Sunday, October 28, 2007

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே (பாடல் 62)


தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

தங்கச் சிலை கொண்டு - பொன்மலையாம் மேரு மலையே வில்லாகக் கொண்டு

தானவர் முப்புரம் சாய்த்து - திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி

மத வெங்கண் கரி உரி போர்த்த - மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட

செஞ்சேவகன் - சிவந்தவனாம் சிவபெருமானின்

மெய்யடையக் - திருமேனியை அடைய

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி - கொங்கையெனும் அம்பினைக் குறி வைத்த தலைவியே!

கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே - சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்கின்றன.

***

திரிபுர அசுரர்களின் முப்புரத்தை மேரு எனும் பொன் வில் கொண்டு சிரித்தெரிக் கொளுத்தியும் கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து அணிந்தும் பெருமை கொண்ட சிவந்தவன் உன் கையில் இருக்கும் மதனின் கரும்பு வில்லிலும் மலர் அம்புகளிலும் அந்த அம்புகளை விட மென்மையான உன் கொங்கைகள் எனும் மலர்க் கணையால் உன்னை தன் திருவுடலின் பாதியாகக் கொண்டான். அப்படிப் பெருமை கொண்ட உன் கையில் இருக்கும் கரும்பிலும் மலரிலும் என் மனம் நிற்கிறது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்கச்சியே என்று நிறைய இந்தப் பாடல் தங்கச்சிலை என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிந்தையதே என்று நிறைய அடுத்தப் பாடல் தேறும்படி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக/ எழுத்தாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்கச்சிலை, வெங்கண், கொங்கை, செங்கை

மோனை: தங்கச்சிலை - தானவர், கொங்கை - குரும்பை - குறியிட்ட - கோகனக, செங்கை - சிந்தையதே.

Sunday, October 21, 2007

செங்கண்மால் திருத்தங்கச்சியே (பாடல் 61)


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும்

இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் - என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் - எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
என்ன பேறு பெற்றேன் - இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே - என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே!

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நாய்த்தலையே என்று நிறைய இந்தப் பாடல் நாயேனையும் என்று தொடங்கியது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நாயேனையும், நீயே, பேயேன், தாயே

மோனை: நாயேனையும் - நயந்து, நீயே - நினைவின்றி - நின்னை, பேயேன் - பேறு - பெற்றேன், தாயே - திருத்தங்கச்சியே.

Thursday, October 18, 2007

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே (பாடல் 60)


பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

பாலினும் சொல் இனியாய் - பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!

பனி மாமலர்ப் பாதம் வைக்க - உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க

மாலினும் - திருமாலை விட
தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும் - எல்லாத் தேவர்களும் வணங்க நின்றவனாம் சிவபெருமானின் கொன்றை மலர் அணிந்த அழகிய சடை முடியை விட

கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும் - கீழே நின்று உன் புகழ் பாடும் நான்கு வேத பீடங்களை விட

சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே - நாயேனாகிய அடியேனின் முடை நாற்றம் வீசும் தலை சால நன்றாகியதோ? (விரும்பி என் தலை மேல் உன் திருவடிகளை வைத்தாயே?!)

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பாலரையே என்று நிறைவு பெற்றது. இந்தப் பாடல் பாலினும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாய்த்தலையே என்று நிறைய நாயேனையும் என்று அடுத்தப் பாடல் தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பாலினும், மாலினும், மேலினும், நாலினும்

மோனை: பாலினும் - பனி - பாதம், மாலினும் - வணங்க - வார்சடையின், மேலினும் - மெய்ப்பீடம், நாலினும் - நன்றோ - நாய்த்தலையே

Saturday, October 13, 2007

தஞ்சம் பிறிது இல்லை (பாடல் 59)


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே


தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று - உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்


உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் - உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை.


ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் - பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே!


அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே - பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

***

அபிராமி அன்னையிடம் நான் எத்தனை தவறு செய்திருந்தாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். மானிடப் பெண்களே தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு கருணையுடன் இருக்கும் போது எல்லா உலகிற்கும் தாயான அன்னையே நீ எவ்வளவு கருணையுடன் இருப்பாய் என்று தெரிகிறதே என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

சிலை: வில்

ஒற்றை நீள்சிலை: நிகரில்லாத என்று சொல்ல ஒற்றை என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஏகம் அத்விதீயம் (ஒன்றே இரண்டில்லாதது - தனக்கு நிகராக இன்னொன்று இல்லாதது) என்று வேதங்களும் சொல்கின்றன.

அஞ்சு அம்பும் - மற்றவர் அஞ்சுகின்ற படி இருக்கும் அம்புகளும் எனலாம்; ஐந்து அம்புகளும் எனலாம். ஐந்து மலர்க்கணைகளை அன்னை தாங்கியிருக்கிறாள் என்பது மற்ற இடங்களில் சொல்லப்பட்டது. ஐந்து என்பதன் பேச்சு வழக்கான அஞ்சு என்ற சொல்லை இங்கே புழங்குகிறார் அபிராமி பட்டர்.

இக்கு - கரும்பு

அலர் - மலர்

மெல்லடியார் அடியார் - சிலேடை; மெல்லிய பாதங்களை உடையவர் என்று முதற்சொல்லிலும் அடிக்க மாட்டார்கள் என்று இரண்டாம் சொல்லிலும் அடியார் என்ற சொல்லைப் புழங்குகிறார்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தஞ்சமுமே என்று நிறைய இந்தப் பாடல் தஞ்சம் பிறிதின்றி என்று தொடங்கியது. இந்தப் பாடல் பாலரையே என்று முடிய அடுத்தப் பாடல் பாலினும் என்று தொடங்குகிறது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தஞ்சம், நெஞ்சம், அஞ்சம்பும், பஞ்சஞ்சு

மோனை: தஞ்சம் - தவநெறிக்கே, நெஞ்சம் - நினைக்கின்றிலேன் - நீள்சிலையும், அஞ்சம்பும் - அலராகி - அறியார், பஞ்சஞ்சு - பாலரையே.

Sunday, October 07, 2007

சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை (பாடல் 58)


அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

அருணாம்புயத்தும் - அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்


என் சித்தாம்புயத்தும் - என் மனமெனும் தாமரையிடத்தும்

அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் - அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்


தகை சேர் நயனக் கருண அம்புயமும் - பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்


வதன அம்புயமும் - திருமுகம் என்னும் தாமரையும்

கர அம்புயமும் - திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்

சரண அம்புயமும் - திருவடிகள் என்னும் தாமரைகளும்

அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்

***

அன்னையின் திருவுருவம் தாமரைப் பொய்கையை ஒத்து இருக்கிறது போலும். அம்புயம் என்பது அம்புஜம் என்னும் வடசொல்லின் திரிபு என்பர். அம்பு - நீர்; ஜ: - பிறந்தது; நீரில் பிறந்தது என்று பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் அருளே என்று நிறைய இந்தப் பாடல் அருணாம்புயம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தஞ்சமுமே என்று முடிய அடுத்தப் பாடல் தஞ்சம் பிறிது இல்லை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அருணாம்புயம், தருணாம்புயம், கருணாம்புயம், சரணாம்புயம்

மோனை: அருணாம்புயம் - அமர்ந்திருக்கும், தருணாம்புயம் - தையல் - தகை, கருணாம்புயம் - கராம்புயம், சரணாம்புயம் - தஞ்சமுமே.