Thursday, December 29, 2005

93: கறை கண்டனுக்கு மூத்தவளே (பாடல் 13)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பூத்தவளே புவனம் பதினான்கையும் - பதினான்கு உலகங்களையும் பெற்றவளே

பூத்தவண்ணம் காத்தவளே - எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே

பின் கரந்தவளே - பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே - பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே

மாத்தவளே - மாபெரும் தவம் உடையவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

பதினான்கு உலகங்களையும் பெற்றவளே. எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே. பின் அவற்றை உன்னுள் மறைத்துக்கொள்பவளே. கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே.என்றைக்கும் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே. மாபெரும் தவம் உடையவளே. உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

30 comments:

said...

இந்தப் பாடலில் 'பூத்தவளே புவனம் பதினான்கையும்' என்கிறார் அபிராமி பட்டர். இதற்கு முந்தையப் பாடலிலோ 'புவி ஏழையும் பூத்தவளே' என்கிறார். புவி எழா? பதினான்கா? புவி என்பதற்கும் புவனம் என்பதற்கும் வெவ்வேறு அர்த்தங்களா? ஏழு என்னும் போது கணக்கில் கொள்ளப்படும் புவிகள் எவை? பதினான்கு என்னும் போது கணக்கில் கொள்ளப்படும் புவனங்கள் எவை? யாராவது விளக்குகிறீர்களா?

said...

குமரன்,
எளிதில் புரியும் பாடலானாலும், நீங்கள் உரையாய்ச் சொல்லும்போது இன்னும் அழகாகிறது.

அப்புறம்... கோச்சுக்காதீங்க.
//சிவபெருமானுக்கும் மூத்தவளே//
//முகுந்தனுக்கும் இளையவளே//

சிவனை பெருமாளுக்கு முன்னாடி பச்சான்னு பட்டர் சொல்லிட்டாரே. :)))

said...

இராமநாதன். நான் இந்த விளையாட்டுக்கு வரலையப்பா. அபிராமி பட்டர் என்ன சொல்ல வர்றார்ன்னு பெரியவங்க யாராவது விளக்கமா சொல்லுவாங்க. அப்பக் கேட்டுக்கலாம்.

said...

குமரன்: முகுந்தனை இளையவன் என்று சொல்லும்போது திருமாலின் பல அவதாரங்களில் ஒன்றான கன்னனின் குழந்தைப்பருவத்தை கூறிப்பிட்டு, அந்த மழலை மனத்தை கொண்டவளாக சொல்கிறார். அதேபோல சிவனுக்கும் மூத்தவளே என்கிறபோது அடியும் முடியும் காண முடியாதவனும் பிரம்மத்தின் முழுப்பொருளையும் உணர்ந்ததால் அறிவினால் ஏற்பட்ட முதிர்ச்சியை கொண்டவனாகவும் சொல்வதாக நான் பயின்றபோது விளக்கம் கேட்டிருக்கிறேன். அதேபோல புவனங்கள் ஏழு என்பது கோளங்களையும் 14 என்னும் போது அப்போது தெரிந்திருந்த துணை கோளங்களையும் உள்ளடக்கி சொல்வதாக அறிந்தேன்.

said...

இதிலென்ன குழப்பம். அபிராமி பட்டரே தெளிவாகச் சொல்லி விட்ட பிறகும்.

முன்னைப் பழமைக்கும் பழையவன் சிவன். பின்னைப் புதுமைக்கும் புதியவன் சிவன் என்ற பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்.

சிவனைத்தான் மூத்தவன் என்று ஒப்புக் கொண்டிருக்கின்றார் அபிராமி பட்டர். சக்தி வேறு சிவம் வேறு என்று பொருள் கொள்ள முடியுமா?

சிவத்தை விட மூத்தது சிவமாகத்தானே இருக்க முடியும். அதுதானே சிவசக்தி. அதுதான் கறைகண்டனுக்கு மூத்தவளே என்று நினைக்கின்றேன்.

முகுந்தனுக்கும் இளையவள் - அனைத்திற்கும் மூத்தவள் என்றால் கிளவியா? இல்லவேயில்லை. அவள் என்னதான் மூத்தவளாக இருந்தாலும் இளமைக்கு இளையவளே. இதைத்தானே அருணகிரியும் அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே என்று கூறியிருக்கின்றார்.

ஆனால் அந்த புவி ஏழும்....எனக்குத் தெரியவில்லை.

said...

குமரன்,

அருமையான விளக்கம். பதத்திற்கு பதம் விளக்கம் அளிக்கும் உங்கள் பாணி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது - சிறு வயதில் 'கோனார் தமிழுரை' படித்த ஞாபகம் வருகிறது. தொடர்ந்து இதே போல் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

'பின் கரந்தவளே' என்பதற்கு இன்னுமொரு அர்த்தமும் வருகிறது. 'கரந்து' என்பதற்கு 'சக்தியாக மறைந்திருத்தல்' என்ற பொருளும் உண்டு. அன்னை பதிநான்கு உலகைப் படைத்து, காத்து வந்தாலும், அதன் சக்தியாக மறைந்து இருப்பதை பட்டர் எடுத்துக் காட்டுகிறார் இங்கு. மற்ற (மேல்) உலகங்களை நம் (அகக்)கண்களிலிருந்து மறைத்து இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

ரங்கா.
பி.கு. சிறு வயதில் கேட்ட கதைகளில் பூலோகங்கள் மொத்தம் ஏழு என்றும், வான் லோகங்களைச் சேர்த்தால் ஈரேழு (பதிநான்கு) என்றும் கேட்டு இருக்கிறேன் (ஏழு மலை, ஏழு கடல் தாண்டி என்று சொல்லும் போதெல்லாம் பூவுலகைக் குறிக்கும் என்று என் அத்தைப் பாட்டி கூறியிருக்கிறார்).

said...

தேன் துளி. விளக்கத்திற்கு நன்றி. கண்ணனுக்கு இளையவள் என்பதையும் சிவனுக்கு மூத்தவள் என்பதையும் a > b; b > c அதனால் a > c சூத்திரத்துக்குள் அடக்கலாமா தெரியவில்லை.

//அதேபோல புவனங்கள் ஏழு என்பது கோளங்களையும் 14 என்னும் போது அப்போது தெரிந்திருந்த துணை கோளங்களையும் உள்ளடக்கி சொல்வதாக அறிந்தேன்.
//

இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா?
கோளங்கள், துணைகோளங்கள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?

said...

இராகவன், உங்களுக்குத் தெளிந்துவிட்டது போல இருக்கிறது. எனக்கு இன்னும் குழப்பமாய்த் தான் இருக்கிறது.

முன்னைப் பழமைக்கும் பழையவன் சிவன் மட்டும் தானா? மாலவன் இல்லையா? வேதம் வேறு விதமாகக் கூறுவதாய்ப் படித்திருக்கிறேனே? அதனை இங்கே கூறினால் தேவையில்லாத சமயச் சண்டை தான் வரும்.

சிவனைத் தான் மூத்தவன் என்று எங்கே அபிராமி பட்டர் ஒத்துக்கொண்டுள்ளார்? மேலே சொன்ன சூத்திரத்தின் படி சக்தி > சிவன்; முகுந்தன் > சக்தி; அதனால் முகுந்தன் > சிவன் என்று தானே ஆகிறது?

அம்பிகையோ விடையேறும் பெருமானோ மாதவனோ யாவரும் ஓருருவில் ஓருருவாய் இருப்பவர்; ஒன்றே பல உருவாய் நிற்பவர் என்று கொண்டால் எல்லாரையும் விட மூத்தவரும் அந்த தனிப்பொருளே; எல்லாரையும் விட இளையவரும் அந்த தனிப்பொருளே என்று கூறலாம். ஆனால் இங்கு அபிராமி பட்டர் அவர்கள் மூவரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவர்களில் முதன்மை, இளமை பேசுகிறாரே? அதனால் தான் குழப்பம்.

said...

ரங்கா அண்ணா. உங்கள் விருப்பம் போல் தொடர்ந்து இந்த மாதிரி பதத்திற்கு பதம் பொருள் கூறுவதைத் தொடர்கிறேன். கரந்து என்பதற்கு 'சக்தியாக மறைந்து இருத்தல்' என்னும் பொருளும் மிகப் பொருத்தம்.

உங்கள் அத்தைப் பாட்டி சொன்னதை இன்னும் கொஞ்சம் விளக்கமாய்க் கூறமுடியுமா?

said...

//சிவனைத் தான் மூத்தவன் என்று எங்கே அபிராமி பட்டர் ஒத்துக்கொண்டுள்ளார்? மேலே சொன்ன சூத்திரத்தின் படி சக்தி > சிவன்; முகுந்தன் > சக்தி; அதனால் முகுந்தன் > சிவன் என்று தானே ஆகிறது?
//
//அபிராமி பட்டர் அவர்கள் மூவரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவர்களில் முதன்மை, இளமை பேசுகிறாரே? அதனால் தான் குழப்பம்.
//
இதே குழப்பம் தான் எனக்கும் இராகவன். விளக்க முடியுமா?

குமரன்,
//மாலவன் இல்லையா? வேதம் வேறு விதமாகக் கூறுவதாய்ப் படித்திருக்கிறேனே? அதனை இங்கே கூறினால் தேவையில்லாத சமயச் சண்டை தான் வரும்.
//
அதையும் விளக்குங்களேன். ஸ்ரீருத்ரம் ஒன்றை சொல்கிறது. புருஷ சுக்தம் போன்ற ஐந்து சுக்தங்கள் வேறொன்றை. சண்டையெல்லாம் யாரும் போடப்போவதில்லை. :) அத்வைதம் பாராட்டும் நமக்கு எல்லாம் ஒரே பரம்பொருள் என்று தெரிந்தாலும், ஒரு வித curiosity தான். சுவையாய் இருக்குமென்று நினைக்கிறேன்.

நன்றி

said...

சரி. இராமநாதன் கேட்பதால் நான் படித்ததைச் சொல்கிறேன். சண்டைக்கு வராதீர்கள். இது ஸ்ரீவைஷ்ணவர்களின் கருத்து. யாராவது ஸ்ரீவைஷ்ணவர்கள் படிக்க நேர்ந்து இன்னும் சந்தேகம் இருந்தால் தங்கள் வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இங்கு சொன்னதற்கு மாறாகச் சொன்னால் எனக்கும் வந்து சொல்லுங்கள்.

ஒன்று செய்கிறேன். அதனைத் தனிப் பதிவாகவே கூடலில் நாளை போட்டுவிடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?

said...

//இராமநாதன் கேட்பதால் நான் படித்ததைச் சொல்கிறேன். சண்டைக்கு வராதீர்கள்//
நன்றி குமரன்,
மீண்டும் சொல்கிறேன். சண்டை போடுவோருக்கு இங்கே வேலையேயில்லை.

மஹாப்பெரியவா சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்துமதம் polytheistic என்பதற்கு அவரின் பதில். ஒரே கரண்ட் தன் இருக்கிறது. ஆனால் அது பிரிட்ஜ், ஏஸி, விளக்கு என்று பல்வேறு சாதனங்களுக்கு power source ஆக இருக்கிறது. அது போலவே சிவனுக்கு இந்தெந்த வேலை, பெருமாளுக்கு இந்தெந்த வேலை என்று பகுத்தாலும், சோர்ஸ் ஒன்றே. அது தான் பரப்பிரம்மம். அதில் ஒரு சந்தேகமுமில்லை இந்துமதத்தில்.

இல்லையா? முன்பே சொன்னது மாதிரி ஒரு curiosityக்காகவே சிவனா விஷ்ணுவா என்ற கேள்வி. வாலிவதம் சரியா தவறா என்பது போன்றது இது. நம் பொழுதுபோக்கிற்காகவேயன்றி வேறெதையும் நிருபிக்க பயன்படப்போவதில்லை.

மீண்டும் நன்றி.

said...

//மஹாப்பெரியவா சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்துமதம் பொல்ய்தெஇச்டிc என்பதற்கு அவரின் பதில். ஒரே கரண்ட் தன் இருக்கிறது. ஆனால் அது பிரிட்ஜ், ஏஸி, விளக்கு என்று பல்வேறு சாதனங்களுக்கு பொநெர் சொஉர்cஎ ஆக இருக்கிறது. அது போலவே சிவனுக்கு இந்தெந்த வேலை, பெருமாளுக்கு இந்தெந்த வேலை என்று பகுத்தாலும், சோர்ஸ் ஒன்றே. அது தான் பரப்பிரம்மம். அதில் ஒரு சந்தேகமுமில்லை இந்துமதத்தில்.
//

இராமநாதன். நீங்கள் சொல்வது அத்வைதத்திலும் சாதாராண இந்துக்களிடமும் (Popular Hinduism) இருக்கும் கருத்து. ஆனால் ஆறு சமயங்கள் எனச் சொல்லப்படுவதிலும் சிந்தாந்தங்களிலும் வெவ்வேறு கருத்துகள் உண்டு. Only initialized will get to know those opinions.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இராமநாதன். விவகாரம் வேண்டாம் என்பதால் தனிப் பதிவு போடப்போவதில்லை. தனி மின்னஞ்சலில் நான் படித்ததை அனுப்புகிறேன்.

said...

http://gragavan.blogspot.com/2005/12/blog-post_30.html

குமரன், பின்னூட்டம் மிகவும் நீளமாக ஒரு தனிப்பதிவே வந்து விட்டது. படித்துப் பாருங்களேன்.

said...

சரி குமரன்,
மின்னஞ்சலில் அனுப்புவதே உத்தமம் என்று நானும் இப்போது நினைக்கிறேன்.
நானும் என் முந்தைய பின்னூட்டத்தை சில காரணங்களுக்காக அழித்துவிட்டேன்.

நன்றி

said...

கண்டேன் சீதையை ப் போன்று நான் தங்களின் பதிப்புக்களை ருசித்துக்கொன்டுள்ளேன்.தொடர்ந்து விமர்சிப்பேன்.நான் அபிராமி பட்டர் அவதரித்த திருக்கடையூர் அருகே உள்ளத் தில்லையாடியைச் சேர்ந்தவன் .எனவே பெரும் மகிழ்ச்சிக்கொண்டேன்.தில்லையாடி,திருக்கடையூர் கோவில்கள் ஒரே
நேரத்தில் கட்டப்பட்டவை.அப்போது சிவன் நடத்திய திருவிளையாடல்களை எனது வலைபூவினிலே தந்துள்ளேன்.வாழ்துக்கள்!

said...

//கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!//

இங்கே "மூத்தவள்" எனும் சொல் தலைவியைக் குறிப்பதாம்.

கறைகண்டனுக்கு மூத்தவளே = கறையுண்ட கண்டத்தை உடைய சிவனுககுத் தலைவியாம்(மனைவி) அம்மையே எனப் பொருள் வரும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இராமநாதன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

said...

மிக்க நன்றி நடேசன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். பின்னர் படிப்பதற்காகக் குறித்துவைத்துள்ளேன். விரைவில் படிக்கிறேன்.

said...

படிக்கிறேன் இராகவன். தனிப்பதிவாய் உங்கள் விளக்கத்தைப் போட்டதற்கு நன்றி.

said...

குமரன்: இப்போது 9 கோளங்கள்(planets)இருப்பதுபோல ஆரம்பத்தில் 7 தான் இருப்பதாக நினைத்தனர். அவையே கோளங்கள். கோளங்கலுக்கு 1 முதல் 16 வரை சந்திரன்கள் உண்டு. ஜூபிட்டருக்கு மிக அதிகம். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சந்திரன் என்றும் மற்றவை உபகோளங்கள் என்ரும் நினத்ததாக் எங்கள் தமிழாசிரியர் விளக்கினார்.அதிலும் இப்போதுபோல பல கண்டுபிடிக்கவில்லை. எனவே 7 உப்கோள்கள் என்று சொன்னதாகவும் அதுவே புவன் 14 என்பதை குறிக்கும் என்றும் சொன்னார்.இது ஒருவரின் கருத்தே தவிர உண்மை விளக்கம் எது என்றூ அறீயேன்.

said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி தேன் துளி.

said...

குமரன்

என் அத்தைப் பாட்டி சொன்ன வரியைத் தந்தேன். மற்றபடி விளக்கம் ஏதும் தெரியாது. :-(

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வைராக்கிய நிலை எய்யலாம்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

மூத்தவள் என்றால் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் முதன்மையானவள் என்றும் பொருள் கொள்ளலாம்தானே?

said...

கட்டாயம் அப்படி பொருள் கொள்ளலாம் கவிநயா.