Saturday, September 08, 2007

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது (பாடல் 55)


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் - ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை

அகம் மகிழ் ஆனந்தவல்லி - என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை

அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை - எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே - உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சேர்மின்களே என்று முடிவுற இந்தப்பாடல் மின்னாயிரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஒன்றில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மின்னாயிரம், அன்னாள், முன்னாய், உன்னாது

மோனை: மின்னாயிரம் - மெய் - வடிவு - விளங்குகின்றது, அன்னாள் - அகம் - ஆனந்தவல்லி - அருமறைக்கு, முன்னாய் - முடிவாய - முதல்விதன்னை, உன்னாது - ஒழியினும் - உன்னினும் - ஒன்றில்லையே.

16 comments:

said...

காதல் துணையே மின்னாயிரம் கொண்ட வடிவுன்னு பாடுறப்போ....இறைவி மின்னாயிரம் நின்றாற்போலத் தெரியிறது வியப்பே இல்ல.

said...

குமரன்,நல்ல முயற்சி.இதை ஒரு குழு வலைத் திட்டாக முயன்றால் என் போன்றவர்கள் பங்களிப்பு ஏற்க இயலும் என்பது என் யோசனை மற்றும் விருப்பம்.

said...

ஒருவர் ஆயிரம் மின்னல் என்கிறார், இன்னொருவரோ, "ஸ்மிதஜ்யோத்ஸானாஜாலம் தவ நயன சந்த்ரஸ்ய பிபதாம்" என்கிறார் (ஆதிசங்கரர்).

அதாவது சந்திரனையொத்த முகத்தில் அவளது புன்சிரிப்பானது அமுதம் போன்ற நிலவுக்கற்றையாக இருக்கிறதாம்.

http://sowndharyalahari.blogspot.com/

said...

ஆமாம் இராகவன். எனக்கும் 'மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே' பாடல் நினைவிற்கு வந்தது. :-)

said...

சங்கப்பலகை ஐயா. தங்கள் பாராட்டிற்கு நன்றி. தங்கள் விருப்பத்தையும் அறிந்தேன். குழு வலைப்பதிவாக இல்லாமல் அபிராமி அந்தாதியைப் பற்றியும் அன்னையைப் பற்றியும் நீங்களும் உங்கள் வலைப்பதிவில் எழுதலாம். இந்தப் பதிவில் அதற்கு தொடுப்பு கொடுக்கிறேன். நீங்களும் இந்தப் பதிவிற்குத் தொடுப்பு தரலாம்.

said...

மௌலி. கதிரவனின் ஒளியும் நிலவின் ஒளியும் கண்களால் காண முடிகிறது. ஆனால் இந்த மின்னலில் ஒளியைக் கண் கொண்டு காண முடிகிறதா? அப்படி இருக்க ஆயிரம் மின்னல்கள் என்றால்? அந்த உருவைத் தியானித்து நிலவைக் கண்டு அமாவாசையை பூர்ணிமை என்றார் அபிராமி பட்டர். அவர் கண்ட காட்சியையே சொல்கிறார் ஆதிசங்கரர்.

said...

Whether the picture is Kali?

said...

குமரா!
அம்பிகையை 'உதிக்கின்ற செங்கதிர்'
என்றவர்; சும்மா மின்னல் என்றால் போதாதே, அதனால் ஆயிரம் மின்னல் என்றார் போலும்.

said...

கிஷோர். இது பாரத அன்னையின் திருப்படம் என்று நினைக்கிறேன்.

said...

யோகன் ஐயா. உதிக்கின்ற செங்கதிர் என்றது இவளது உச்சித்திலகத்தை. இவளைச் சொல்லும் போது அது எப்படி போதும்?! அது தான் மின்னல் ஆயிரம் என்றார் போலும். :-)

said...

மின்னாயிரம் என்பதில் மின்னலின் ஒளி மற்ற்ற்றும் அல்லாமல் மின்னலின் உள்ள மிகப்ப்பெரிய சக்தியையும் குறிப்பிடலாம் அல்லவா

said...

ஆமாம் திராச. கட்டாயம் அப்படி சொல்லலாம் தான். மின்னாயிரம் என்ற உடன் ஒளியே நினைவிற்கு வருகிறது. மின்னலின் சக்தி நினைவிற்கு வரவில்லை. புதிய சிந்தனை. மிக்க நன்றி.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்யலாம்'.

said...

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே என்று விருப்பு வெறுப்பற்ற மோன நிலையை இந்தப் பாடல் சொல்வதால் நீங்கள் சொன்ன பயன் மிகப் பொருத்தம் சிவமுருகன். சில நாட்கள் கழித்து வந்தாலும் எல்லா பாடல்களுக்கும் உரிய பயனைச் சொல்லிவிட்டுச் செல்வதற்கு மிக்க நன்றி.

said...

//மின்னலில் ஒளியைக் கண் கொண்டு காண முடிகிறதா? அப்படி இருக்க ஆயிரம் மின்னல்கள் என்றால்?//

உண்மைதான். அன்னையின் அருளன்றி அவளைக் கடுகளவேனும் அறிய முடியுமோ?

//உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே//

இந்த வரி ஏனோ கண்ணீரை வரவழைத்தது...

said...

நல்ல வரியில் தான் கண்ணீர் வந்திருக்கிறது கவிநயா அக்கா.