Friday, October 28, 2005

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை (பாடல் 5)

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே

பொருந்திய முப்புரை - உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும், பொருந்தி இருப்பவளே.

செப்புரை செய்யும் புணர்முலையால் - புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் விளங்கும் கூடி நிற்கும் முலைகளால், அவற்றின் பாரத்தால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி - வருந்திய கொடிபோன்ற இடையுடைய, அன்பர்களை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் மனோன்மணியே.

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை - தேவர்களும் அசுரர்களும் அமுதம் அடைவதற்காக அன்று பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்தும் போது அவர் திருக்கழுத்தின் மேல் உன் திருக்கரங்களை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கிய அம்பிகையே.

அம்புயமேல் திருந்திய சுந்தரி - நீரில் பிறக்கும் தாமரை மலர் மேல் அழகிய உருவுடன் அமர்ந்திருப்பவளே

அந்தரி பாதம் என் சென்னியதே - உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆனவளே - உன் அழகிய பாதத்தை என் தலை மேல் அணிந்துகொண்டேன்.

உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல்; இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம்; பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம்; போன்ற மூம்மூன்று நிலைகளில் முப்புரையாய் பொருந்தி இருப்பவளே. மிக்க அழகுடன் கூடி, இணையாய் நிற்கும் பெருமுலைகளின் பாரத்தால் வருந்தும் கொடியிடை கொண்ட மனோன்மணியே. அன்று சிவபெருமான் உண்ட நஞ்சை அமுதாக்கிய அம்பிகையே. மென்மையான தாமரையில் அமர்ந்துள்ள உன் திருவடிகளை நான் என் தலை மேல் அணிந்து கொள்கிறேன்.

Thursday, October 20, 2005

என் மனதில் எந்நாளும் தங்க வேண்டும். (பாடல் 4)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து - மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து

சென்னி குனிதரும் - தலையால் வணங்கும்

சேவடிக் கோமளமே - சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே)

கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.

மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத பெருவாழ்வு வாழும் முனிவர்களும் வந்து தங்கள் தலையால் வணங்கும் சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே. நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் கொன்றைப்பூவும் அணிந்துள்ள புனிதராம் சிவபெருமானும் நீயும் என் மனதில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.

Tuesday, October 11, 2005

செறிந்தேன் உனது திருவடிக்கே! (பாடல் 3)

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய் விளங்க பாடலைக் கீழ்கண்டவாறு மாற்றி எழுதலாம்.

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகில் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே வெருவிப் பிறிந்தேன். (நான்) அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே!

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல்

நரகில் மறிந்தே விழும் - தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்

நரகுக்கு உறவாய மனிதரையே - நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை

வெருவிப் பிறிந்தேன் - (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை - யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).

அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே - அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) - அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.

அடியவர் விரும்பும் அனைத்தும் அருளும் திருவே! யாரும் அறியா மறைப்பொருளை நான் உன் அருளால் அறிந்து கொண்டு உன் திருவடிக்கே சரணம் என அடைந்தேன். கருமப்பயனால் உன் அடியவர் பெருமையை அறியாத நரகத்தில் விழக் கூட்டம் கூட்டமாய் (ஆட்டு மந்தையைப் போல்) இருக்கும் மனிதர்களை நான் வெறுத்து விலகிவிட்டேன்.

Saturday, October 08, 2005

துணையும் தொழும் தெய்வமும் திரிபுர சுந்தரியே! (பாடல் 2)


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய்ப் புரிய பாடலை கீழ்கண்டவாறு மாற்றி எழுதிக்கொள்ளலாம்.

பனி மலர்ப் பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி (என்) துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் ஆவது அறிந்தனமே!

பனி மலர்ப் பூங் கணையும் - குளிர்ந்த மலர் அம்பும்

கருப்புச் சிலையும் - கரும்பு வில்லும்

மென் பாசாங்குசமும் - மென்மையான பாசமும், அங்குசமும்

கையில் அணையும் - கையில் கொண்டு விளங்கும்

திரிபுர சுந்தரி - மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி

என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்

சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - வேதத்தின் கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும்

ஆவது அறிந்தனமே - அவள் இருப்பது அறிந்தேனே!

குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரி, வேதங்களின் வேராகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருக்கிறாள். அவளே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாகவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அபிராமி எந்தன் விழுத்துணையே (பாடல் 1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் - உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம்

உணர்வுடையோர் - பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம் போது - மாதுளம்பூ மொட்டு

மலர்க்கமலை - தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)

துதிக்கின்ற மின் கொடி - துதிக்கின்ற மின்னல் கொடி

மென் கடிக் குங்குமத் தோயம் - மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்

என்ன - போன்ற

விதிக்கின்ற மேனி - விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட

அபிராமி எந்தன் விழுத்துணையே - அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள்.

உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள்.

Friday, October 07, 2005

கார் அமர் மேனிக் கணபதி

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே -
கார் அமர் மேனிக் கணபதியே - நிற்கக் கட்டுரையே.

தார் அமர் கொன்றையும் - மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ - கொன்றைப் பூ மாலையும்
சண்பக மாலையும்
சாத்தும் - அணியும்
தில்லை ஊரர் - தில்லையில் - சிதம்பரத்தில் வாழும் நடராஜன்
தம் பாகத்து - அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும்
உமை - சிவகாமி - பார்வதி
மைந்தனே - மகனே
உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி - சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும்
அந்தாதி - அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல்
எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க
கார் அமர் மேனி கணபதியே - மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே
கட்டுரையே - அருள் புரிவாய்.

கொன்றை மாலையும் சண்பக மாலையும் அணியும் நடராஜனுக்கும் அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமையம்மைக்கும் மைந்தனே! மேகம் போல் கரிய உடல் கொண்ட கணபதியே! உலகேழையும் பெற்ற அன்னையாம் அபிராமியின் புகழை கூறும் இந்த அந்தாதி என் சிந்தையுள் எப்போதும் நிற்க நீ அருள் புரிவாய்.

Monday, October 03, 2005

முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் இங்கு கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

அன்பு குமரன்