Monday, April 30, 2007

நாயகி நான்முகி நாராயணி (பாடல் 50)



நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

நாயகி - உலகனைத்துக்கும் தலைவி

நான்முகி - நான்முகனான பிரம்மதேவரின் சக்தி

நாராயணி - நாராயணனின் சக்தி

கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்

சாம்பவி - சம்புவான சிவபெருமானின் சக்தி

சங்கரி - இன்பம் அருள்பவள்

சாமளை - பச்சை வண்ணமுடையவள்

சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

மாலினி - பலவிதமான மாலைகளை அணிந்தவள்

வாராகி - உலகங்கள் காக்கும் வராக ரூபிணி

சூலினி - திரிசூலம் ஏந்தியவள்

மாதங்கி - மதங்க முனிவரின் திருமகள்

என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.

அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்.

***

அருஞ்சொற்பொருள்:

நளினம் - வடமொழியில் தாமரை
பஞ்ச - வடமொழியில் ஐந்து
சாயகம் - வடமொழியில் அம்பு
சம்பு, சங்கர - சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே.
சாமளை - ஷ்யாமளை என்னும் வடசொல் - பச்சைநிறத்தவள்
கியாதி - க்யாதி என்னும் வடசொல் - புகழ்.

அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும்.

எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி

மோனை: நாயகி - நான்முகி - நாராயணி - நளின, சாயகி - சாம்பவி - சங்கரி - சாதி, வாயகி - வாராகி - மாதங்கி, ஆய - அரண்.

Saturday, April 28, 2007

இசை வடிவாய் நின்ற நாயகியே (பாடல் 49)




குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர்

வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது - வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது

வளைக்கை அமைத்து - வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து

அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து - அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து

அஞ்சல் என்பாய் - அஞ்சாதே என்று கூறுவாய்

நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே - நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.

***

உடலில்லாமல் உயிர் இல்லை; உயிரில்லாமல் உடல் இல்லை. உடலை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயங்குகிறது. அந்த உடலும் உயிரும் இணைந்திருக்க ஒரு கால அளவு விதிக்கப்படுகிறது. அந்தக் கால வரம்பு வரை காலன் வருவதில்லை. அந்தக் கால வரம்பு முடிந்தவுடன் காலன் வரும் நேரத்தில் உயிர் இந்த உடலை விட்டுச் செல்ல பயந்து மறுகுகிறது. அந்த நேரத்தில் ஒரு நல்ல இசை கேட்டால் உயிருக்கு அந்த மரண வேதனை குறையும். இசையே வடிவாய் நிற்கும் அபிராமி அன்னை அந்த நேரத்தில் அழகில் சிறந்த மகளிர் சூழ வந்து தன் திருக்கரங்களை அசைத்து அஞ்சாதே என்று சொன்னால்? அந்த மரண பயமும் மரண வேதனையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுமில்லையா? அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் அபிராமி பட்டர்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் குரம்பையிலே என்று முடிந்தது. இந்தப்பாடல் குரம்பை அடுத்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் நாயகியே என்று முடிகிறது. அடுத்தப் பாடல் நாயகி என்று தொடங்கும். அடுத்த பாடல் பலருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான பாடல்.

எதுகை: முதல் இரண்டு சொற்களும் எதுகையாக அமைத்திருக்கிறார். குரம்பை அடுத்து - வரம்பை அடுத்து - அரம்பை அடுத்த - நரம்பை அடுத்து.

மோனை: குரம்பை - குடி - கூற்றுக்கு, வரம்பை - மறுகும் - வளைக்கை, அரம்பை - அடுத்த - அரிவையர் - அஞ்சல், நரம்பை - நின்ற - நாயகியே.

Tuesday, April 24, 2007

படரும் பரிமளப் பச்சைக்கொடி (பாடல் 48)



சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் - சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல்

ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் - ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை

பதித்து நெஞ்சில் - மனத்தில் நிலையாகக் கொண்டு

இடரும் தவிர்த்து - இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து

இமைப்போது இருப்பார் - இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்

பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே - குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.

***

ஐயன் சிவந்தவன். உயர்ந்தவன். சடைமுடியை உடையவன். நிலவை அணிந்தவன். இவற்றை எல்லாம் பார்த்தவுடன் அபிராமிபட்டருக்கு கொடுமுடியில் நிலாப்பிறையைக் கொண்ட சிறு குன்று நினைவிற்கு வந்தது போலும். அந்தக் குன்றில் படர்ந்த மணம்வீசும் பச்சைக் கொடி போல் அம்மை இருக்கிறாள். பொருத்தமான உவமைகள்.

அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது. சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே. அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம்.

***

அருஞ்சொற்பொருள்:

துன்றும் - தங்கும்
பரிமளம் - நறுமணம்
குடர் - குடல்
கொழு - இறைச்சி
குருதி - இரத்தம்
குரம்பை - உடல்

அந்தாதித் தொடை: சுடர்கின்றதே என்று நிறைந்தது சென்ற பாடல். சுடரும் என்று தொடங்கிற்று இந்தப் பாடல். குரம்பையிலே என்று முடிந்தது இந்தப் பாடல். குரம்பை அடுத்து என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.

எதுகை: சுடரும், படரும், இடரும், குடரும்

மோனை: சுடரும் - துன்றும் - சடைமுடி, படரும் - பரிமள - பச்சைகொடி - பதித்து, இடரும் - இமைப்போது - இருப்பார் - எய்துவரோ, குடரும் - கொழுவும் - குருதியும் - குரம்பையிலே.

Saturday, April 21, 2007

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)



வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே


வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே - என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்

ஒருவர் வீழும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை

விள்ளும் படி அன்று - அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை

வேலை நிலம் ஏழும் - கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்

பருவரை எட்டும் - எட்டு உயர்ந்த மலைகளும்

எட்டாமல் - எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)

இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.

***

நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார்.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும் அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும் சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது.

***

அருஞ்சொற்பொருள்:

விள்ளுதல் - பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல்

வேலை - கடல்

பரு வரை - பெரிய (பருத்த) மலை

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது. இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும்.

எதுகை: வாழும், வீழும், ஏழும், சூழும்

மோனை: வாழும் - ஒன்று - மனத்தே - ஒருவர், வீழும் - விள்ளும் - வேலை, ஏழும் - எட்டும் - எட்டாமல் - இரவு, சூழும் - சுடர்க்கு - சுடர்கின்றதே.

வாழும்படி - வீழும்படி, எட்டும் - எட்டாமல், இரவு பகல், போன்ற இடங்களில் முரண் தொடை அமைந்துள்ளது.

Friday, April 20, 2007

யானுன்னை வாழ்த்துவனே (பாடல் 46)



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் - வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும்

தம் அடியாரை - தம் அடியவர்களை

மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே - பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே.

புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே - அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே - நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.

***

பொருள் விளக்கம் தேவையில்லை. மிக எளிமையான பாடல் இது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வெறுக்கை அன்றே என்று முடிந்தது. இந்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வாழ்த்துவனே என்று முடிகின்றது. அடுத்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கும்.

எதுகை: வெறுக்கும், பொறுக்கும், கறுக்கும், மறுக்கும்.

மோனை: வெறுக்கும் - மிக்கோர், பொறுக்கும் - புதியது - புது, கறுக்கும் - கலந்த, மறுக்கும் - வாழ்த்துவனே.

Monday, April 16, 2007

பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே (பாடல் 45)



தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

தொண்டு செய்யாது - உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல்

நின் பாதம் தொழாது - உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்)

துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ - துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ)

அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ - அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே - அப்படியே நான் உன் மனம் விரும்பாததைச் செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும்.

***

பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு; அவர்களை 'தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ' என்கிறார். இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்; அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை - என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ. அதனை நான் அறியேன் என்கிறார்.

உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; அதனை அறியேன். ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.

***

அந்தாதித் தொடை: தொண்டு செய்தே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கிற்று. வெறுக்கை அன்றே என்று நிறைந்தது இந்தப் பாடல். அடுத்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கும்.

எதுகை: தொண்டு செய்யாது, பண்டு செய்தார், கண்டு செய்தால், மிண்டு செய்தாலும் என்று இரண்டிரண்டு எதுகைகள் அமைந்திருக்கின்றன.

மோனை: தொண்டு - செய்யாது - தொழாது - துணிந்து, பண்டு - பரிசு, கண்டு - கைதவம், மிண்டு - பொறுக்கை - பின் (பகரமும் மகரமும் மோனைகளாக அமையும்)

உளரோ இலரோ, கைதவமோ செய்தவமோ, நன்றே அன்றே - இந்த இடங்களில் முரண் தொடை அமைந்திருக்கிறது.

Saturday, April 14, 2007

எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் (பாடல் 44)



தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் - அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.

ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே - இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.

***

அன்னை ஆதிபராசக்தியே ஆதிப்பரம்பொருள்; அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்யும் வண்ணம் அவர் தம் சக்தியராய் தானே அமர்ந்தாள் என்பது சாக்த மரபு. அதனை இங்கே சொல்கிறார் பட்டர். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருக்கிறாள். அவள் எல்லா தெய்வங்களுக்கும் மேலை இறைவியும் ஆவாள்.
வேறு தெய்வங்கள் தரும் பயன்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு ஆதியான அன்னை அருள்வாள்; அவற்றிற்கு மேலாக முக்தியையும் அவள் அருள்வாள் என்பதால் வேறு தெய்வங்களைப் பணிய வேண்டிய தேவை இல்லை என்பதையும் கடைசி அடியினில் சொல்கிறார்.

***

அந்தாதித் தொடை:

இருந்தவளே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. இந்தப் பாடல் தவளே என்று தொடங்கியது. இந்தப் பாடல் தொண்டு செய்தே என்று நிறைவுறுகிறது. அடுத்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கும்.

எதுகை: தவளே, அவளே, இவளே, துவளேன் என்று அமைந்திருக்கிறது.

மோனை: தவளே - சங்கரனார் (தகரமும் சகரமும் மோனைகளாக அமையும்), அவளே - அவர் - அன்னை - ஆயினள் - ஆகையினால், இவளே - யாவர்க்கும் - இறைவியும் (இகரமும் யகரமும் மோனைகளாக அமையும்), துவளேன் - தெய்வம் - தொண்டு - செய்தே.

Saturday, April 07, 2007

இறைவர் செம்பாகத்து இருந்தவளே (பாடல் 43)



பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே


பரிபுரச் சீறடிப் பாசாங்குசை - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே

பஞ்சபாணி - ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே

இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

***

இறைவர் செம்பாகத்து இருந்தவளே என்று இறந்த காலத்தில் கூறியது காலம் காலமாக அவள் இறைவரின் செம்பாகத்தில் இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக - மதுரையில் பிறந்த நாள் முதல் வாழ்ந்தவன் நான் என்று மதுரையில் தற்போதும் வாழ்கின்றவர் சொன்னால் அது அவர் என்றைக்கும் மதுரையில் வாழ்ந்தவர்; இப்போதும் வாழ்கின்றவர் என்ற பொருளை வழங்குவதைப் போல.

***

அருஞ்சொற்பொருள்:

பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு

அந்தாதித் தொடை: சென்ற பாடலை நிறைத்த பரிபுரையே என்ற சொல்லை ஒட்டி இந்தப் பாடல் பரிபுர என்று தொடங்கியது. இந்தப் பாடலை நிறைக்கும் இருந்தவளே என்ற சொல்லை ஒட்டி தவளே என்று தொடங்கும் அடுத்தப் பாடல்.

எதுகை: பரிபுர, திரிபுர, புரிபுர, எரிபுரை என்று இந்தப் பாடலிலும் இரண்டிரண்டு எதுகைகளாக இருக்கின்றன.

மோனை: பரிபுர - பாசாங்குசை - பஞ்ச - பாணி, திரிபுர - சிந்துர - தீமை (சகரமும் தகரமும் மோனைகளாக அமையும்), புரிபுர - பொருப்பு, எரிபுரை - இறைவர் - இருந்தவளே (எகரமும் இகரமும் மோனைகளாக அமையும்)

சுந்தரி சிந்துர என்ற இடத்திலும் வஞ்சரை அஞ்ச என்ற இடத்திலும் ஒரே ஓசைகள் வரும்படி அழகுடன் அமைந்திருக்கிறது.

Friday, April 06, 2007

பனி மொழி வேதப் பரிபுரையே (பாடல் 42)



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே


இடங்கொண்டு விம்மி - தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி

இணை கொண்டு - ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து

இறுகி இளகி - இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும்

முத்து வடங்கொண்ட - முத்து மாலையை அணிந்தும் இருக்கும்

கொங்கை மலை கொண்டு - மலைகள் என்னும் படியான கொங்கைகளைக் கொண்டு

இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட - நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்த

கொள்கை நலம் கொண்ட நாயகி - பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட

பனி மொழி வேதப் பரிபுரையே - குளிர்ந்த பேச்சினையுடைய வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே.

**

அந்தாதித் தொடை: இடவே என்று சென்ற பாடல் நிறைந்தது; இந்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கியது. இந்தப் பாடல் பரிபுரையே என முடிகிறது; அடுத்தப் பாடல் பரிபுரச் சீறடி என்று தொடங்குகிறது.

எதுகை: இடம் கொண்டு, வடம் கொண்ட, நடம் கொண்ட, வடம் கொண்ட என்று இரண்டிரண்டு எதுகைகளாக அமைத்திருக்கிறார்.

மோனை: இடம் - இணை - இறுகி - இளகி, வடம் - வலிய, ந்டம் - நலம் - நாயகி - நல், படம் - பனி - பரிபுரை.

மற்றைய அணிகள்:
கொண்டு/கொண்ட என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
வலிய நெஞ்சைப் பொருதுவதற்கு மலை தானே வேண்டும். அதனையும் சொல்கிறார்.
இறுகி இளகி என்று முரண் தொடையைக் காட்டுகிறார்.
அம்மையின் அழகைப் போற்றும் இந்தப் பாடல் முழுதுமே அழகு.