சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் - உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் - உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்
பென்னம்பெரிய முலையும் - உன் பெரிய முலைகளையும்
முத்தாரமும் - அந்த முலையின் மேல் இருக்கும் முத்து மாலையையும்
பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் - பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்
கண் மூன்றும் - மூன்று கண்களையும்
கருத்தில் வைத்துத் - மனத்தில் நிறுத்தி
தன்னந்தனியிருப்பார்க்கு - மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்
இது போலும் தவமில்லையே - தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.
***
தாய்ப்பால் உண்ணும் குழந்தையின் கவனமெல்லாம் தாயின் முலை மீதே இருக்கும். அபிராமி அன்னையின் தவப்புதல்வனான அபிராமி பட்டரின் கவனமும் தாயின் பெரிய முலைகள் மீதே இருக்கிறது.
தன்னந்தனியாக மற்ற யாரும் இல்லாமல் இருப்பது தவமாகாது. பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது; அப்படி இருப்பவர்களை விட தவத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை.
'சின்னஞ்சிறு பெண் போலே' என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது. 'சிற்றாடை இடை நிறுத்தி' என்னும் போதும் 'பிச்சிப்பூ சூடி நிற்பாள்' என்னும் போதும்.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் சின்னங்களே என்று நிறைந்தது. இந்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் தவமில்லையே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்கும்.
எதுகை: சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி.
மோனை: சின்னஞ்சிறிய - சாத்திய - செய்யபட்டும், பென்னம்பெரிய - முலையும் - முத்தாரமும் - பிச்சி, கன்னங்கரிய - குழலும் - கண் - கருத்தில், தன்னந்தனி - தவமில்லையே.
11 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மாயை அகலும்'.
குமரா!!
ஆத்மீகம்;சினிமா என புகழப்படும் பிச்சிப்பூ; பற்றித் தெரியவில்லை.
இதன் படம் போட முடியுமா??
அன்னையின் கூந்தலை அலங்கரித்த பிச்சியை பார்க்க ஆசையாக உள்ளது; சிலசமயம் தெரிந்த தாக இருக்கலாம். ஈழத்தில் அதன் பெயர் வேறாக இருக்கலாம்.
யோகனண்ணா....
நீங்கள் கண்டிப்பாக பிச்சிப்பூவினை பார்த்திருப்பீர்கள்....முல்லை தெரியுமல்லவா, அது போலவே, இன்னும் கொஞ்சம் நீளமாக இருக்கும், வாசனை இன்னும் அதிகமாக இருக்கும், ஆனால் முல்லைப் பூவைவிட வேகமாக மலர்ந்து, வாடிவிடும்....படம் குமரன் கொடுப்பார்... :-)
லலிதா திரிஸதியில் ஒரு நாமாவளி உண்டு...'கடினஸ்தன மண்டலா' என்று....அது ஞாபகம் வந்தது....
நல்ல பாடல். இறைனை எண்ணி இருப்பதே தவம். அந்தத் தவமும் அவமுடையார்க்கே ஆகும்.
இது போலும் தவமில்லையே என்றதால் மாயை அகலும் என்ற பயன் பொருத்தமானது சிவமுருகன். நன்றி.
யோகன் ஐயா. மௌலி சொன்னது போல் தான் பிச்சிப்பூ இருக்கும். செவ்வரியும் சில நேரம் ஓடியிருக்கும். முல்லைப்பூ போன்ற அரிசிச் சோறு என்று பழந்தமிழ் இலக்கியங்களில் உவமை பல முறை வருகிறது. அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன் பிச்சிப்பூவை காட்டரிசிக்குச் சொல்வார்களோ என்று. மல்லிகை நன்கு குண்டாக குமிழாக இருக்க முல்லை காம்பை விட கொஞ்சமே கொஞ்சம் பெருத்து இருக்கும்; இரண்டும் வெளிறிய வெண்மை நிறம் கொண்டிருக்கும். பிச்சியோ முல்லை போன்றே தோன்றி ஆனால் காம்பிற்கும் பூவிற்கும் அவ்வளவாக வேறுபாடே இல்லாத பருமனுடன் செவ்வரியோடிய வெண்மை நிறமாய் சிறிது நீண்டு இருக்கும். மணத்தில் மல்லிகை மயக்கும்; கண்களை மூட வைக்கும். முல்லை மனம் மகிழ்விக்கும். பிச்சியோ அதன் நறுமணத்தால் மயக்காது புத்துணர்ச்சியைக் கொடுத்துக் கண்களை அகலத் திறந்து அதன் மணத்தை வியக்கவைக்கும்.
படத்தைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் மதுரையில் ஒவ்வொரு மாலையும் எல்லா பூக்கடையிலும் கிடைக்கும் இந்த மூன்று பூக்களைப் பற்றியும் எழுதிவிட்டேன். புதிய மலர்கள் வேண்டுமென்றால் தமிழகத்தில் மதுரைக்குத் தான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் மௌலி. நீங்கள் சொல்லும் நாமத்தைப் படித்திருக்கிறேன்.
நன்றி இராகவன். அவமுடையார்க்கே ஆகும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவமுடையார்க்கே என்றால் என்ன பொருள்?
//பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது;//
உண்மைதான். அப்படிப்பட்ட தவநிலை என்று வாய்க்குமோ?
பூக்கள் பற்றி அழகாக விளக்கியிருக்கிறீர்கள், குமரன். படிக்கும்போதே வாசம், சுவாசம் நிறைக்கிறது :)
Post a Comment