Tuesday, August 19, 2008

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

ஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை

எங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியை

அண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளை

மாதுளம் பூ நிறத்தாளை - மாதுளம் பூ நிறம் கொண்டவளை

புவி அடங்கக் காத்தாளை - எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை

ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை - உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை.

***

அபிராமி அந்தாதிப் பனுவலின் நூற்பயன் பாடல் இது. என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஆத்தா என்றோ அம்மா என்றோ அவளை அழைப்பதில் தானே நமது எல்லா உணர்வுகளும் இணைந்து இயங்கி வருகின்றன. அந்தச் சொல்லைக் கொண்டு இந்தப் பாடல் தொடங்குகிறது. தொடர்ந்து அன்னையின் திருவுருவ தியானம் நடைபெறுகிறது. அத்துடன் அவள் மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறாள் என்பதால் 'அண்டம் எல்லாம் பூத்தாளை' என்பதன் மூலம் பிரம்ம ஸ்வரூபிணியாக இருப்பதையும் 'புவியடங்கக் காத்தாளை' என்பதன் மூலம் விஷ்ணு ரூபிணியாக இருப்பதையும் 'முக்கண்ணியை' என்பதன் மூலம் சிவஸ்வரூபிணியாக இருப்பதையும் இந்தப் பாடல் சொல்கிறது. அவை அப்படியே முன்பொரு பாடலில் 'பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று சொன்னதன் பிரதிபலிப்பு போல் இருக்கிறது.

அப்படிப்பட்ட அன்னையைத் தொழுவோர்க்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் சொல்லிவிட்டது.

***

எதுகை: ஆத்தாளை, பூத்தாளை, காத்தாளை, சேர்த்தாளை

மோனை: ஆத்தாளை - அபிராமவல்லியை - அண்டமெல்லாம், பூத்தாளை - பூ - புவியடங்க, காத்தாளை - கரும்புவில்லும், சேர்த்தாளை - தொழுவார்க்கு - தீங்கும்.

***
அன்னையின் திருப்படத்தைத் தந்துதவிய கவிநயா அக்காவிற்கு நன்றிகள்.

16 comments:

said...

இடுகையைத் திறந்ததும் அன்னையின் திருவுருவப் படத்தைக் கண்டதும் கண்கள் நிறைந்து விட்டன. என்ன்ன்ன்னோட அம்மாவாச்சே. அதான் :)) நன்றி குமரா. நீங்கள் சொன்னது போல அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தையும் தொகுத்து அளித்தது போல அமைந்தது இந்த பாடல். சிறு வயதிலிருந்தே எங்கிருந்து வந்ததென்று அறியாமலே மனனம் செய்த பாடலும் இதுவே. அன்னையின் திருவருள் பெற்று, அனைத்து சிறப்புகளும் பெற்று நீங்கள் நீடுழி வாழ்க!

said...

மொத்த அந்தாதிக்கும் முத்தான பாடல், முத்துச் சத்தான பாடல் இது! எப்போதில் இருந்து இந்தப் பாடல் என்னுடன் ஒட்டிக் கொண்டதோ தெரியாது...பல துன்ப/இன்ப சமயங்களில் எல்லாம் இந்தப் பாடல் உதட்டில் வந்து இன்பம் அளிக்கும்!

அம்மா என்று சேவித்து வணங்கிக் கொள்கிறேன்!

said...

இந்தப் பாட்டைக் கொண்டு தான் அபிராமி அம்மாவின் அலங்கார நீராஞ்சனம் செய்வதாகச் சொன்னேன் குமரன்!

said...

கவி அக்கா!
படத்துக்கு டேங்கீஸ்! உங்க வீட்டுப் படமா?

said...

மும்மூர்த்திகளின் வடிவமாகச் சொன்னது மிகவும் அருமை குமரன்!

//முக்கண்ணியை//

இங்கே முக்கண்ணி என்பது முக்கண்ணனின் துணைவி என்ற பொருளிலா? இல்லை அன்னைக்கும் முக்கண் புராணக் குறிப்பு உண்டா குமரன்?

said...

ஆமா, கண்ணா. வீட்ல நான் வணங்கும் என் அம்மாவோட படம் :))

said...

அண்ணா,

புவனேஸ்வரி அம்மன் படம் அருமை.

தீங்கை அழிப்பவள் அன்னை!

இப்பாடலே ஒரு நூற்பயன். ஒவ்வொரு பாடலையும் பாராயணம் செய்ய இங்கே சொல்ல படும் பயன் பெறலாம்.

சுகம் என்பது தான் மனிதனின் இலக்கு! தீங்கில்லாதது சுகம்!

ஒரு நீதி சுலோகம் அதில் சொல்கிறார் கவிஞர் "சோம்பேறிக்கு கல்வியில்லையாம்! கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்பு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை! ஆக மனிதனுக்கு அனைத்துவித(16) செல்வங்களும் வேண்டும், அப்பேற்பட்ட அனைத்து வித செல்வங்களையும், தரவல்லவள், "படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி" என ஐந்தொழில் புரியும் அன்னை.

அவரவர் காரியத்தை கச்சிதமாக செய்யும் தன்மை மானிடராய் பிறந்தவர்க்கு தரும் ஒரு மாபெரும் பாடம்!

அந்த அன்னையை அபிராமியை, அங்கயர்கண்ணியை, அகிலாண்டேஸ்வரியை வணங்கியோருக்கு ஒரு தீங்கில்லை! அருமையாக சொன்னீர்கள்.

நன்றி.

said...

அண்ணா,

புவனேஸ்வரி அம்மன் படம் அருமை.

தீங்கை அழிப்பவள் அன்னை!

இப்பாடலே ஒரு நூற்பயன். ஒவ்வொரு பாடலையும் பாராயணம் செய்ய இங்கே சொல்ல படும் பயன் பெறலாம்.

சுகம் என்பது தான் மனிதனின் இலக்கு! தீங்கில்லாதது சுகம்!

ஒரு நீதி சுலோகம் அதில் சொல்கிறார் கவிஞர் "சோம்பேறிக்கு கல்வியில்லையாம்! கல்லாதவனுக்கு செல்வமும், நட்பும் இல்லையாம், கல்வி-செல்வம்-நட்பு இல்லாத மனிதர்க்கு சுகமில்லை! ஆக மனிதனுக்கு அனைத்துவித(16) செல்வங்களும் வேண்டும், அப்பேற்பட்ட அனைத்து வித செல்வங்களையும், தரவல்லவள், "படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி" என ஐந்தொழில் புரியும் அன்னை.

அவரவர் காரியத்தை கச்சிதமாக செய்யும் தன்மை மானிடராய் பிறந்தவர்க்கு தரும் ஒரு மாபெரும் பாடம்!

அந்த அன்னையை அபிராமியை, அங்கயர்கண்ணியை, அகிலாண்டேஸ்வரியை வணங்கியோருக்கு ஒரு தீங்கில்லை! அருமையாக சொன்னீர்கள்.

நன்றி.

said...

மும்மூர்த்திகளைச் சொன்னது மிக அழகு..

நானும் ஒருமுறை வணங்கிக் கொள்கிறேன்...

said...

அன்னையின் திருவுருவப்படத்திற்கு மிக்க நன்றி கவிநயா அக்கா. நானும் இந்தப் பாடலை சிறு வயதிலிருந்து சொல்லி வருகிறேன். ஆனால் வெகு நாட்களுக்கு இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் நூற்பயன் என்று தெரியாது.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் அக்கா.

said...

அலங்கார நீராஞ்சனத்திற்கு மீண்டும் நன்றிகள் இரவி.

said...

குடும்பத்தில் நால்வருக்குமே முக்கண் புராணத்தில் உண்டு என்று நினைக்கிறேன் இரவிசங்கர். அம்மை, அப்பன், அண்ணன், தம்பி நால்வருக்குமே முக்கண் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதனால் முண்டகக்கண்ணியும் முக்கண்ணி தான்.

said...

அருமையாக விளக்கினீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.

தொடர்ந்து வந்து எல்லா பாடல்களுக்கும் பாராயணப் பலன்களை சொன்னதற்கும் நன்றிகள் சிவமுருகன்.

said...

மிக்க நன்றி மௌலி அண்ணா.

said...

http://open.spotify.com/track/2NQATb6IkI5YKmVyVCGSdK

said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/