Saturday, December 24, 2005

86: எங்கும் என்றும் நினைப்பது உன்னை (பாடல் 10)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் - நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே

எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே - யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே

அருளே உமையே - அருள் வடிவான உமையே

இமயத்து அன்றும் பிறந்தவளே - இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே

அழியா முத்தி ஆனந்தமே - என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே

அருள் வடிவான உமையே. இமயமலைக்கரசன் மகளே. எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே. நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே. நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே.

17 comments:

said...

பின்னூட்டம் இட முடியவில்லை என்று சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி என்னார் ஐயா. அதைச் சரிசெய்துவிட்டேன். நன்றி.

said...

இறைவனை சதா நினைத்துக்கொண்டிருந்தால் மற்ற கெட்ட எண்ணங்கள் வரா?
யாரை ஏமாற்றலாம்? எங்கு போனால் பணம் கிடைக்கம் திருடலாமா? பொய்சொல்லலாமா? என்ற துர் எண்ணங்கள் வராது. அமைதி கிட்டும்
நன்றி நண்பரே.

said...

உண்மைதான் ஐயா. கெட்ட எண்ணங்களில் இருந்து விடுபட மிக நல்ல வழி நல்ல எண்ணங்களில் ஈடுபடுவது தான். மெதுவாக மெதுவாகக் கெட்ட எண்ணங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

said...

அதாவது, ஏணியில் ஏறும்பொழுது மேல் படியைப் பிடித்துக்கொண்டுதான் கீழிருக்கும் காலை விடுகிறோம். அதுபோலத் தானே?

said...

மிக நல்ல உவமை ஞானவெட்டியான் ஐயா. மேலே உள்ள படியைப் போன்றது நல்ல எண்ணங்கள். கீழிருக்கும் படியைப் போன்றவை கெட்ட எண்ணங்கள். நல்ல எண்ணங்கள் வரும் போது கெட்ட எண்ணங்களை தானே விட்டுவிடுவோம்; படிகளில் மேலே ஏறிச்செல்வது போல. நன்றி.

http://nadanagopalanayaki.blogspot.com/2005/12/87.html

said...

மிகவும் நன்றி குமரன்
அபிராமி அந்தாதி,சிவானந்தலஹரி
.....படித்து பித்துப் பிடித்துத் திரிந்த நாட்களை நினைவு கூறச் செய்கிறீர்கள்.

பயிற்சிகள்,முயற்சிகள்,தேடல்கள்,போராட்டங்கள் நிறைந்த காலக்கட்டம் அது.
1998 அப்போது எழுதிய பாடல் நினைவுக்கு வரவைத்துவிட்டீர்கள்.
இதோ இப்போது பதிவிடுகிறேன்.
நன்றி குமரன்

said...

உங்கள் பதிவுக்கு வந்து அந்தப் பாடலைப் படிக்கிறேன் அக்கா.

said...

குமரன் விளக்கத்தைப் புகழ்வதா? ஞானவெட்டியானின் அழகிய எடுத்துக்காட்டைப் புகழ்வதா? சரி. சுவைக்கச் சுவைக்கத் தருகின்றீர்கள். ருசிக்க வேண்டியதே கடமை.

மனதில் எண்ணிக் கொண்டே இருப்பது இன்றைய சூழ்நிலையில் சற்றுக் கடினம் என்பதால் இறைவனைப் பாடுவதும் புகழ்வதும் அதை எழுதுவதும் எடுத்துச் சொல்வதும் கூட சிறப்பே. சரிதானே?

said...

வெறுமனே எண்ணிக்கொண்டிருப்பது நம் மனதால் இயலாத காரியம் இராகவன். பாடுவதும், பேசுவதும், புகழ்வதும், எழுதுவதுமே வழி. இறை நினைப்பிற்கு மட்டுமல்ல; எந்த நினைப்பிற்கும் இது பொருந்தும். சரியாகச் சொன்னீர்கள்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மோட்ச சாதனம் பெறலாம்'.

said...

தேவியைத் தன் உள்ளத்தில் கண்ட ஞானிகளுக்கு பூஜைகள் தேவையில்லை. 'கருத்தினுள்ளெ தெளிநின்ற ஞானம் திகழ்கிறது'.அம்மை உள்ளத்தில் ,உயிரில், ஆன்மாவில் குடிகொண்டுவிட்டாள்.அவர்கள் இயற்கையாகச் செய்யும் செயல்களெல்லாம் தேவிக்கு செய்யும் பூசனைகள். அவர்கள் பேசும் பேச்செல்லாம் அவளுக்கு துதிகள் ஆகின்றன.


அம்மா, என் உள்ளத்திலும், உயிரிலும், ஆன்மாவிலும் நீ குடிகொண்டுவிட்டாய். ஆன்மசமர்ப்பண பாவனையால், நான் பேசும் பேச்செல்லாம் உனக்கு செய்யும் ஜபமாக ஆகட்டும், கையால் நான் செய்யும் வேலைகள் எல்லாம் உன் பூஜையில் செய்யும் முத்திரைகளாக ஆகட்டும் (சக்தி பூஜையில் முத்திரைகள் மிக முக்கியமானவை).. நான் எங்கு நடந்து சென்றாலும் அந்த நடையெல்லாம் உன் ஆலயத்தை வலம் வரும் ப்ரதக்ஷிணமாகவும், நான் உண்ணும் உணவெல்லாம் உனக்கு வேள்வியில் இடும் ஆகுதியாகட்டும் , நான் படுத்துகொள்ளும்போது அது உன்னைத் தரையில் விழுந்து வணங்குவதாகவும் ஆகட்டும். என் ஒவ்வொரு அசைவும் உனக்கு செய்யும் பூஜை முறைகளாகட்டும்.
- ஸௌந்தர்யலஹரி

said...

ஐயா ஆன்மீக பெரியவரே!
வணக்கத்துடன் சிங்.

ஊட்ல நல்லா படுத்து தூங்கிட்டேனா . நீங்க வந்து கதவ தட்டி வோட்டு கேட்டது காடுல விழல
அய்யோ என் வோட்டும் செல்ல வோட்டா போயிட்டே!
அடுத்த எலக்ஷன்ல நான் உங்களுக்கு போஸ்டர் ஒட்டரதுலேர்ந்து எல்லா வேலையும் பாக்கிறேன்
கோவம் இல்லையே!

said...

அற்புதமான விளக்கம் ஜெயச்ரி. மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் வந்து நீங்கள் சொல்லும் சௌந்தர்யலஹரி பாடல்களின் பொருளைப் படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

said...

கோபமெல்லாம் இல்லை செயகுமார். :-)

said...

மிக்க நன்றி சிவமுருகன்.

said...

சிறிது சிறிதாய் எல்லாப் பாடல்களையும் படித்து வருகிறேன். முதல் பத்துப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது! இங்கு இட்டிருக்கும் பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன!

(நீங்கள் 40-வது பாடலுக்கு இட்டிருக்கும் புவனேஸ்வரி என்னிடமும் இருக்கிறாள். பார்த்ததும் பரவசம் தரும் அன்னை!)

said...

மெதுவாகப் படித்துக் கொண்டு வாருங்கள் கவிநயா. நான் முதன்முதலில் தொடங்கிய வலைப்பதிவு/வலைப்பூ இது. எழுத வந்த நாள் முதல் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நூறு பாடல்களுக்கும் பொருள் எழுதி நிறைவு செய்வதற்குள் நீங்கள் அனைத்துப் பாடல்களையும் படித்துவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

நேரம் கிடைக்கும் போது அடியேனது மற்ற பதிவுகளையும்/வலைப்பூக்களையும் பாருங்கள்.