Sunday, January 28, 2007
சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே (பாடல் 27)
உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே
உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை - உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்.
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை - தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை - என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.
சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே - அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே (பாடல் 26)
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் - உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே - மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!
மணம் நாறும் நின் தாளிணைக்கு - தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு
என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே - என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.
முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.
Wednesday, January 10, 2007
இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே! (பாடல் 25)
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் - உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.
முதல் மூவருக்கும் அன்னே - முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே!
உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே - அபிராமி அன்னை என நிற்கும் உலகத் துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே - என்னே உன் பெருமைகள்.
இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.
மணியே! மணியின் ஒளியே! (பாடல் 24)
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே
மணியே - மாணிக்க மணியே!
மணியின் ஒளியே - மாணிக்க மணியின் ஒளியே!
ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!
அணியும் அணிக்கு அழகே - அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!
அணுகாதவர்க்குப் பிணியே - நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!
பிணிக்கு மருந்தே - உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!
அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.
***
உலக இன்பம் வேண்டி அல்லவா இறையை அன்றி மற்றவற்றையும் மற்றவர்களையும் பணிவது? உன்னைப் பணிந்த பின் மற்றவரைப் பணியேன் என்றது உலக இன்பங்கள் உன்னைப் பணிந்தததால் தானே கிடைக்கும்; அதனால் இறையைத் தவிர மற்றவரைப் பணியும் தேவை இல்லை என்பதைச் சொல்லியது.
Subscribe to:
Posts (Atom)