரன்.

இந்த அழியாத கன்னிகை என்ற பெயர் மிகச்சிறப்பு. அருணகிரி சொல்வார். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே, பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே!"

உலகத்தையெல்லாம் பெத்தவளே....இருந்தாலும் நீ கன்னியென்றுதான் மறைகள் சொல்லும் ஆனந்த ரூப மயிலே.

said...

sooper blog..ivlo naal parvayil irunthu eppidi thappiyathu endru theriyavillai..nalla velai ippothavadhu kidaithathe!

said...

sooper blog..ivlo naal parvayil irunthu eppidi thappiyathu endru theriyavillai..nalla velai ippothavadhu kidaithathe!

said...

முத்துகுமார். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவுகளையும் பார்த்தேன். நன்றாக இருக்கின்றன. அபிராமி அந்தாதிக்கு உங்கள் வலைப்பக்கத்தில் சுட்டி கொடுத்ததற்கு நன்றி. என் மற்ற வலைப்பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரன்,
நீங்க நிறைய எழுதுறீங்க. எனக்கு பக்திப்பாடல்களில் ஆர்வமோ அறிவோ கிடையாது. இருந்தாலும் என்னதான் சொல்றீங்க அப்படீன்னு பார்க்க அவ்வப்போது இங்கே வருகிறேன். :-)

உங்களின் ஆர்வமும் தொடர்ந்து இப்படி எழுதுவதும் பாராட்டுதலுக்கு உரியது.

விசயம்தான் புரியல சும்மா பாராட்டிட்டுப்போவமே :-))

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

பாராட்டுகளுக்கு நன்றி கல்வெட்டு. தொடர்ந்து வந்து படித்து எப்போதாவது ஏதாவது புரிந்தால் உங்கள் கருத்தினைக் கூறிவிட்டு செல்லுங்கள். :-)

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'சகல பாசமும் நீங்கத் துறவறம் சித்திக்கும்'

said...

நன்றி சிவமுருகன்

said...

பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்
பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு- அல்லாலிதை
செத்த உடலாக்கு
இந்த பதர்களையே நெல்லாமென
எண்ணியிருப்பேனோ
எந்தப் பொருளிலுமே உள்ளேநின்று
இயங்கி யிருப்பவளே

-பாரதி

said...

பொருத்தமான பாடல் ஜெயச்ரி. மிக்க நன்றி.