Friday, February 22, 2008

உன் திருவுருவம் என் கண்களில் நிறைகின்றதே (பாடல் 78)


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் - புகழ்ந்து பேசத்தக்க பொற்குடம் போன்ற உன் திருமுலைகளின் மேல்


அப்பும் களப அபிராம வல்லி - பூசப்பட்ட சந்தன மணம் கமழும் அபிராமவல்லியே!


அணி தரளக் கொப்பும் - நீ அணிகின்ற முத்துக் கொப்பும்

வயிரக் குழையும் - வைரத் தோடுகளும்

விழியின் கொழுங்கடையும் - அருளைச் சிந்தும் உன் கடைக்கண் பார்வையையும்

துப்பும் நிலவும் - அன்பைச் சிந்தும் நிலவு போன்ற திருமுகமும்
எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - என் இரு விழிகளிலும் நிலைத்து நிற்கும் வண்ணம் செய்துவைத்தேன்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் செப்புவரே என்று நிறைய இந்தப் பாடல் செப்பும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விழிக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: செப்பும், அப்பும், கொப்பும், துப்பும்

மோனை: செப்பும் - திருமுலைமேல், அப்பும் - அபிராமவல்லி - அணிதரள, கொப்பும் - குழையும் - கொழுங்கடையும், துப்பும் - துணைவிழிக்கே.

4 comments:

said...

குமரா!
கொப்பு என்பதை மாலை எனக் கொள்ளலாமா?

said...

கொப்பு என்ற சொல்லுக்கு மரக்கிளை என்றொரு பொருளும் மகளிர் காதணி என்றொரு பொருளும் உண்டு ஐயா. இங்கே தரளக் கொப்பு என்றது முத்தினால் ஆன காதணியை.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'சகல போக சௌபாக்கியங்கள் உண்டாகும்'.

said...

பொருத்தமான பயனைச் சொன்னதற்கு நன்றிகள் சிவமுருகன்.