இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
இல்லாமை சொல்லி - வறுமையைச் சொல்லிக் கொண்டு
ஒருவர் தம்பால் சென்று - முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு
இழிவுபட்டு - அவரால் அவமானப்படுத்தப்பட்டு
நில்லாமை நினைகுவிரேல் - நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்
நித்தம் நீடு தவம் - எப்போதும் பெருமை மிக்க தவத்தை
கல்லாமை கற்ற கயவர் தம்பால் - செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்
ஒரு காலத்தும் செல்லாமை வைத்த - எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே - மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்.
***
முன்பின் தெரியாத அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளும் உறவினரோ அல்லாதவரோ அவர்களிடம் உதவி கேட்டு நிற்பது மிக்க அவமானம் அல்லவோ? அதனால் யாரோ ஒருவரிடம் என்று பொருள் படும் படி 'ஒருவர் தம்பால்' என்கிறார்.
பொருட்செல்வமும் வேண்டும் அருட்செல்வமும் வேண்டும் என்பது பொய்யாமொழி வாக்கு. அதனால் பொருள் வேண்டுவோரும் அன்னையைத் தொழவேண்டும்; அருள் வேண்டுவோரும் அவளைத் தொழவேண்டும் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.
ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.
***
அந்தாதித் தொடை: முந்தையப் பாடல் தவமில்லையே என்று நிறைந்தது. இந்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சேர்மின்களே என்று நிறைய அடுத்தப் பாடல் மின்னாயிரம் என்று தொடங்குகிறது.
எதுகை: இல்லாமை, நில்லாமை, கல்லாமை, செல்லாமை
மோனை: இல்லாமை - இழிவுபட்டு, நில்லாமை - நெஞ்சில் - நினைகுவிரேல் - நித்தம் - நீடுதவம், கல்லாமை - கற்ற - கயவர் - காலத்திலும், செல்லாமை - திரிபுரை - சேர்மின்களே.
Sunday, August 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்//
அப்படின்னா எதுகை, மோனையோட
"கல்லாமை கற்றவர்" - முரண் தொடையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குமரன்!
"தவம் கல்லாமை கற்ற கயவர்" என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டுமோ!
அம்பாள் தவம் எளிது. அது தானாய் வந்து அமைந்தாலும் ஒதுங்கி மற்ற ஆசைகளின் பால் ஓடும் வித்தையைக் கற்றவர். பத்தியைக் கற்கிலாதார். அதைத் தான் சொல்கிறார் போலும்!
ஆமாம் கேஆரெஸ். முரண்தொடையும் இருக்கிறது. சொல்லாமல் விட்டுவிட்டேன். எடுத்துச் சொன்னதற்கு நன்றி.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'கடன் தொல்லைகள் தீரும்'.
மிகப் பொருத்தமான பயன் இது சிவமுருகன். நன்றி.
நல்ல பாடல். நல்ல விளக்கம்.
நான் ரசிச்சது கல்லாமை கற்ற கயவர். அடடா! முரண் இருந்தாலே ரசனைக்கு அரண் இருக்காதே...
நீடுதவம் கல்லாமை கற்ற கயமையில் உங்கள் பொருளோடு ஒத்துப் போகவில்லை குமரன்.
// ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.//
இது ஏற்புடையதன்று இங்கு. தவம் என்பது பெருமைக்குரியது. ஏன்? அது அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்யும். அதுதான் தவம். ஓரிடத்தில் அமர்ந்து இறைவனை நினைப்பதா தவம்? இல்லை. செய்கின்ற செயல்களில் வாழும் வாழ்க்கையில் அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்மைதான் தவம். அந்தத் தவத்தைக் கல்லாமை கற்ற கயவரிடம் செல்லாமை என்பது நன்று என்று பொருள் கொள்ள வேண்டும்.
விளக்கத்திற்கு நன்றி இராகவன்.
Post a Comment