Sunday, February 25, 2007

தரங்கக் கடலுள் துயில் கூரும் விழுப்பொருளே (பாடல் 35)



திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? - திங்களை முடி மேல் சூடிய இறைவனின் நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள் எங்கள் தலைமேல் வைக்க எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?

எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? - எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?

தரங்கக் கடலுள் - அலைவீசும் கடலில்

வெங்கட் பணி அணை மேல் - வெம்மையான கண்களையுடைய பாம்பு படுக்கையின் மேல்

துயில் கூரும் விழுப்பொருளே - துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !

(பெருமாளும் அன்னையின் உருவம் என்று பட்டர் இந்தப் பாடலில் சொல்கிறார்)

படத்தில் இருக்கும் அன்னை சங்கு, சக்கரம், கதை ஏந்தி கருடனின் மேல் அமர்ந்திருக்கும் வைஷ்ணவி தேவி.

Saturday, February 24, 2007

ஞாயிறும் திங்களுமே (பாடல் 34)


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு - தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து

தான் போய் இருக்கும் - (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):

சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).

பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் - நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)

பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்

பொற் செந்தேன் மலரும் - பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்

அலர் கதிர் ஞாயிறும் - அன்றாடம் சுடர் வீசித் திகழும் கதிரவனும்

திங்களுமே - நிலவுமே.

Friday, February 23, 2007

உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே (பாடல் 33)




இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!

உன்னையே அன்னையே என்பன் - உன்னையே என் அன்னை என்பேன்.

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது - நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது

உழைக்கும் போது - அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது

ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய் - என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் பட்டரும் பட்டர் பிரானைப் போல.

Saturday, February 17, 2007

ஈசர் பாகத்து நேரிழையே (பாடல் 32)



ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

ஆசைக்கடலில் அகப்பட்டு - ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை - கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை

நின் பாதம் என்னும் வாசக் கமலம் - உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து - என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட நேசத்தை - என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை

என் சொல்லுகேன் - எப்படி புகழ்வேன்?

ஈசர் பாகத்து நேரிழையே - சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!

மிக எளிமையான பாடல்.

Thursday, February 15, 2007

ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை (பாடல் 31)




உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து - உமையன்னையும் சிவபெருமானும் ஒரே உருவாக வந்து

இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் - இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும் அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்

இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை - இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா, யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)

ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை - (பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே - அழகிய தோள் உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் தானாகவே அமைதியுற்றது.

***

அம்மையும் அப்பனுமாக ஒரே உருவமாக வந்து அவர்கள் அருளால் அவர்கள் தாளை வணங்க வைத்துவிட்டதால் இனி எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நான் எண்ணிக் குழம்ப வேண்டாம்; அவர்களே அவர்களின் கருணையால் வழியைக் காட்டிவிட்டார்கள்; பிறப்பிறப்புப் பிணியும் தீர்ந்தது; பெண்களின் மேல் வைத்த ஆசையும் (பெண்களுக்கு ஆண்கள் மேல் வைத்த ஆசை) தானாக அமைதியுற்றது; அதனால் புதிதாகவும் எந்த பந்த பாசமும் தோன்றாது.

Saturday, February 10, 2007

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே (பாடல் 30)



அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே


அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் - நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச் செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய்.

கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? - அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?

இனி நான் என் செயினும் - இனிமேல் நான் என் செய்தாலும்

நடுக்கடலுள் சென்றே விழினும் - அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்

கரையேற்றுகை நின் திருவுளமோ - என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் தானே?!

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே - இறை என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!

***

உன் உடைமையான நான் புலன் வழியே சென்று முட்டாள்த்தனமாக என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னைக் காக்க வேண்டியது உடையவளான உன் பொறுப்பு என்கிறார் பட்டர்.

Sunday, February 04, 2007

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே (பாடல் 29)



சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே


சித்தியும் - எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்

சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும் - அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்

சக்தி தழைக்கும் சிவமும் - பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும்

தவம் முயல்வார் முத்தியும் - தவம் புரிபவர்களுக்கு இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும்

முத்திக்கு வித்தும் - அந்த விடுதலைக்கு காரணமும்

வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் - விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய நினைவும்

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அந்த மனத்தின் உள்ளே நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும் திரிபுரசுந்தரி தானே.

Saturday, February 03, 2007

தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே (பாடல் 28)


சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

சொல்லும் பொருளும் என - ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல்லின் பொருள் எப்படி இயைந்து இணைந்து கூடி இருக்கிறதோ அது போல்

நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே - ஆனந்த நடனமாடும் உன் துணைவராம் சிவபெருமானுடன் இணைந்து ஓருடலாய் நிற்கும், மணம் வீசும் அழகிய பூங்கொடி போன்றவளே!

நின் புதுமலர்த்தாள் - அன்றலர்ந்த தாமரை போன்ற உனது இரு திருவடிகளை

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே - இரவும் பகலும் எப்போதும் தொழும் அடியார்களான அவர்களுக்கே

அழியா அரசும் - என்றும் அழியாத அரச போகமும்

செல்லும் தவநெறியும் - உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும் வழியான தவநெறியும்

சிவலோகமும் சித்திக்குமே - அந்தத் தவத்தின் பயனான சிவலோக முக்தியும் கிடைக்கும்.