Wednesday, December 28, 2005

89: ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ (பாடல் 11)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

ஆனந்தமாய் - எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்

என் அறிவாய் - உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்

நிறைந்த அமுதமுமாய் - அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவுடையாள் - மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.

மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்

தவள நிறக் கானம் - சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்

தம் ஆடரங்காம் - தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட

எம்பிரான் முடிக் கண்ணியதே - என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள். அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

21 comments:

said...

நன்றாய் இருக்கிறது குமரன். திருப்பி கேள்வி கேட்க ஞானம் இல்லன்னா இப்படிதான் சொல்லி தப்பிச்சிக்கணும். :-)

said...

குமரன்,
வழக்கம் போல் அருமை. உங்கள் புண்ணியத்தில்
-
என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருக்கிறாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை
-

நேரம் கிடைத்தால் ramanathan.blogATgmailDOTcom உக்கு ஒரு மயில் தட்டிவிடுங்கள்.

நன்றி

said...

இந்த பதிகத்தில் அம்பிகையின் மலர்பாதங்கள் இறைவன் தலைமேல் இருப்பது சொல்லப்பட்டு இருகிறது. இது தவறா? இல்லை இது போல ஜயதேவரும் கீத கோவிந்தத்தில் கண்ணனின் மீது ராதையின் கால்கள் படுவதாக எழுதி விட்டு பிற்கு அடித்துவிட்டார். பின்னர் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து பார்த்தால் கண்ண்னே வந்து அதே வரிகளை எழுதி விட்டு அது சரியானதே அது தான் தனக்கு பிடித்தது என்று காண்பித்தார். அதுபோல்தான் இதுவும். அன்பன் தி ரா ச

said...

நன்றி சிவா. கேள்வி கேட்க ஞானம் இருக்கணும்ன்னு அவசியம் இல்லை சிவா. கேள்வி மட்டும் இருந்தால் போதும். நல்லா கேளுங்க. :-)

said...

நன்றி இராமநாதன். நேரம் கிடைத்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். மறுமொழி அனுப்புங்கள்.

said...

தி.ரா.ச. நீங்கள் சொல்வது மெத்தச் சரி. நன்றிகள்.

said...

பதிலும் அனுப்பியாச்சு.

said...

குமரன்,

'வான் அந்தமான வடிவுடையாள்' என்பதற்கு எனக்குத் புரிந்தது இது. வானுக்கு எல்லை இல்லை - வான் அந்தமான என்றால் அந்த வானத்தையே அந்தமாகக் கொண்ட - அதாவது எல்லை எல்லாத அழகுடையவள், என்று அர்த்தம் வருகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ரங்கா

said...

நல்ல விளக்கம் ரங்கா அண்ணா. வானமே அவளின் அழகுக்கு எல்லை என்ற விளக்கம் நன்று.

said...

நல்ல விளக்கம். இதெல்லாம் பெண்மைக்கும் உயர்வு கொடுக்க வேண்டிச் செய்தவை.

"பணியா என வள்ளி பதம் பணியும்" - அநுபூதி

மேலும் கணவன் மனைவி என்று வந்துவிட்டால், தலை காலில் படுகின்றது. கை மூக்கில் படுகின்றது என்றெல்லாம் இங்கிதங்களை பல சமயங்களில் பார்க்க முடியாது.

இந்தப் பாட்டையே பாருங்களேன் ஆனந்தம் என்று தொடங்குகின்றது. பிறகு ஆடரங்கம் என்று வருக்கின்றது. ஆனந்தத் தாண்டவத்தில் இதெல்லாம் பார்க்க முடியுமா?

said...

நன்றி இராகவன்

said...

அன்பின் குமரன்,

எப்படி அய்யா முடிகிறது உம்மால்? ஆன்மீகத்தில் ஊன்றித் திளைக்கும் என் அன்பு இளவலே... வாழ்க நீ எம்மான்!

said...

நன்றி மூர்த்தி அண்ணா...

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இல்வாழ்க்கையில் இன்பம் பெறலாம்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

அன்பு குமரன்,
//எம்பிரான் முடிக் கண்ணியதே//
முடிக்கு அண்ணியதே என வரும்.
எம்பிரானின் முடிக்கற்றையுடன் அருகில் அம்மையும் ஆடுவாள் எனக் கொள்ளலாமா?

said...

குமரன்,

இந்த பாடலைப் படிக்கும்போது சௌந்தர்யலகரியில் இரு ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன. பல இடங்களில் அபிராமி அந்தாதியிலும் ஸௌந்தர்யலகரியிலும் ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. அபிராமி அந்தாதிக்கு பொருள் சொல்லும்போது பல இடங்களில் சௌந்தர்யலகரி யிலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது and vice versa ....
84 ஆவது ஸ்லோகம்

அம்மா !! உன்னுடய எந்தப் பாதங்களை நான்மறைகளும் உபனிஷத்துக்களும் தங்கள் தலையில் தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களுக்கு சிவபெருமான் தலையில் உள்ள கங்கை நீரே அபிஷேக நீராகட்டும்.(தேவியுடைய ஊடலைத் தணிக்க சிவபெருமான் அவள் பாதத்தில் வணங்கும்போது அவர் சடையில் உள்ள கங்கை நீர் பெருகி பாதங்களுக்கு அபிஷேக நீர் ஆகிறது)



85 ஆவது ஸ்லோகம்

தாயே!! அடியவர்களின் கண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவையும் , ஒளி பொருந்தியவையும், செம்பஞ்சுக்குழம்பு உலராததாகவும் உள்ள உன் பாத கமலங்களை வணங்குகிறேன். அந்தப் பாதங்களால் உதைக்கப்படும் பேறு பெற்ற அசோக மரத்தின்மீது பரமசிவன் மிகுந்த பொறாமைப்படுகிறார். ( பூக்காத அசோக மரம் உத்தமப் பெண்களின் பாதம் பட்டால் பூக்கும் என்பது நம்பிக்கை). தேவியின் பாதம் பட்டு அசோக மரம் மலர்வதுபோல் தானும் மகிழ்ச்சி பொங்க பரமசிவன் விரும்புகிறார். அப்படிப்பட்ட பாத கமலங்களை என் வாக்கினால் வணங்குவது என்பெரும்பேறு

said...

சௌந்தர்ய லஹரி பாடல்களின் பொருளை இங்கு தந்ததற்கு மிக்க நன்றி ஜெயச்ரி. நான் சௌந்தர்ய லஹரியில் ஓரிரண்டு பாடல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சீக்கிரம் முழுவதும் படிக்கவேண்டும்.

நீங்கள் ஒரு தனி வலைப்பூ தொடங்கி பொருள் சொன்னால் என்ன?

said...

முடிக்கு அண்ணியது என்றும் பொருள் கொள்ளலாம் ஞானவெட்டியான் ஐயா.

said...

அன்னையின் தாள் பற்றிச் சொல்லியிருக்கும் செய்தி நன்று! ஜெயஸ்ரீ அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் பொருளும் அருமை!

said...

நன்றி கவிநயா