Monday, July 28, 2008

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே (பாடல் 99)




குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை - கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள்



கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை - குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள்



வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் - வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள்



கமலத்தின் மீது அன்னமாம் - தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள்



கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை.


கடம்ப மலர்கள் அம்மைக்கும் பிடிக்கும் அறுமுகனுக்கும் பிடிக்கும். கடம்ப மலர்கள் சூடி மகிழ்கிறான் குமரன். அந்த கடம்ப வனத்திடை வசித்து மகிழ்கிறாள் அன்னை. கடம்பவனம் எங்கும் இருக்கலாம். ஆனால் பொதுவாக 'கடம்பவனம்' என்றதும் நினைவிற்கு வருவது மதுரை. மீனாட்சி திருக்கோவிலின் தல மரமும் கடம்பமே. இந்தக் கடம்பவனத்திலே வசிப்பவள் பச்சை நிறம் கொண்டவள். கிளியைக் கையில் கொண்டவள். அவளது இன்னொரு பெயர் மாதங்கி. அவள் இசையில் வல்லவள். அவளை வணங்குபவர்களுக்கு இசையை அருள்பவள். இசையின் உருவகம் குயில். இசையை அருள்வதாலும் இசையில் வல்லவள் என்பதாலும் கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் குயிலென அன்னையைக் கூறினார் போலும்.

குயிலுக்கு குரல் அழகு உண்டு. மேனி அழகு இல்லை. மயிலுக்கோ குரல் அழகு இல்லை. மேனி அழகு உண்டு. அன்னையோ குரல் அழகும் கொண்டவள்; வியக்கத்தக்க மேனி அழகும் கொண்டவள். அதனால் தான் குயிலைப் போலும் இருக்கிறாள்; மயிலைப் போலும் இருக்கிறாள் என்றார் போலும்.

ஹிம என்றால் குளிர் என்று பொருள். குளிர் மிகுதியாகக் கொண்ட மலையாதலால் ஹிமயம், ஹிமாசலம், ஹிமாலயம் என்ற பெயர்கள் அந்த மலைத்தொடருக்கு உண்டானது. அந்தக் குளிர்ந்த இமயாசலத்தில் அழகிய மயிலாக இருக்கிறாள் அன்னை.

காலையில் செங்கதிராம் உச்சி வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பராசக்தி நீலவானத்தினிலே


என்று பாடினான் ஒரு புலவன். அபிராமி பட்டர் அன்னையை 'விசும்பில் வந்துதித்த வெயில்' என்று சொன்னதை வைத்துத் தான் பாடினான் போலும் அந்தப் புலவனும். உலகங்களுக்கெல்லாம் ஒளி தரும் சோதிகளாக இருப்பவள் அன்னை. அறிவும் தெளிவும் தருபவள் அன்னை.

தாமரை மலருக்கும் அன்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆன்மிக மலர்ச்சிக்குத் தாமரையை குறியீடாகச் சொல்லுவார்கள். ஆன்மிக மலர்ச்சி அடைந்த அறிவும் தெளிவும் நிறைந்த ஆன்றோர்களை அன்னப்பறவையாகச் சொல்வார்கள். ஹம்ஸர்கள் என்றும் பரமஹம்ஸர்கள் என்றும் அவர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட பரமஹம்ஸர்களைக் குறிக்க தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவை குறியீடாக அமையும். இராமகிருஷ்ண இயக்கத்தின் குறியீடாகவும் அதனைக் காணலாம். அப்படி பரமஹம்ஸர்களின் மொத்த உருவமாக அமர்பவள் அன்னை.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பூங்குயிலே என்று நிறைய இந்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கனங்குழையே என்று நிறைய அடுத்தப் பாடல் குழையை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குயிலாய், மயிலாய், வெயிலாய், கயிலாயருக்கு

மோனை: குயிலாய் - கடம்பாடவி - கோலவியன், மயிலாய் - வந்து, வெயிலாய் - விசும்பில், கயிலாயருக்கு - கனங்குழையே.

9 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அருள் தன்மை வளரும்'

said...

உலகுக்கெல்லாம் ஒளிதரும் அன்னை, உள்ளத்தில் நின்று ஒளிர்ந்திடும் அன்னை, அவளைப் போற்றும் பாடலை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் குமரா. தாமரை மலர், மற்றும் அன்னத்தின் சிறப்பினையும் அழகாகச் சொன்னீர்கள்.

said...

மாதங்கீ தான் அன்னையின் அந்தரங்க ஆலோசகி...அம்பாளின் அனுக்க சேவகி, மந்திரிணி எல்லாம்...

பிந்துவில், கதம்பவனத்தில் அம்பாளின் சிந்தாமணிக்ருஹத்துக்கு அருகில் வசிக்கும் பெருமை பெற்றவள்.
அதனால்தான் கடைசிப் பாடலில் சிவ-சக்தி ஐக்கியம் பற்றி பேசும் முன்பாக இந்த ரூபத்தை சொல்லியிருப்பார் போல.

said...

அருட்தன்மை வளரட்டும். நன்றிகள் சிவமுருகன்.

said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி கவிநயா அக்கா.

said...

நல்ல விளக்கம் மௌலி. நன்றிகள்.

said...

ஐயா,
இந்த பாடலை படித்துவிட்டு பல நாட்கள் கழித்து ராமகிருஷ்ணா மடத்தின் சின்னத்தை பார்த்த பொழுது மிகுந்த ஒற்றுமை தென்பட்டது. தங்களுக்கும் அது போன்று தோன்றியது குறித்து மகிழ்வு எய்துகிறேன்.

"உதித்த வெயில்" - early morning sun!??.

the emblem has got a very interesting meaning.
lotus - symbolises bhakti
rising sun - gnanam
wavy waters - symbolic of karma
encircling serpent - raja yoga
swan - paramatman/God

"மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை"
மயிலை கபாலீஸ்வரர் கோயில் (தென்) கயிலை எனப்படும். "மயிலையே கயிலை ! கயிலையே மயிலை" என்று முன்னோர் மொழி. இங்கு அம்பாள் மயிலாக உருவெடுத்து பகவானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்கிறாள்.

said...

நன்றி இராதாமோகன் ஐயா.

said...

வாழ்த்துக்கள்.. நல்ல விஷயம் நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/