Friday, February 29, 2008

ஆடகத் தாமரை ஆரணங்கே (பாடல் 80)


முதலில் அடியார் கூட்டத்தில் சேர்தல்; அந்த சேர்தலையே காரணமாகக் கொண்டு இறைவியின் திருவருள் வருதல்; அந்தத் திருவருளால் அவளது திருவுருவைக் காட்டுதல்; அப்படிக் கண்ட காட்சியில் கண்ணும் மனமும் களித்தல்; அந்தக் களிப்பில் நடம் ஆடுதல் - என்று இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று அருளாளர்கள் சொன்னதைப் போல்.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே


கூட்டியவா என்னைத் தன் அடியாரில் - என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்ததையும்

கொடிய வினை ஓட்டியவா - எனது கொடிய வல்வினைகளை ஓட்டியதையும்

என் கண் ஓடியவா - என்னை நோக்கி ஓடி வந்து அருள் செய்ததையும்

தன்னை உள்ள வண்ணம் காட்டியவா - உனது மெய்யுருவை உள்ளவண்ணம் காட்டியதையும்

கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா - அப்படித் திருவுருவைக் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றதையும்

ஆட்டியவா நடம் - அந்தக் களிப்பில் என்னை நடம் ஆட்டிவைப்பதும் (என்னே உன் கருணை?)

ஆடகத் தாமரை ஆரணங்கே - பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகானவளே

***

இந்தப் பாடலில் கூட்டியவாறும், ஓட்டியவாறும், ஓடியவாறும், காட்டியவாறும், களிக்கின்றவாறும், ஆட்டியவாறும் என்ற சொற்கள் ஈறு கெட்டு கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா, காட்டியவா, களிக்கின்றவா என்று நின்றன.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கூட்டினியே என்று நிறைய இந்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆரணங்கே என்று நிறைய அடுத்தப் பாடல் அணங்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா

மோனை: கூட்டியவா - கொடியவினை, ஓட்டியவா - ஓடியவா - உள்ளவண்ணம், காட்டியவா - கண்ட - கண்ணும் - களிக்கின்றவா, ஆட்டியவா - ஆடக - ஆரணங்கே.

Sunday, February 24, 2008

கயவரோடு இனி என்ன கூட்டு? (பாடல் 79)


எல்லாம் வல்ல தெய்வத்தை வழிபட விரும்பும் மனம் நமக்கு இருக்கிறது. அப்படி இருந்தும் தெய்வத்தை நம்பாமல் கிண்டலும் கேலியும் பேசி பழி பாவங்களே செய்து நரக வழியிலேயே செல்ல விரும்பும் கயவர்களோடு நமக்கு ஏன் கூட்டு மனமே?

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு - அபிராமவல்லியின் திருவிழிகளுக்கு எம் மேல் தனிப்பட்ட அருள் கட்டாயம் இருக்கிறது.

வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு - நமக்கோ வேதங்கள் காட்டுகின்ற வழிகளிலேயே அவளை வழிபட மனம் உண்டு.


அவ்வழி கிடக்க - அப்படிப்பட்ட நல்வழிகள் இருக்கும் போது

பழிக்கே சுழன்று - தேவையின்றி கெட்ட வழியிலேயே திரிந்து

வெம்பாவங்களே செய்து - கொடிய பாவங்களையே செய்து

பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் - பாழும் நரகக் குழியிலேயே அழுந்தி வாடும்


கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே - கெட்டவர்கள் தம்மோடு இனி என்ன தொடர்பு?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விழிக்கே என்று நிறைய இந்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கூட்டினியே என்று நிறைய அடுத்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விழிக்கே, வழிக்கே, பழிக்கே, குழிக்கே

மோனை: விழிக்கே - உண்டு - வல்லிக்கு - வேதம், வழிக்கே - வழிபட - உண்டு - வழிகிடக்க, பழிக்கே - பாவங்களே - பாழ்நரக, குழிக்கே - கயவர் - கூட்டினியே

Friday, February 22, 2008

உன் திருவுருவம் என் கண்களில் நிறைகின்றதே (பாடல் 78)


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் - புகழ்ந்து பேசத்தக்க பொற்குடம் போன்ற உன் திருமுலைகளின் மேல்


அப்பும் களப அபிராம வல்லி - பூசப்பட்ட சந்தன மணம் கமழும் அபிராமவல்லியே!


அணி தரளக் கொப்பும் - நீ அணிகின்ற முத்துக் கொப்பும்

வயிரக் குழையும் - வைரத் தோடுகளும்

விழியின் கொழுங்கடையும் - அருளைச் சிந்தும் உன் கடைக்கண் பார்வையையும்

துப்பும் நிலவும் - அன்பைச் சிந்தும் நிலவு போன்ற திருமுகமும்
எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - என் இரு விழிகளிலும் நிலைத்து நிற்கும் வண்ணம் செய்துவைத்தேன்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் செப்புவரே என்று நிறைய இந்தப் பாடல் செப்பும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விழிக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: செப்பும், அப்பும், கொப்பும், துப்பும்

மோனை: செப்பும் - திருமுலைமேல், அப்பும் - அபிராமவல்லி - அணிதரள, கொப்பும் - குழையும் - கொழுங்கடையும், துப்பும் - துணைவிழிக்கே.

Monday, February 18, 2008

நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவோம் (பாடல் 77)


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே


பயிரவி - கொடியவர்களுக்கு அச்சம் தரும் வடிவை உடையவளே


பஞ்சமி - ஐந்து தொழில்கள் உடையவளே


பாசாங்குசை - பாசமும் அங்குசமும் ஏந்தியவளே


பஞ்சபாணி - ஐந்து மலர்க்கணைகள் தாங்கியவளே


வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சகர்களின் உயிரை காணிக்கையாக ஏற்று உண்ணும் உயர் சண்டிகையே


காளி - மகாகாளியே


ஒளிரும் கலா வயிரவி - ஒளிவீசும் கலைகளைத் தருபவளே


மண்டலி - சூரிய, சந்திர மண்டலங்களிலும் வழிபடுவோர் உருவாக்கும் சக்கர மண்டலங்களிலும் வசிப்பவளே


மாலினி - மாலைகள் சூடியவளே


சூலி - சூலத்தை ஏந்தியவளே


வராகி - வராக உரு கொண்டவளே


என்றே - என்றென்றே அடியார்கள்


செயிர் அவி நான்மறை சேர் - குற்றங்குறைகளைத் தீர்க்கும் நான்மறைகளில் கூறப்பட்ட


திருநாமங்கள் செப்புவரே - உனது திருநாமங்களைச் சொல்லுவார்கள்.

இந்தப் பாடல் ஒரு நாமாவளியாகவே அமைந்திருக்கிறது. புரிந்த வரையில் பொருள் சொல்லியிருக்கிறேன். சரியான பொருள் சொல்லவில்லை என்றால் திருத்துங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பயிரவியே என்று நிறைய இந்தப் பாடல் பயிரவி என்று தொடங்கியது. இந்தப் பாடல் செப்புவரே என்று நிறைய அடுத்தப் பாடல் செப்பும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பயிரவி, உயிரவி, வயிரவி, செயிரவி

மோனை: பயிரவி - பஞ்சமி - பாசாங்குசை - பஞ்சபாணி, உயிரவி - உண்ணும் - உயர்சண்டி - ஒளிரும், வயிரவி - வராகி, செயிரவி - சேர் - செப்புவரே.

Wednesday, February 13, 2008

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் (பாடல் 76)


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் - எல்லா நேரங்களிலும் உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.


நின் குறிப்பு அறிந்து - உன் திருவருளைத் துணையாகக் கொண்டு

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி - யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை.


வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் - வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றைப்பூக்களைச் சூடிய திருமுடியை உடைய சிவபெருமானின்


ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் - உடம்பில் ஒரு பாகத்தை உன் உரிமையாகக் கொண்டு அங்கே குடிபுகுந்தாய்


பஞ்ச பாண பயிரவியே - ஐந்து மலர்க்கணைகளைக் கொண்டு உலக நடப்பை எல்லாம் நடத்தும் அம்மையே

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் குறித்தவரே என்று நிறைய இந்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பயிரவியே என்று நிறைய அடுத்தப் பாடல் பயிரவி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குறித்தேன், மறித்தேன், வெறித்தேன், பறித்தே

மோனை: குறித்தேன் - கோலம் - குறிப்பு, மறித்தேன் - மறலி, வெறித்தேன் - வேணிப்பிரான், பறித்தே - பஞ்ச - பாண - பயிரவியே.

Tuesday, February 05, 2008

கொங்கிவர் பூங்குழலாள் (பாடல் 75)


முதல் வார்த்தையில் பாராட்டிவிட்டு இரண்டாவது வார்த்தையில் சபிப்பதைப் போல் பாடியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாடலைப் பாருங்கள். உண்மையில் அந்த சாபமும் வாழ்த்து தான் என்பது கொஞ்சம் நெருங்கிப் பொருளைப் பார்த்தால் புரிகிறது.

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் - பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்


தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை - குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்)


மால் வரையும் - மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்

பொங்கு உவர் ஆழியும் - அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும்


ஈரேழ் புவனமும் - பதினான்கு உலகங்களையும்


பூத்த உந்திக் - தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம்


கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்குவரே என்று நிறைய இந்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் குறித்தவரே என்று நிறைய அடுத்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்குவர் - மங்குவர் - பொங்குவர் - கொங்கிவர்

மோனை: தங்குவர் - தாருவின் - தாயர், மங்குவர் - மண்ணில் - மால்வரையும், பொங்குவர் - புவனமும் - பூத்த, கொங்கிவர் - குழலாள் - குறித்தவரே.