Saturday, September 29, 2007

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் (பாடல் 57)



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு - சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு

அண்டம் எல்லாம் உய்ய - உலகம் எல்லாம் உய்யும் படி

அறம் செயும் - அறங்கள் செய்யும்

உன்னையும் போற்றி - உன்னைப் போற்றிப் பாடிவிட்டு

ஒருவர் தம் பால் - பின் வேறொருவரிரம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று - நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் - உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!

இதுவோ உந்தன் மெய்யருளே - இது தான் உந்தன் மெய்யருளா?

***

உலக மக்கள் எல்லோருக்கும் படி அளப்பவளாக இருக்கும் உன்னைப் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருந்த என்னை வேறொருவரிடம் சென்று படி அளக்கச் சொல்லிக் கேட்க வைக்கலாமா? அவர்களைப் புகழ்ந்து பொய்யாக நான் பாடலாமா? இப்படி வைப்பது உனக்கு அழகா?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஐயனுமே என்று நிறைய இந்தப் பாடல் ஐயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் அருளே என்று நிறைய அடுத்தப் பாடல் அருணாம்புயத்தும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஐயன், உய்ய, செய்ய, மெய்யும்

மோனை: ஐயன் - அளந்த - அண்டம், உய்ய - உன்னையும் - ஒருவர், செய்ய - சென்று, மெய்யும் - மெய்யருளே.

8 comments:

said...

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் - உள்ளதையும் பொல்லாததையும் சொல்ல வைத்தாயே

உண்மையையும், உண்மை அல்லாததையும் சொல்ல வைத்தாய் என்று பொருள் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது இந்த எளியவனின் கருத்து!

பொல்லாததையும் என்று சொல்கையில் சொல்லவந்த அழுத்தம் குறைகிறது நண்பரே!

said...

வாத்தியார் ஐயா. நீங்கள் சொன்னபடி மாற்றி எழுதிவிட்டேன். நன்றி.

said...

மூக கவியும் தனது பஞ்ச சதீயில் இவ்வாறாக ஒரு பாடல் பாடியுள்ளார், குறிப்பினைப் பார்த்தபின் மீண்டும் வருகிறேன்.

said...

மூக கவி எழுதிய பஞ்ச சதீ. மௌலி மூக கவியைப் பற்றி உங்கள் பதிவில் எழுதுங்கள். அவரின் கதையை அறிந்து கொள்கிறோம். பஞ்ச சதீ என்றால் 500 பாடல்கள் என்று நினைக்கிறேன். சரியா?

குறிப்பு கிடைத்தவுடன் மீண்டும் வந்து சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

said...

எழுதுகிறேன் குமரன்....நிறைய எழுதமுடியும்.....நேரம் ஒதுக்குவதுதான் கடினமாக இருக்கிறது.

ஆம், பஞ்ச சதீ என்றால் 500 தான்.

என்பதிவில் கண்டிப்பாக எழுதுகிறேன்.

செளந்தர்ய லஹரி விளக்கம் அப்படியே இருக்கு...உங்களிடம் சொன்னபடி முடிக்க முடியாது, நவராத்ரியில் ஆனந்த லஹரி வரை முடித்தாலே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

said...

ஆமாம் மௌலி. நேரம் கிடைப்பது கடினமாகத் தான் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியேன் தொடங்கியவை எல்லாம் கூட இன்னும் நிறைவு பெறாமல் தான் இருக்கின்றன. முதல் வலைப்பதிவு இந்த 'அபிராமி அந்தாதி' பதிவு தான். அதனால் அதனை நிறைவு செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கோதைத் தமிழும் விஷ்ணு சித்தனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வறுமை ஒழியும்'.

said...

இந்தப் பாடலை பாராயணம் செய்தால் கட்டாயம் வறுமை ஒழியும் சிவமுருகன். பொருத்தமான பயன். நன்றி.