Wednesday, February 15, 2006

147: ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? (பாடல் 19)

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து - நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

விழியும் நெஞ்சும் - பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

என்ன திருவுளமோ? - உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே. நான் வேண்டியவுடன் வான வெளியில் மாதொருபாகனாக திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை. கருத்தினுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் திறம் தான் என்னே?

Friday, February 10, 2006

144: காலன் வரும்போது வெளி நிற்கவே (பாடல் 18)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் - உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து - என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து

வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.