Wednesday, February 15, 2006

147: ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? (பாடல் 19)

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து - நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

விழியும் நெஞ்சும் - பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

என்ன திருவுளமோ? - உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே. நான் வேண்டியவுடன் வான வெளியில் மாதொருபாகனாக திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை. கருத்தினுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் திறம் தான் என்னே?

34 comments:

said...

உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.//

எத்தனை உண்மை!

said...

உண்மைதான் குமரன்.. அவள் திருவுளத்துக்குத் தான் எத்தனை பெருமை.

//அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே
//
நவகோண சக்கரமா? நவசக்தியா? இது என்னது? முத தடவை கேள்விப்படறேன். எதாவது எந்திரமா?

said...

அருமை அருமை அருமை.

பேரானந்த வெள்ளம் பெருகும் பொழுது கரைதட்டுமா என்ன! தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தில் மூழ்குவதே மெய்யின்பம். கண்டவர் அபிராமி பட்டர். அதனை எடுத்துச் சொல்கிறவர் நமது குமரன். வாழ்க. வளர்க.

said...

குமரன், அருமையான வியாழக்கிழமை காலையில் கடும் குளிரில் (- 36 டிகிரி C) அலுவலகம் வந்து தங்களின் அபிராமியின் பாடலை படித்து மனம் குளிர்ந்தேன். தொடரட்டும் உங்களின் ஆன்மிக பணி.

கால்கரி சிவா

said...

நன்றி ஜோசஃப் சார்.

said...

இராமநாதன், நீங்கள் சொன்ன மாதிரி நவகோண சக்கரம் என்பது சாக்த யந்திரம் தான் என்று எண்ணுகிறேன். நவசக்திகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த நவசக்திகளின் பெயர்கள் இப்போது நினைவில் இல்லை.

said...

நன்றி இராகவன்.

said...

சிவா அண்ணா, வெளியேயும் குளிர். அந்தாதி படித்து உள்ளேயும் குளிர்ந்ததா? ரொம்ப நல்லது. இங்கே மினசோட்டாவிலும் நீங்கள் சொல்லும் அளவுக்குக் குளிர் இருக்கிறது.

said...

எத்தனை முறை கேட்டாலும்,படித்தாலும் திகட்டாத ஒன்று!!திருவாணைகாவல் கோயிலில் தங்களைதான் நினவுக் கூர்ந்தேன்!!!

said...

உண்மை தான் நடேசன் சார். எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் திகட்டாத பாடல்கள் அபிராமி அந்தாதி பாடல்கள்.

நீங்க தானா அதுக்குக் காரணம். அண்மையில் அம்மை அகிலாண்டேச்வரி கனவில் வந்து நலம் விசாரித்துச் சென்றாள். நான் அவளை அண்மையில் நினைக்கவில்லையே எப்படி வந்தாள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்கள் தானா அவள் திருமுன்பு என்னை நினைவு கூர்ந்து அவளை என் கனவில் தரிசனம் கொடுக்க அனுப்பியது. மிக்க நன்றி சார்.

அன்னை மிராவிடமும் எனக்காக சிபாரிசு செய்யுங்கள். அன்னையின் பொன்னான மொழிகளைப் படித்து நாளாகிவிட்டது. அரவிந்தர் சொல்வதில் பல எனக்குப் புரிவதில்லை. ஆனால் அன்னை மிரா சொல்வதில் பல மிக எளிமையாகப் புரிகிறது. அன்னையின் கருணையே கருணை.

said...

குமரா
அபிராமி திருவுளம் கொண்டு குமரனை எழுதச் செய்த திருவிளையாடல் இங்கே நடக்குதம்மா
இத்தனை பேரையும் சாட்சியாக வைத்து
நல்லா இருங்க

said...

ஆமாம் மதுமிதா அக்கா. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்த போது நினைவுக்கு வந்த வரிகள்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

தன்னையே தான் பாடிக் கொண்டான்

யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பேரின்பம் உண்டாகும்' என என்னிடமுள்ள புத்தகத்தில் உள்ளது, நிச்சயமாக இப்பாடலினால் பேரின்பம் கிடைக்கிறது.

said...

சிவமுருகன். ஒவ்வொரு பாடலுக்கும் என்ன பலன் சொல்லியிருக்கிறது என்று எல்லாப் பதிவுகளின் பின்னூட்டங்களிலும் தயவு செய்து சொல்கிறீர்களா? மிக்க நன்றி.

said...

குமரன்,

பாடலையும் உங்கள் விளக்கங்களையும் படிக்கும்போதே அந்த 'பேரின்பம்' கிடைத்துவிட்டது.


பராசக்தியாகிய லலிதையின் யந்த்ரரூபமே ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரம் 9 முக்கோணங்களால் ஆனது. அந்த ஒன்பது முக்கோணங்களும் அண்டமாகிய உலகத்துக்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூல காரணங்களான தத்துவங்களைக் குறிப்பவை. 'ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும்' என்பது இந்த முக்கோணங்களைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

said...

அன்பு குமரன், இராமநாதன்,

நவாக்கரி சக்கரம் பற்றி எழுதினால் விரியும். அதன் விரிவஞ்சித் தனியே ஞானமுத்துக்களில் எழுதுகிறேன்.

said...

அன்பு குமரன், இராமநாதன்,

நவாக்கரி சக்கரம் பற்றிக் காண சொடுக்குங்கள்
http://njaanamuththukkal.blogspot.com/2006/02/54.html

said...

அன்பு குமரன், இராமநாதன்,

நவசக்திகள்: -

வாமை, ஜேஷ்டை, ரெளத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி.

இப்படியும் கூறுவதுண்டு:-

தீப்தை, சூஷமை, குஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோமுக்யை.

said...

'ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும்' என்பதற்கு விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி Jayashree

said...

நவாக்கரி சக்கரம் பற்றி ஞானமுத்துக்கள் வலைப்பூவில் எழுதியதற்கு மிக்க நன்றி ஐயா. நவாக்ஷரி (ஒன்பது எழுத்துள்ள சொல்) என்னும் வடமொழிச் சொல் போன்றதா நவாக்கரி என்னும் சொல்?

said...

நவசக்திகளைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.

ஜேஷ்டை மூத்தவள் (மூதேவி) எனப்படும் ஜேஷ்டா தேவியா? முதலில் கொடுத்துள்ள நவசக்திகளின் பெயர்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ரௌத்ரி ருத்ரனின் சக்தியா? காளி கருநிறம் கொண்டவளா? வாமை என்றால் இடப்பாகத்தைக் கொண்டவள் என்று பொருளா? பலப் பிரமதனி என்றால் செய்யும் செயல்களுக்குப் பயனைக் கொடுப்பவள் என்று பொருளா? சர்வ பூத தமனி என்றால் எல்லா பூதங்களையும் தாங்குபவள்/பொறுப்பவள் என்று பொருளா? மனோன்மணி சக்தி ரூபிணி ஞானவினை புரிபவர்களுக்கு அருள் புரிபவள் என்று படித்துள்ளேன். சரியா? நவசக்திகளைப் பற்றி மேலும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா.

அடுத்துச் சொல்லியுள்ள நவசக்திகளை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. சர்வதோமுக்யை தவிர மற்றவர் பெயர் பொருள் புரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள்.

said...

அன்பு குமரன்,
அக்கரம் = அக்ஷரம்.
நவாக்கரி = நவக்ஷரி
அதுவேதான். விடாதீர்கள். பிடித்துக்கொள்ளுங்கள், கற்பூரமே!

said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா. எல்லாம் தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிகள்.

said...

தாம் என்னிடத்தில் வேண்டியது, நீங்கள் எனக்களித்த வரம்.
100 பாடலின் பயனை விரைவில் தனி மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

said...

மிக்க நன்றி சிவமுருகன். மற்றப் பதிவுகளையும் பார்த்தேன். மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகப் பாடல்களில் ஒரு தொகுப்பு, அபிராமி அந்தாதி. (பன்னிரு திருமுறைகளிலும் ஈடுபாடு உண்டு.) அபிராமி அந்தாதிக்குக் கவியரசு கண்ணதாசன் விளக்கம் நீங்கள் வாசித்திருக்கக்கூடும். மதுரை தமிழ்த்திட்டத்தில் உள்ளது.

உங்கள் வலைப்பூவில், பாடல்கள் வரிசைப்படி வருவதுபோல் இல்லையே? வேறு விதமான வரிசையில் வருகின்றனவா?

said...

சொல்ல மறந்துவிட்டேன்: அபிராமி அந்தாதியின் rendering-இல் எனக்கு மிகவும் பிடித்தது, சீர்காழி கோவிந்தராஜனுடையது.

said...

சேதுக்கரசி. கவியரசர் கண்ணதாசனின் உரையைப் படித்திருக்கிறேன்; சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியதையும் கேட்டிருக்கிறேன். இரண்டுமே அருமையாக இருக்கும். இந்த வலைப்பூவில் எழுதும் போதும் எப்போதாவது ஐயம் வந்தால் கவியரசர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பேன். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இசைத்தட்டு அடிக்கடி எங்கள் காரில் ஒலிக்கும்.

பாடல்களை வரிசைப்படி தானே தந்திருக்கிறேன். பதிவுத் தலைப்பின் முன்னால் இருக்கும் எண்களைக் கண்டு அப்படிக் கேட்கிறீர்களா? அந்த எண்கள் என் எல்லா வலைப்பூக்களிலும் சேர்த்து அந்தப் பதிவு எத்தனையாவது பதிவு என்பதைக் குறிக்கிறது. தற்போது அப்படி எண்களை இட்டு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

said...

"வெளி நின்ற" எனும் சொல் பல பொருள் தரும்; ஆகாய வெளி நின்ற எனும் பொருள்; ஸ்தூலமாய் வெளி வந்து காட்சி தருகின்றவள் எனும் பொருள்; அனைத்துமாய் இருப்பவள் வெளி வந்து தனித்து காட்சி தருபவளாய்...எனும் பொருள்; வெளியாகவே நிற்பவள் எனும் பொருள்; இன்னும் போய் கொண்டே இருக்கும்.

மொத்தத்தில் அருமையான பாட்டு; தங்களது இத்தகு ஆன்மீக பணியும் அற்புதம்.

said...

உண்மை தான் காழியூரன் ஐயா. உங்கள் விளக்கம் மிக அருமை. மிக்க நன்றி. 21ம் பாடலிலும் 'வெளியாள்' என்ற சொல் வருகிறது. அதற்கு 'வெள்ளை நிறம் கொண்டவள்' என்ற பொருளைச் சொன்னேன். நண்பர் நாக.இளங்கோவன் ஆகாய வெளி என்ற பொருளைச் சொன்னார்.

said...

அன்பு சகோதரர் குமரன் அவர்களுக்கு வணக்கம். அருமையான வலை பின்னல், அம்மையின் பெருமையை அழகு தமிழால், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிக்கும் உங்களை அந்த அம்பிகை சகல செல்வங்களும் கொடுத்து காக்கட்டும்.

சிவ முருகன் அவர்களின் மீனாக்ஷியம்மனின் வலை கண்டு அவர் உதவி பெற்று அடியேனும் ஒரு வலை பின்னல் ஆரம்பித்துள்ளேன்.

திருக்கயிலை நாதனையும் அம்பிகையையும் அவர்கள் இருப்பிடமே சென்று தரிசனம் செய்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள.

visit http://kailashi.blogspot.com

said...

கைலாஷி அவர்களே. நீங்கள் ஆங்கிலத்தில் நேற்று இட்டப் பின்னூட்டத்தைப் பார்த்த பின்பு உங்கள் வலைப்பூவிற்கு வந்து பார்த்தேன். கைலாய யாத்திரையையும் மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தையும் எழுதி வருவதைப் பார்த்தேன். மெதுவாக ஒவ்வொரு பதிவையும் படித்துப் பின்னூட்டம் இடுகிறேன். தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி.

said...

//களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை //

ரொம்பப் பிடிச்சது. அப்படிப்பட்ட இன்பம் கிடைக்க எவ்வளவு தவம் செய்ய வேண்டும்!

said...

அன்னையின் திருவுருவத்தைக் கண்டதும் கரைகாணாத களிவெள்ளம் தோன்ற பெரும்புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும் கவிநயா.