Tuesday, April 22, 2008

சிறக்கும் கமலத் திருவே (பாடல் 89)


சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

சிறக்கும் கமலத் திருவே
- தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளே! சிறப்பான செல்வ வடிவானவளே!

நின் சேவடி சென்னி வைக்க - உன் சிறந்த திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் - உயர்ந்த வானுலகத்தை அருளும் தரும் உன் துணைவராம் இறைவரும் நீயும்

துரியம் அற்ற உறக்கம் தர வந்து - தன்னைத் தான் அறியும் நான்காவது நிலையையும் தாண்டிய என்றும் நிலைத்த உறக்கமாம் சாக்காட்டைத் தர வந்து

உடம்போடு உயிர் உறவு அற்று - உடம்போடு உயிர் உறவு இல்லாமல் பிரிந்து

அறிவு மறக்கும் பொழுது - அறிவு மயக்கம் ஏற்படும் போது

என் முன்னே வரல் வேண்டும் - என் முன்னே வர வேண்டும்

வருந்தியுமே - வருந்தி அழைக்கின்றேன்.

தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் உயர்ந்த செல்வ வடிவானவளே! அபிராமி அன்னையே! உயர்ந்த வானுலகத்தை அருள்பவர்கள் நீயும் உன் துணைவரான இறைவரும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற இயற்கையான மூன்று நிலைகளிலும் வேறுபட்ட நான்காவது நிலையான 'தன்னைத் தான் அறிதல்' என்னும் ஞான நிலையாம் துரியமும் கடந்த நிலை என்றும் நீங்காத் துயில் கொண்டு நீயும் இறைவரும் அருள வானுலகம் அடைதல். அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சி இல்லை. என் உடம்போது உயிர் உறவு அறும் போது, மதி மயக்கம் ஏற்படும் போது உன்னை நினைப்பது எளிதில்லை. அதனால் இப்போதே வருந்தி வேண்டுகிறேன். அந்த நிலையில் நீயும் உன் துணைவரும் உங்கள் திருவடிகளை என் சென்னி மேல் வைக்க என் முன்னே வரல் வேண்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சிறந்தவளே என்று நிறைய இந்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வருந்தியுமே என்று நிறைய அடுத்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: சிறக்கும், துறக்கம், உறக்கம், மறக்கும்

மோனை: சிறக்கும் - சேவடி - சென்னி, துறக்கம் - தரும் - துணைவரும் - துரியம், உறக்கம் - உடம்பொடு - உயிர் - உறவு, மறக்கும் - முன்னே.

8 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'யோகசித்தி பெறலாம்'.

said...

//உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது//

இப்போதே அறிவு பலவிதத்திலும் மயங்கித்தான் கிடக்கிறது. அப்படியானால் உடம்போடு உயிர் உறவு அறும் காலத்தில் எப்படியோ? இப்போதும் அப்போதும் எப்போதும் அவளை நினைத்திருக்க அவள்தான் அருள் புரிய வேண்டும்.

said...

நாங்கள் ஐந்து பாடல்களுக்கு ஒரு ராகம் என்ற வரிசையில் பாடுவதுண்டு அதன்படி இது ஒரு ஐந்து வரிசையில் முதல் பாடல் இந்த வரிசை பாடல்கள் எல்லாமே மனதோடு இயைந்து தன்னை மீறிய இறைஞ்சுதலோடு அடுத்தடுத்து நினைவு படுத்துக்கொள்ளக்கூட தேவயில்லாத படி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எனக்கென்னமோ அந்த செந்தீயின் நாக்குகளின் வெப்பம் உடலில் ஏறுவது போல் கூட சில சமயம் தோன்று. சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும், அமைதிக்கும் மனம் தேடுவது அபிராமியின் அந்தாதியையும் பதிகத்தையும். மிகவும் திருப்தியாக உள்ளது தங்கள் பதவுரை. நன்றி

said...

துறக்கம் - சொல் புதிதாக அறிந்து கொண்டேன்.
பாடல் நன்றாக பொருள் சொறிந்ததாக இருந்தது.

said...

துறக்கத்தையும் துரியத்தையும் பேசியதால் 'யோகசித்தி பெறலாம்' என்ற பாராயணப்பயன் பொருத்தம் சிவமுருகன். நன்றி.

said...

ஆமாம் கவிநயா அக்கா. அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் என்றாற்போலத் தான். நன்றிகள்.

said...

மிக்க நன்றி கிருத்திகா. ஸ்தோத்ரமாலாவில் மட்டுமே உங்களைப் பார்க்க முடிகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கும் வந்திருக்கிறீர்கள். நன்றி.

said...

நன்றி ஜீவா.