கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.
வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.
பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.
பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்
ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்
செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்
முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு
நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.
அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.
Friday, December 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
arputhamana padal. nalla vilakkam.
நன்றி அனானிமஸ்
நல்ல விளக்கம் குமரன்.
// சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும் //
இந்தச் செம்மைப் பண்பைப் பலரும் பாடியிருக்கின்றார்கள். இதைப் பலர் சிவந்த நிறம் என்ற பொருளிலேயே எடுத்துக் கொள்வதுண்டு. அது சரியாகாது. செம்மை என்பது பண்பாகும்.
இதைத்தான் அருணகிரியும்
"கையோ அயிலோ கழலும் முழுதும் செய்யோய்" என்று பாடுகின்றார். இறைவனின் செம்மைப் பண்பைக் குறிந்து அவர் சொன்னது. இங்கும் அதே பொருளில்தான் வருகின்றது. சரிதானே?
இராகவன். இரண்டு பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
miga nalla muyarchi. migundha uvappai tharugiradhu thangaladhu pani. magizchigalum,nandirigalum pala
siva
dubai
திரு குமரன்,
அற்புதமான பணி. அபிராமி அந்தாதி ஒலிப்பதிவு கோப்பினைத் தேடும் போது உங்கள் பதிவு காணக் கிடைத்தது.
அபிராமி அந்தாதிக்கு, விளக்கம் தரும் தங்கள் முயற்சி மெச்சத் தகுந்தது. அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கமளித்த பின், அனைத்து பாடல்களையும் விளக்கத்துடன் ஒரே தகவலிறக்கமாய் கொடுத்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும்.
மேலும் யுனிகோட் பயன்படுத்தி பதிவு செய்வது இன்னும் சிறப்புடையது.
உங்கள் தமிழ்ப்பணிக்கு எங்களாலும் ஏதும் உதவ முடிந்தால் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் வலைப்பதிவு ஃபயர்ஃபாக்ஸில் தலைப்புகள் நீட்சியுடன் காணப்படுகின்றன. வேறு டெம்ப்ளேட் அல்லது இதில் சில மாற்றங்கள் செய்தால் நல்லது. (இதற்கு ஜஸ்டிஃபை தான் காரணம் எனக் கருதுகிறேன். அதை
நீக்கிவிட்டால் சரியாகி விடும் என நம்புகிறேன்.)
அன்புடன்,
சதீஷ்குமார்.
மிக்க நன்றி சிவா. அடிக்கடி வந்து செல்லுங்கள். என் மற்ற வலைப்பதிவுகளையும் படித்து உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.
சதீஷ்குமார். நீங்கள் சொன்ன மாதிரி எனக்கும் எல்லாப் பதிவுகளையும் ஒரே தகவலிறக்கமாய் எடுத்து வைத்துக்கொள்ள ஆசைதான். ஆனால் எப்படி செய்வது என்று தான் தெரியவில்லை. PDF தொகுப்பாய் செய்யலாமா? எப்படி செய்வது?
இந்தப் பதிவுகளை யுனிகோட் பயன்படுத்தித் தான் செய்துள்ளேன்.
உதவி செய்ய விழைந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு உதவி நிச்சயம் தேவைப்படும்.
ஜஸ்டிபையை நீக்கிவிடுகிறேன். பின்னர் எப்படித் தெரிகிறது என்று சொல்லுங்கள்.
குமரன்,
விளக்கம் அருமை. வார இறுதியில் விபரமாய் மின்னஞ்சல் செய்கிறேன். ஆரம் என்பதற்கு ஒரு வித அணிகலன் என்றும் படித்ததாக நினைவு.
ரங்கா.
ரங்கா அண்ணா. ஆரம் என்றால் தமிழில் 'மாலை' என்று பொருள். முத்தாரம் மணியாரம் என்றால் முத்தினால் ஆன மாலை (அணிகலன்), மணியால் ஆன மாலை (அணிகலம்) என்பது பொருள். அதனால் நீங்கள் சொன்னபடி ஆரங்கள் என்றால் அணிகலன்கள் தான்.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'சர்வ வசியம் உண்டாகும்'
நன்றி சிவமுருகன்
முருத்தன மூரலும் - அன்னையின் புன்னகையை வர்ணிக்க என்ன அழகான வார்த்தைகள்!
உண்மை தான் கவிநயா.
Post a Comment