வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி
துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்
மதகரி - பெரிய பெரிய யானைகள்
மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள்
சிவிகை - அழகிய பல்லக்கு
பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்
பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்
பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்
அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு
அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு - பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு
உளவாகிய சின்னங்களே - கிடைக்கும் அடையாளங்கள்.
இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் வையகத்தே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வையம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சின்னங்களே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்கும்.
எதுகை: வையம், பெய்யும், ஐயன், செய்யும்
மோனை: வையம் - மதகரி - மாமகுடம், பெய்யும் - பெருவிலை - பிறைமுடித்த, ஐயன் - அடி - அன்பு, செய்யும் - தவம் - சின்னங்களே.
7 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'இம்மையில் பெருஞ்செல்வம் உண்டாகும்'.
பெருஞ்செல்வம் மட்டுமில்லை. பேரரசே கிடைக்கும் என்கிறார் பட்டர்.
நன்றி சிவமுருகன்.
குமரா!
இத்துடன் அன்னை அமைதியும் எங்களுக்குத் தரவேண்டும்.
நல்லதொரு பாடல் குமரன்.
ஒரு சிறிய திருத்தம். துரகம் என்றால் குதிரை. "பட்சியெனும் உக்ர துரகம்" என்று மயிலைக் குதிரையாகக் காட்டுகிறார் அருணகிரிநாதர். துரகம் என்பது வடமொழிச் சொல். ரத கஜ துரக பதாதிகள் என்று வடமொழியில் சொல்வார்கள் அல்லவா.
நன்றி இராகவன். நீங்கள் சொன்ன திருத்தத்தைச் செய்து விட்டேன். ஏதோ ஒரு எண்ணத்தில் துரகத்திற்குத் தேர் என்று பொருள் சொல்லியிருக்கிறேன்; ரத கஜ துரக பதாதிகள் என்று சொல்லப்படும் நாற்படைகளைப் பற்றி மறந்துவிட்டேன். நன்றி.
உண்மை ஐயா. அமைதியும் வேண்டும். நேற்றிரவு இறைவனின் திருப்பெயரின் பெருமைகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த போது தோன்றிய ஒரு எண்ணம் - இலங்கை, ஈராக், பாலஸ்தீனம், காஷ்மீரம் போன்ற நாடுகளின் வரைபடத்தை எடுத்துக் கொண்டு நமக்குப் பிடித்த இறைவனின் திருப்பெயர்களை அவற்றின் மேல் எழுதி அங்கெல்லாம் அமைதி திரும்ப வேண்டிக்கொள்ளலாம் என்பது. நண்பர்களையும் அப்படி செய்ய வேண்டிக் கொள்ளலாம் என்றும் நினைத்தேன்.
Post a Comment