Monday, December 31, 2007

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் (பாடல் 71)


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி - இவளுடைய அழகிற்கு ஒப்புமையாக யாரும் எதுவும் இல்லாதபடி பெரும் பேரழகு கொண்டிருக்கும் தலைவி

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - அரிய திருமறைகள் இவளது திருப்பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் போற்றுவதால் அவற்றின் புகழ்ச்சியில் பழகிப் பழகி சிவந்த தாமரைப்பாதங்கள் உடையவள்

பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க - குளிர்ந்த நிலவின் குழந்தையை (இளம்பிறையை) திருமுடியில் தாங்கியிருக்கும் மென்மையான பச்சை நிறத்தவளாக அன்னை இருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே - உலக வாழ்க்கையில் எதையோ இழந்து நின்றாலும் அந்த இழவை நினைந்து இரங்காமல் இருப்பாய் நெஞ்சே; அன்னையிருக்க ஒரு குறையும் உனக்கு இல்லை.

மனத்தில் ஏதேனும் குறை ஏற்படும் போது இந்தப் பாடலைப் படிக்கலாம் போலிருக்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரழகே என்று நிறைய இந்தப் பாடல் அழகுக்கு என்று தொடங்கியது. இந்தப் பாடல் என் குறையே என்று நிறைய அடுத்தப் பாடல் என் குறை தீர என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அழகுக்கு, பழகி, குழவி, இழவுற்று

மோனை: அழகுக்கு - அருமறைகள்; பழகி - பதாம்புயத்தாள் - பனிமாமதியின், குழவி - கோமளயாமளை - கொம்பிருக்க, இழவுற்று - இரங்கேல் - என்குறையே

10 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனக்குறை தீர்ந்து மகிழ்ச்சி பெருகும்'.

said...

நல்ல விளக்கம்.

பனிமாமதியின் குழவி என்ற இடத்தில் குழந்தை என்று சொல்ல வேண்டியதில்லை.. குட்டி என்றும் சொல்லலாம். நிலாக்குட்டியைச் சூடிக் கொண்டன்னு சொன்னா பொருள் வருதுல்ல.

said...

இராகவன்,

நான் சொன்ன இளம்பிறை எனும் குட்டி நிலாவிற்கும் நீங்கள் சொல்லும் நிலாக்குட்டிக்கும் நுண்ணிய வேறுபாடு இருக்கும் போலிருக்கிறது. அதனால் தான் குழவிக்கு குழந்தை என்று சொல்லாமல் குட்டி என்று பொருள் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு அந்த நுண்ணிய வேறுபாடு புரியவில்லை. நேரம் கிடைத்தால் விளக்குங்கள்.

said...

'நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே' என்று சொன்னதால் மனக்குறை தீர்ந்து மகிழ்ச்சி பெருகும் என்ற பாராயணப் பயன் பொருத்தம் சிவமுருகன். நன்றி.

said...

குமரா!
புகழ்ந்தால், நாணத்தால் முகம் சிவக்கும், தேவியின் பாதம் சிவந்ததால்
''மறைகள்'' அதிகம் புகழ்ந்துவிட்டனவோ??

said...

பாடலுக்கேற்ற படம்....ஸ்ரீ வித்யையில் சொல்லப்படும் ராஜ சியாமளா பச்சை நிறத்தவள். இப்பாடலும் மீனாக்ஷியை குறிப்பதே...

said...

ஆகா. அருமையாகச் சொன்னீர்கள் யோகன் ஐயா. அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள். மறைகள் பழகிச் சிவந்தன பத அம்புயங்கள் என்பதற்கு இது தான் பொருள் போலும்.

said...

நன்றி மௌலி. உங்கள் பதிவில் இராஜ சியாமளையைப் பற்றி படித்தது நினைவிருக்கிறது.

said...

//அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி//

ஆஹா!

//பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க //

என்ன அழகாக சொல்லியிருக்கிறார்!

//புகழ்ந்தால், நாணத்தால் முகம் சிவக்கும், தேவியின் பாதம் சிவந்ததால்
''மறைகள்'' அதிகம் புகழ்ந்துவிட்டனவோ??//

அருமை!!

said...

ஆமாம் கவிநயா அக்கா. அபிராமி பட்டரைப் போல் யோகன் ஐயாவும் நல்ல இரசிகர்.