Friday, August 01, 2008

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்)


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி - காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே

கழையைப் பொருத திருநெடுந்தோளும் - மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும்

கருப்பு வில்லும் - திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் - கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்

வெண் நகையும் - வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும்

உழையைப் பொரு கண்ணும் - மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும்

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே - உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன.

***

அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் இது. முதல் வாசிப்பில் அன்னையை மட்டுமே அவளின் திருத்தோற்றத்தை மட்டுமே புகழ்வது போல் தோன்றினாலும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் அன்னையையும் அப்பனையும் அவர்கள் இணைந்திருக்கும் திருக்கோலத்தையும் புகழ்வது தெரிகிறது. முதல் வாசிப்போடு நிறுத்தாமல் ஆழ்ந்த நோக்கையும் தந்தருளியதற்கு அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள்.

குழை என்றால் தழை, மெல்லிய இலை என்பது முதற்பொருள். இலை தழைகளை அழகுடன் காதணியாக அணிந்து கொண்ட நாட்களில் இச்சொல் காதணிக்கும் பெயர் ஆகி தற்போது குழை என்றால் காதணியென்றே பொருள் தருகின்றது. குழையைத் தழுவும் கொன்றை மாலை என்னும் போது அழகிய மெல்லிய இலைகளையும் சேர்த்துக் கட்டிய கொன்றை மாலை என்றும் பொருள் கொள்ளலாம். குழை என்றால் காதணி என்ற பொருளைக் கொண்டால் கழுத்திலும் தோளிலும் போட்டுக் கொண்டிருக்கும் மாலை காதில் அணிந்துள்ள குழைகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கின்றது என்று பொருள் கிடைக்கிறது. அப்படி குழைகளைத் தழுவ வேண்டும் என்றால் அந்த மாலை மிகவும் நெருக்கமாகவும் நிறைய மலர்களையும் வைத்து மிகச் சிறப்பாகத் தொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அபிராமி பட்டரின் திருவுள்ளத்தில் உதிக்கும் அன்னை அப்படிப்பட்ட மாலையை அணிந்து கொண்டிருக்கிறாள்.

இப்படி முதல் பார்வையில் தோன்றிய முதல் வரி ஆழ் நோக்கில் பார்க்கும் போது வேறு ஆழ்ந்த பொருளைத் தருகிறது. தார் என்பது ஆண்டாள் மாலை என்பார்களே அது போல் இருபுறமும் இணையாமல் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மாலை. அது ஆண்களுக்கு உரியது. வட்டவடிவில் தொடுக்கப்படுவது பெண்களுக்கும் வட்டமாகத் தொடுக்காமல் கழுத்தைச் சுற்றி அணிந்து தொடை, முழங்காலைத் தொடும் படி அமைப்பது ஆண்களுக்கும் என்று இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். கண்ணனுக்கு எனத் தொடுக்கப்பட்ட 'தார்' என்னும் மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்க்கிறாள். அவளுக்கு என்று தொடுக்காததால் அது வட்ட வடிவமாக அமையவில்லை. ஆண்டாள் அன்று அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே 'ஆண்டாள் மாலை' என்று பெயர் அமைந்துவிட்டது. இங்கே அபிராமி பட்டர் மாலை என்று சொல்லாமல் தார் என்று சொல்கிறாரே என்று ஒரு நொடி தயங்கும் போது அந்தத் தாரும் கொன்றையந்தார் என்று பார்த்து 'ஆகா. இதனையா சொல்கிறார் பட்டர்' என்ற வியப்பு தோன்றிவிடுகிறது.

இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவையா? கொன்றை மலர் யாருக்குரியது? ஐயனுக்கு உரியதன்றோ? கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட தாரை அணிந்தவர் சிவபெருமான் தானே. அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி? அவன் அணிந்து இவளுடன் இணையும் போது தந்தான் போலும். இல்லையேல் இவளும் ஆண்டாளைப் போல் அவன் அணிவதற்கு முன்னால் அணிந்து கொண்டாள் போலும். இல்லையேல் அவன் அணிந்திருப்பது இவளது குழையைத் தழுவி இவள் கொங்கைகளை மணக்க வைக்கும் படி இருவரும் இணைந்திருக்கிறார்கள் போலும்.

மன்மதனுக்கு வெற்றியைத் தரும் கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்திய திருவுருவத்தை இங்கே சொன்னதால் ஐயனும் அம்மையும் இணைந்திருக்கும் திருக்கோலத்தைத் தான் பட்டர் சொல்கிறார் என்று தோன்றுகிறது. மூங்கிலை விட மென்மையான அழகிய திருத்தோள்களும் மானை வெல்லும் மருண்ட திருக்கண்களும் திருக்கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் ஐம்பாணங்களும் அடியார்களுக்கு ஆதரவு தரும் புன்னகையும் பட்டர் திருவுள்ளத்தில் எப்போதும் உதிப்பதைப் போல் அடியோங்கள் உள்ளங்களிலும் எப்போதும் உதிக்கட்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கனங்குழையே என்று நிறைய இந்தப் பாடல் குழையை என்று தொடங்கியது. இந்தப் பாடல் உதிக்கின்றவே என்று நிறைய இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் என்பதால் அபிராமி அந்தாதியின் முதல் பாடல் உதிக்கின்ற என்று தொடங்கியது. ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. அப்படி அமைக்கும் போது இறுதிப் பாடலின் இறுதிச் சொல்/எழுத்து முதல் பாடல் தொடங்கிய சொல்லாகவோ எழுத்தாகவோ அமைக்கும் போது முழுப்பனுவலும் ஒரு மாலையைப் போல் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த அபிராமி அந்தாதி பனுவல் அன்னையின் திருமேனியில் திகழ்கின்ற மாலையாகிறது.

எதுகை: குழையை, கழையை, விழைய, உழையை

மோனை: குழையை - கொன்றை - கமழ் - கொங்கை, கழையை - கருப்புவில்லும், விழைய - வேரியம் - வெண் நகை, உழையை - உதிக்கின்றவே.

17 comments:

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அம்பிகையின் திருவுருவைமனத்தில் எப்போதும் காணாலம்'.

said...

அருமை, அருமை, குமரா. அன்னையின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது. அரும்பொருளை, இருபொருளை, நயம்படச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

said...

நிறைவாக நிறைவேற்றியமைக்கு வாழ்த்துக்கள் குமரன். அன்னையின் அருள் என்றும் தங்கும்.
(முடிக்கையில் தங்களுக்கு பிடித்த கொன்றை மலர் வந்து விட்டதா, என மகிழ்ச்சி அடைந்தேன்!)

said...

மிகப் பெரிய பணியை செய்து முடித்திருக்கிறீர்கள் குமரன். வாழ்த்துக்கள்.

இப்பாடலில் சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லித்தான் முடிக்கிறார் பட்டர். அந்த ஐக்கியத்தை அர்த்தநாரீஸ்வர ரூபத்தில் கண்டார் போல...

said...

அன்னையின் பாதத்தைக் கூடலில் பற்றி,
புகல் ஒன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் புகுந்து, பின்னூட்டினேனே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள்.

said...

//அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே 'ஆண்டாள் மாலை' என்று பெயர் அமைந்துவிட்டது//

இனி ஆலயத்துக்குப் போகும் போது, அன்னைக்குக் கொன்றை மாலை தான் அடியேன் சார்த்தப் போகிறேன்! :)))

said...

//அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி?//

வாம பாகத்தை வென்றவள், வெற்றி மாலையும் சேர்த்தே அன்றோ வெல்லுவாள்? :)

மாலை மாற்றினாள் அன்னை மாலை மாற்றினாள்!
கல்யாண கோலத்தில் உள்ளவள் அபிராமி!
திருகடையூரிலே அது அறுபதாம் கல்யாணமோ, இருபதாம் கல்யாணமோ! கல்யாண கோலம் அல்லவா?

அதான் அப்பனின் கொன்றை மாலை-அன்னையின் மீதாய் மாலை மாற்றிய திருக்கோலம்!

சுபமஸ்து!
கல்யாணமஸ்து!

said...

விண்ணப்பம்:

அந்தாதித் தொடரை இந்தப் பாடலுடன் நிறைவு செய்யாமல்,
திருக்கடவூர் தலம் பற்றி சிறு குறிப்போடு,
அபிராமி அன்னையின் பாதாதி கேச வர்ணனையைக், கற்பூர நீராஞ்சனமாகக் காட்டி நிறைவு செய்யுங்கள்!
(வேண்டுமானால் சொல்லுங்கள், நீராஞ்சன வர்ணனையை அடியேன் எழுதி அனுப்புகிறேன்!)

said...

இரவிசங்கர்.

இன்னும் ஒன்றிரண்டு இடுகைகள் இடும் எண்ணம் உண்டு. நூற்பயன் ஒரு இடுகை. நீங்கள் எழுதித் தரப் போகும் திருக்கடவூரைப் பற்றிய குறிப்புடன் கூடிய பாதாதிகேச வணக்கம் அடுத்த இடுகை. எழுதித் தாருங்கள். நன்றி.

said...

மிகப்பொருத்தமானப் பயன் சிவமுருகன். தொடர்ந்து பாராயணப்பயனைச் சொல்லிவந்ததற்கு மிக்க நன்றி.

said...

எல்லாம் இறையருளும் பெரியோர் ஆசியும் தான் கவிக்கா. மிக்க நன்றி.

said...

மிக்க நன்றி ஜீவா.

said...

சரியாகச் சொன்னீர்கள் மௌலி. லலிதா சஹஸ்ரநாமாவளியில் இறுதியாக வரும் 'சிவசக்தி ஐக்ய ரூபின்யை நம:' தான் எனக்கு நினைவிற்கு வந்தது. அதே போன்று இங்கேயும் சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லி நிறைவு செய்திருக்கிறார் பட்டர்.

said...

நானும் உங்களுடன் சேர்ந்து அன்னையின் பாதங்களில் எனது ஆயிரம் கோடி வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன் இரவிசங்கர்.

said...

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கை, தங்களுக்கு சகல செலவங்களையும் தந்து அருளட்டும்.

அபிராமி திருவடிகளே சரணம்.

said...

தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா.

said...

அருமை நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/