Sunday, August 26, 2007

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே (பாடல் 54)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே



இல்லாமை சொல்லி - வறுமையைச் சொல்லிக் கொண்டு


ஒருவர் தம்பால் சென்று - முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு


இழிவுபட்டு - அவரால் அவமானப்படுத்தப்பட்டு


நில்லாமை நினைகுவிரேல் - நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்


நித்தம் நீடு தவம் - எப்போதும் பெருமை மிக்க தவத்தை


கல்லாமை கற்ற கயவர் தம்பால் - செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்


ஒரு காலத்தும் செல்லாமை வைத்த - எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத


திரிபுரை பாதங்கள் சேர்மின்களே - மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்.

***

முன்பின் தெரியாத அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளும் உறவினரோ அல்லாதவரோ அவர்களிடம் உதவி கேட்டு நிற்பது மிக்க அவமானம் அல்லவோ? அதனால் யாரோ ஒருவரிடம் என்று பொருள் படும் படி 'ஒருவர் தம்பால்' என்கிறார்.

பொருட்செல்வமும் வேண்டும் அருட்செல்வமும் வேண்டும் என்பது பொய்யாமொழி வாக்கு. அதனால் பொருள் வேண்டுவோரும் அன்னையைத் தொழவேண்டும்; அருள் வேண்டுவோரும் அவளைத் தொழவேண்டும் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.

***

அந்தாதித் தொடை: முந்தையப் பாடல் தவமில்லையே என்று நிறைந்தது. இந்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் சேர்மின்களே என்று நிறைய அடுத்தப் பாடல் மின்னாயிரம் என்று தொடங்குகிறது.

எதுகை: இல்லாமை, நில்லாமை, கல்லாமை, செல்லாமை

மோனை: இல்லாமை - இழிவுபட்டு, நில்லாமை - நெஞ்சில் - நினைகுவிரேல் - நித்தம் - நீடுதவம், கல்லாமை - கற்ற - கயவர் - காலத்திலும், செல்லாமை - திரிபுரை - சேர்மின்களே.

Friday, August 10, 2007

தன்னந்தனி இருக்க வேண்டும்! (பாடல் 53)


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் - உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்


பென்னம்பெரிய முலையும் - உன் பெரிய முலைகளையும்

முத்தாரமும் - அந்த முலையின் மேல் இருக்கும் முத்து மாலையையும்

பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் - பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்


கண் மூன்றும் - மூன்று கண்களையும்

கருத்தில் வைத்துத் - மனத்தில் நிறுத்தி

தன்னந்தனியிருப்பார்க்கு - மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்


இது போலும் தவமில்லையே - தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.


***

தாய்ப்பால் உண்ணும் குழந்தையின் கவனமெல்லாம் தாயின் முலை மீதே இருக்கும். அபிராமி அன்னையின் தவப்புதல்வனான அபிராமி பட்டரின் கவனமும் தாயின் பெரிய முலைகள் மீதே இருக்கிறது.

தன்னந்தனியாக மற்ற யாரும் இல்லாமல் இருப்பது தவமாகாது. பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது; அப்படி இருப்பவர்களை விட தவத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை.

'சின்னஞ்சிறு பெண் போலே' என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது. 'சிற்றாடை இடை நிறுத்தி' என்னும் போதும் 'பிச்சிப்பூ சூடி நிற்பாள்' என்னும் போதும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சின்னங்களே என்று நிறைந்தது. இந்தப் பாடல் சின்னஞ்சிறிய என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் தவமில்லையே என்று நிறைகிறது. அடுத்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்கும்.

எதுகை: சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய, கன்னங்கரிய, தன்னந்தனி.

மோனை: சின்னஞ்சிறிய - சாத்திய - செய்யபட்டும், பென்னம்பெரிய - முலையும் - முத்தாரமும் - பிச்சி, கன்னங்கரிய - குழலும் - கண் - கருத்தில், தன்னந்தனி - தவமில்லையே.