Friday, August 29, 2008

எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)

அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது!
சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு!
அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு!

இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்! நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!
அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது!
இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்!

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை!
விழிக்கே அருள் உண்டு என்ற....
பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்!
வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்!

ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்!
பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு!
சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்!
ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது!

வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்!


மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்!
கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்!
நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க?

இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்!
நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:)

அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்!
அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை!

பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்!
கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா!


சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்?
இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்!
அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்!
கணவரின்,
59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்!

யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை!
அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்!
மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!!

அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா?
அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்!
நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்!
தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை!
சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்!
அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ,
அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்!
எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா!


வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!

கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!

இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?


இதோ வந்து விட்டோம்!
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!

இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!
ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!

பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)

அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!

அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்!
வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,

மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!

(கரதல கமல தீப சேவை)

அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி!
சங்குத் தோளிலே செங்கரும்பு!
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்!
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)
சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!


அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்!
இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்?
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி!
கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க,
மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே!
(நேத்ரானந்த தீப சேவை)

காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ,
அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்!
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)


**************************************************

அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்!

*************************************************

அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டியைத் தர வேண்டும் என்று சில நண்பர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொற்படி இதோ திரு. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதியின் ஒலிச்சுட்டிகள்:

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி, நான்காம் பகுதி.

திரு.புலவர் கீரன் அபிராமி அந்தாதிக்குச் சொன்ன விரிவுரையை இங்கே காணலாம்.

Tuesday, August 19, 2008

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

ஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையை

எங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியை

அண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளை

மாதுளம் பூ நிறத்தாளை - மாதுளம் பூ நிறம் கொண்டவளை

புவி அடங்கக் காத்தாளை - எல்லா உலகங்களும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு அவற்றைக் காப்பவளை

ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை - உலக இயக்கத்திற்கு அடிப்படையான ஐந்து மலர்க்கணைகளையும் கரும்பு வில்லையும், அவற்றுடன் பாசத்தையும் அங்குசத்தையும் அழகிய திருக்கைகளில் ஏந்தியிருப்பவளை

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - மூன்று திருக்கண்களைக் கொண்டவளைத் தொழுபவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை.

***

அபிராமி அந்தாதிப் பனுவலின் நூற்பயன் பாடல் இது. என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஆத்தா என்றோ அம்மா என்றோ அவளை அழைப்பதில் தானே நமது எல்லா உணர்வுகளும் இணைந்து இயங்கி வருகின்றன. அந்தச் சொல்லைக் கொண்டு இந்தப் பாடல் தொடங்குகிறது. தொடர்ந்து அன்னையின் திருவுருவ தியானம் நடைபெறுகிறது. அத்துடன் அவள் மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறாள் என்பதால் 'அண்டம் எல்லாம் பூத்தாளை' என்பதன் மூலம் பிரம்ம ஸ்வரூபிணியாக இருப்பதையும் 'புவியடங்கக் காத்தாளை' என்பதன் மூலம் விஷ்ணு ரூபிணியாக இருப்பதையும் 'முக்கண்ணியை' என்பதன் மூலம் சிவஸ்வரூபிணியாக இருப்பதையும் இந்தப் பாடல் சொல்கிறது. அவை அப்படியே முன்பொரு பாடலில் 'பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று சொன்னதன் பிரதிபலிப்பு போல் இருக்கிறது.

அப்படிப்பட்ட அன்னையைத் தொழுவோர்க்கு இது கிடைக்கும் அது கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் சொல்லிவிட்டது.

***

எதுகை: ஆத்தாளை, பூத்தாளை, காத்தாளை, சேர்த்தாளை

மோனை: ஆத்தாளை - அபிராமவல்லியை - அண்டமெல்லாம், பூத்தாளை - பூ - புவியடங்க, காத்தாளை - கரும்புவில்லும், சேர்த்தாளை - தொழுவார்க்கு - தீங்கும்.

***
அன்னையின் திருப்படத்தைத் தந்துதவிய கவிநயா அக்காவிற்கு நன்றிகள்.

Friday, August 01, 2008

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்)


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி - காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே

கழையைப் பொருத திருநெடுந்தோளும் - மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும்

கருப்பு வில்லும் - திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் - கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்

வெண் நகையும் - வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும்

உழையைப் பொரு கண்ணும் - மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும்

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே - உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன.

***

அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் இது. முதல் வாசிப்பில் அன்னையை மட்டுமே அவளின் திருத்தோற்றத்தை மட்டுமே புகழ்வது போல் தோன்றினாலும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் அன்னையையும் அப்பனையும் அவர்கள் இணைந்திருக்கும் திருக்கோலத்தையும் புகழ்வது தெரிகிறது. முதல் வாசிப்போடு நிறுத்தாமல் ஆழ்ந்த நோக்கையும் தந்தருளியதற்கு அன்னையின் திருவடிகளுக்கு எல்லையில்லாத கோடி வணக்கங்கள்.

குழை என்றால் தழை, மெல்லிய இலை என்பது முதற்பொருள். இலை தழைகளை அழகுடன் காதணியாக அணிந்து கொண்ட நாட்களில் இச்சொல் காதணிக்கும் பெயர் ஆகி தற்போது குழை என்றால் காதணியென்றே பொருள் தருகின்றது. குழையைத் தழுவும் கொன்றை மாலை என்னும் போது அழகிய மெல்லிய இலைகளையும் சேர்த்துக் கட்டிய கொன்றை மாலை என்றும் பொருள் கொள்ளலாம். குழை என்றால் காதணி என்ற பொருளைக் கொண்டால் கழுத்திலும் தோளிலும் போட்டுக் கொண்டிருக்கும் மாலை காதில் அணிந்துள்ள குழைகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கின்றது என்று பொருள் கிடைக்கிறது. அப்படி குழைகளைத் தழுவ வேண்டும் என்றால் அந்த மாலை மிகவும் நெருக்கமாகவும் நிறைய மலர்களையும் வைத்து மிகச் சிறப்பாகத் தொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அபிராமி பட்டரின் திருவுள்ளத்தில் உதிக்கும் அன்னை அப்படிப்பட்ட மாலையை அணிந்து கொண்டிருக்கிறாள்.

இப்படி முதல் பார்வையில் தோன்றிய முதல் வரி ஆழ் நோக்கில் பார்க்கும் போது வேறு ஆழ்ந்த பொருளைத் தருகிறது. தார் என்பது ஆண்டாள் மாலை என்பார்களே அது போல் இருபுறமும் இணையாமல் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மாலை. அது ஆண்களுக்கு உரியது. வட்டவடிவில் தொடுக்கப்படுவது பெண்களுக்கும் வட்டமாகத் தொடுக்காமல் கழுத்தைச் சுற்றி அணிந்து தொடை, முழங்காலைத் தொடும் படி அமைப்பது ஆண்களுக்கும் என்று இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். கண்ணனுக்கு எனத் தொடுக்கப்பட்ட 'தார்' என்னும் மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்க்கிறாள். அவளுக்கு என்று தொடுக்காததால் அது வட்ட வடிவமாக அமையவில்லை. ஆண்டாள் அன்று அந்தத் தாரை அணிந்து அழகு பார்த்த நாள் முதல் பெண்களுக்கும் சிறப்பாக கோதைக்கு உரிய மாலை இது என்று ஆகி அதற்கே 'ஆண்டாள் மாலை' என்று பெயர் அமைந்துவிட்டது. இங்கே அபிராமி பட்டர் மாலை என்று சொல்லாமல் தார் என்று சொல்கிறாரே என்று ஒரு நொடி தயங்கும் போது அந்தத் தாரும் கொன்றையந்தார் என்று பார்த்து 'ஆகா. இதனையா சொல்கிறார் பட்டர்' என்ற வியப்பு தோன்றிவிடுகிறது.

இதற்கு மேலும் ஆராய்ச்சி தேவையா? கொன்றை மலர் யாருக்குரியது? ஐயனுக்கு உரியதன்றோ? கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட தாரை அணிந்தவர் சிவபெருமான் தானே. அந்தக் கொன்றையந்தார் இப்போது அன்னையின் திருமேனியின் மேல். வந்தது எப்படி? அவன் அணிந்து இவளுடன் இணையும் போது தந்தான் போலும். இல்லையேல் இவளும் ஆண்டாளைப் போல் அவன் அணிவதற்கு முன்னால் அணிந்து கொண்டாள் போலும். இல்லையேல் அவன் அணிந்திருப்பது இவளது குழையைத் தழுவி இவள் கொங்கைகளை மணக்க வைக்கும் படி இருவரும் இணைந்திருக்கிறார்கள் போலும்.

மன்மதனுக்கு வெற்றியைத் தரும் கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்திய திருவுருவத்தை இங்கே சொன்னதால் ஐயனும் அம்மையும் இணைந்திருக்கும் திருக்கோலத்தைத் தான் பட்டர் சொல்கிறார் என்று தோன்றுகிறது. மூங்கிலை விட மென்மையான அழகிய திருத்தோள்களும் மானை வெல்லும் மருண்ட திருக்கண்களும் திருக்கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் ஐம்பாணங்களும் அடியார்களுக்கு ஆதரவு தரும் புன்னகையும் பட்டர் திருவுள்ளத்தில் எப்போதும் உதிப்பதைப் போல் அடியோங்கள் உள்ளங்களிலும் எப்போதும் உதிக்கட்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கனங்குழையே என்று நிறைய இந்தப் பாடல் குழையை என்று தொடங்கியது. இந்தப் பாடல் உதிக்கின்றவே என்று நிறைய இந்தப் பாடல் அபிராமி அந்தாதியின் இறுதிப் பாடல் என்பதால் அபிராமி அந்தாதியின் முதல் பாடல் உதிக்கின்ற என்று தொடங்கியது. ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை. அப்படி அமைக்கும் போது இறுதிப் பாடலின் இறுதிச் சொல்/எழுத்து முதல் பாடல் தொடங்கிய சொல்லாகவோ எழுத்தாகவோ அமைக்கும் போது முழுப்பனுவலும் ஒரு மாலையைப் போல் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த அபிராமி அந்தாதி பனுவல் அன்னையின் திருமேனியில் திகழ்கின்ற மாலையாகிறது.

எதுகை: குழையை, கழையை, விழைய, உழையை

மோனை: குழையை - கொன்றை - கமழ் - கொங்கை, கழையை - கருப்புவில்லும், விழைய - வேரியம் - வெண் நகை, உழையை - உதிக்கின்றவே.

Monday, July 28, 2008

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே (பாடல் 99)
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை - கடம்பங்காட்டின் நடுவே குயிலாக இருப்பாள்கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை - குளிர் நிறைந்த இமய மலையில் வியக்கத்தக்க அழகுடன் கூடிய மயிலாய் இருப்பாள்வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் - வானத்தில் வந்து உதித்த கதிரவனாக இருப்பாள்கமலத்தின் மீது அன்னமாம் - தாமரையின் மீது அமர்ந்திருக்கும் அன்னத்தைப் போன்றவள்கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - கயிலாயத்தில் வாழும் சிவபெருமானுக்கு இமயமலையரசனான இமவான் முன்னர் அன்புடன் அளித்த அழகிய காதணிகளை அணிந்த அம்மை.


கடம்ப மலர்கள் அம்மைக்கும் பிடிக்கும் அறுமுகனுக்கும் பிடிக்கும். கடம்ப மலர்கள் சூடி மகிழ்கிறான் குமரன். அந்த கடம்ப வனத்திடை வசித்து மகிழ்கிறாள் அன்னை. கடம்பவனம் எங்கும் இருக்கலாம். ஆனால் பொதுவாக 'கடம்பவனம்' என்றதும் நினைவிற்கு வருவது மதுரை. மீனாட்சி திருக்கோவிலின் தல மரமும் கடம்பமே. இந்தக் கடம்பவனத்திலே வசிப்பவள் பச்சை நிறம் கொண்டவள். கிளியைக் கையில் கொண்டவள். அவளது இன்னொரு பெயர் மாதங்கி. அவள் இசையில் வல்லவள். அவளை வணங்குபவர்களுக்கு இசையை அருள்பவள். இசையின் உருவகம் குயில். இசையை அருள்வதாலும் இசையில் வல்லவள் என்பதாலும் கடம்ப மரத்தின் மேல் வசிக்கும் குயிலென அன்னையைக் கூறினார் போலும்.

குயிலுக்கு குரல் அழகு உண்டு. மேனி அழகு இல்லை. மயிலுக்கோ குரல் அழகு இல்லை. மேனி அழகு உண்டு. அன்னையோ குரல் அழகும் கொண்டவள்; வியக்கத்தக்க மேனி அழகும் கொண்டவள். அதனால் தான் குயிலைப் போலும் இருக்கிறாள்; மயிலைப் போலும் இருக்கிறாள் என்றார் போலும்.

ஹிம என்றால் குளிர் என்று பொருள். குளிர் மிகுதியாகக் கொண்ட மலையாதலால் ஹிமயம், ஹிமாசலம், ஹிமாலயம் என்ற பெயர்கள் அந்த மலைத்தொடருக்கு உண்டானது. அந்தக் குளிர்ந்த இமயாசலத்தில் அழகிய மயிலாக இருக்கிறாள் அன்னை.

காலையில் செங்கதிராம் உச்சி வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பராசக்தி நீலவானத்தினிலே


என்று பாடினான் ஒரு புலவன். அபிராமி பட்டர் அன்னையை 'விசும்பில் வந்துதித்த வெயில்' என்று சொன்னதை வைத்துத் தான் பாடினான் போலும் அந்தப் புலவனும். உலகங்களுக்கெல்லாம் ஒளி தரும் சோதிகளாக இருப்பவள் அன்னை. அறிவும் தெளிவும் தருபவள் அன்னை.

தாமரை மலருக்கும் அன்னத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆன்மிக மலர்ச்சிக்குத் தாமரையை குறியீடாகச் சொல்லுவார்கள். ஆன்மிக மலர்ச்சி அடைந்த அறிவும் தெளிவும் நிறைந்த ஆன்றோர்களை அன்னப்பறவையாகச் சொல்வார்கள். ஹம்ஸர்கள் என்றும் பரமஹம்ஸர்கள் என்றும் அவர்களை அழைப்பார்கள். அப்படிப்பட்ட பரமஹம்ஸர்களைக் குறிக்க தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவை குறியீடாக அமையும். இராமகிருஷ்ண இயக்கத்தின் குறியீடாகவும் அதனைக் காணலாம். அப்படி பரமஹம்ஸர்களின் மொத்த உருவமாக அமர்பவள் அன்னை.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பூங்குயிலே என்று நிறைய இந்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கனங்குழையே என்று நிறைய அடுத்தப் பாடல் குழையை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குயிலாய், மயிலாய், வெயிலாய், கயிலாயருக்கு

மோனை: குயிலாய் - கடம்பாடவி - கோலவியன், மயிலாய் - வந்து, வெயிலாய் - விசும்பில், கயிலாயருக்கு - கனங்குழையே.

Wednesday, July 16, 2008

மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் (பாடல் 98)


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே


தை - தையலே; பெண்களில் சிறந்தவளே.

வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு - நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு

கை வந்த தீயும் - கையிலிருந்த தீயும்

தலை வந்த ஆறும் - திருமுடி மேல் இருந்த கங்கையும்

கரந்ததெங்கே - மறைந்ததெங்கே?

மெய் வந்த நெஞ்சின் அல்லால் - உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி

ஒரு காலும் - ஒரு போதும்

விரகர் தங்கள் - வஞ்சகர்களில்

பொய் வந்த நெஞ்சில் - பொய் தங்கும் நெஞ்சில்

புகல் அறியா மடப்பூங்குயிலே - புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே

***

திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது.

அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தையலையே என்று நிறைய இந்தப் பாடல் தைவந்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் பூங்குயிலே என்று நிறைய அடுத்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தைவந்து, கைவந்த, மெய்வந்த, பொய்வந்த

மோனை: தைவந்து - தாமரை, கைவந்த - கரந்தது, மெய்வந்த - விரகர், பொய்வந்த - புகலறியா - பூங்குயிலே.

Tuesday, June 17, 2008

புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே (பாடல் 97)


ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


ஆதித்தன் - அதிதியின் மகனான கதிரவன்

அம்புலி - நீரைப் போல் குளிர்ந்த நிலவன்

அங்கி - தீக்கடவுளாம் அக்கினி

குபேரன் - செல்வத்திற்குத் தலைவனாம் குபேரன்

அமரர் தம் கோன் - மரணமிலாதவராம் விண்ணவர்கள் தம் தலைவன் இந்திரன்

போதிற் பிரமன் - தாமரைப்பூவில் பிறந்த/வாழும் பிரமன்

புராரி - திரிபுரங்களை அழித்த சிவன்

முராரி - முராசுரனை அழித்த திருமால்

பொதியமுனி - பொதிகை மலையில் வாழும் அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் - போரிட்டு அழிக்கும் படைக்கலம் கொண்ட கந்தன்

கணபதி - கணங்களின் தலைவன் கணபதி

காமன் - மன்மதன்

முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் - முதலான சாதனை புரிந்தவர் எண்ணற்றவர்

போற்றுவர் தையலையே - எப்போதும் அன்னையைப் போற்றுவார்கள்.

அன்னையைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியம் செய்து அந்தப் புண்ணியத்தால் புண்ணியர் என்ற பெருமையைப் பெற்று அதனை பயனால் உயர்ந்த இடத்தைப் பெற்று சாதித்தவர்கள் எண்ணற்றவர்கள். எல்லோரையும் பட்டியலிட முடியாவிட்டாலும் முடிந்தவரை செய்யலாம் என்று தொடங்கினார் போலும் அபிராமி பட்டர்.

அப்படி எண்ணியவுடன் கண்ணெதிரே தோன்றினான் கதிரவன். அவனைச் சொன்னார் முதலில். அவன் தன் ஒளியையும் வெம்மையையும் பெற்றது அன்னையிடம். அவனைச் சொன்னவுடன் அம்புலி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் குளுமையைப் பெற்றது அன்னையிடம். உலகத்தில் முச்சோதி என்று புகழப்படும் கதிரவன், நிலவன், தீ என்ற மூவரில் அடுத்ததாக அக்கினி நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அவன் தன் திறனையெல்லாம் பெற்றது அன்னையிடம். அக்கினி தேவர்களில் ஒருவனாகவும் இருப்பதால் அடுத்து இரு தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். குபேரனையும் இந்திரனையும் சொன்னார். குபேரன் செல்வத்திற்கெல்லாம் அதிபதியாக இருப்பதும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் இருப்பதும் அன்னையின் அருளால்.

தேவர்களின் தலைவன் என்று இந்திரனைச் சொன்ன பிறகு அவனுக்கும் மேலான முப்பெரும்தேவர்கள் நினைவிற்கு வந்தார்கள். பூவில் பிறந்த பிரமனையும், சிவனையும், திருமாலையும் சொன்னார். இம்மூவரும் தத்தம் படைத்தல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களைச் செய்யும் வல்லமை பெற்றது அன்னையின் திருவருளால். அடுத்து யார் என்று சிந்திக்க பொதிய முனி நினைவிற்கு வந்தார். அகத்தியர் தமிழைப் பெற்று வளர்த்ததும் அன்னையின் திருவருளால். தமிழ் என்றதும் காதிப்பொருபடை கந்தன் நினைவிற்கு வந்தான். அவனையும் சொன்னார். அன்னையின் சக்தியே உருவான சக்திவேலைக் கொண்டு தானே கந்தன் போரிடுகிறான். அந்தச் சக்தி வேலை குறிப்பாகச் சொல்லுவது போல் காதிப்பொருபடை என்ற அடைமொழியைக் கந்தனுக்குத் தந்தார். தம்பியைச் சொன்னவுடன் அண்ணன் நினைவு வந்தது. அவனையும் சொன்னார். எல்லோரையும் சொன்ன பின்னர் 'அடடா மிக முக்கியமான ஒருவனை விட்டுவிட்டோமே. அன்னையின் திருவருளால் அன்றோ இவன் காமேஸ்வரனையும் வெல்ல முடிகிறது' என்று எண்ணி காமனையும் சொன்னார். இனி சொல்லி முடியாது என்று எண்ணிலர் என்று நிறைவு செய்தார்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆதிபரே என்று நிறைய இந்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தையலையே என்று நிறைய அடுத்தப் பாடல் தைவந்து என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஆதித்தன், போதிற்பிரமன், காதிப்பொருபடை, சாதித்த

மோனை: ஆதித்தன் - அம்புலி - அங்கி - அமரர், போதில் - பிரமன் - புராரி - பொதியமுனி, காதிப்பொருபடை - கந்தன் - கணபதி - காமன், சாதித்த - தையலையே

Thursday, May 29, 2008

ஆமளவும் தொழுதால் ஏழுலகுக்கும் அதிபர் (பாடல் 96)


கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

கோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
அல்லியம் தாமரைக் கோயில் வைகும் - அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்
யாமளவல்லியை - இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை
ஏதம் இலாளை - குற்றமொன்றில்லாதவளை
எழுத அரிய - வரைவதற்கு எளிதில்லாத
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை - அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை
தம்மால் ஆமளவும் தொழுவார் - தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்
எழு பாருக்கும் ஆதிபரே - சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.

அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும்

மோனை: கோமளவல்லியை - கோயில், யாமளவல்லியை - ஏதம் - இலாளை - எழுதரிய, சாமளமேனி - சகலகலாமயில் - தன்னை - தம்மால், ஆமளவும் - ஆதிபரே.
***
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர்

Friday, May 16, 2008

நான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் (பாடல் 95)


நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே


நன்றே வருகினும் - எனக்கு நன்மைகளே விளைந்தாலும்

தீதே விளைகினும் - தீமைகளே விளைந்தாலும்

நான் அறிவது ஒன்றேயும் இல்லை - நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை

உனக்கே பரம் - உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம்.

எனக்கு உள்ளதெல்லாம் - என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம்

அன்றே உனது என்று அளித்து விட்டேன் - எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன்.

அழியாத குணக்குன்றே - என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே

அருட்கடலே - அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே


இமவான் பெற்ற கோமளமே - இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே.

அபிராமி அன்னையே! நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன். இனி மேல் எனக்கு நன்மைகளே வந்தாலும் தீமைகளே வந்தாலும் நான் அவற்றைப் பிரித்து அறிய மாட்டேன். அவை அனைத்துமே உன் அருளால் வருவதால் எல்லாமே எனக்கு நன்மையாகத் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பிரித்துப் பார்த்து நடத்திக் கொள்வதெல்லாம் உன் பரம்; உன் கடமை. அன்பு, அறிவு, அருள் போன்ற நற்குணங்களின் குன்றே. அவற்றுள்ளும் சிறந்த அருளின் கடலே. மலைமகளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நன்றே என்று நிறைய இந்தப் பாடல் நன்றே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கோமளமே என்று நிறைய அடுத்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நன்றே, ஒன்றேயும், அன்றே, குன்றே

மோனை: நன்றே - நான், ஒன்றேயும் - உனக்கே - உள்ளம், அன்றே - அளித்துவிட்டேன் - அழியாத, குன்றே - கோமளமே.

அபிராமி சமயம் நன்றே (பாடல் 94)


விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே


விரும்பித் தொழும் அடியார் - அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள்


விழி நீர் மல்கி - கண்களில் கண்ணீர் மல்கி


மெய் புளகம் அரும்பி - மெய் சிலிர்த்து


ததும்பிய ஆனந்தம் ஆகி - மகிழ்ச்சி பெருகித் ததும்பி


அறிவு இழந்து - அறிவு மயக்கம் உற்று


கரும்பின் களித்து - இனிய கரும்பினை உண்டது போல் களித்து


மொழி தடுமாறி - சொற்கள் தடுமாறி


முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் - இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால்


அபிராமி சமயம் நன்றே - அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே.

அபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர். கண்ணீர் மல்கி, மெய் சிலிர்த்து, மகிழ்ச்சி பெருகி, அறிவிழந்தவர் போல் சொற்குழறி பித்தரைப் போல் அன்னையின் மேல் அன்பு பெருகி வணங்குவது அடியார்களின் பக்திக்கு அடையாளங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரும்புவதே என்று நிறைய இந்தப் பாடல் விரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் நன்றே என்று நிறைய அடுத்தப் பாடல் நன்றே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரும்பி, அரும்பி, கரும்பின், தரும்பித்தர்

மோனை: விரும்பி - விழிநீர், அரும்பி - ஆனந்தம் - ஆகி - அறிவு, கரும்பின் - களித்து, தரும் - சமயம்.

Wednesday, May 14, 2008

தெய்வத்தைப் புகழ்வதெல்லாம் பெரும் நகைச்சுவை (பாடல் 93)


நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே

நகையே இது - பெரும் நகைச்சுவை இது.


இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு - இந்த உலகங்களை எல்லாம் பெற்ற நாயகிக்கு

முகையே முகிழ் முலை - முகிழ்த்தெழுந்த முலை மலர் மொட்டு போல் இருக்கிறது என்றும்

மானே முதுகண் - அழகிய நீண்ட கண்கள் மானைப் போல் இருக்கிறது என்றும்

முடிவுயில் அந்த வகையே பிறவியும் - சொல்லி முடியாத அளவிற்கு இருக்கும் வடிவங்களை உடைய இவளை

மலைமகள் என்பதும் - மலையரசனுக்கு மட்டுமே பிறந்தவளைப் போல் மலைமகள் என்பது

வம்பே - இப்படி இவளைப் புகழ முயல்வதெல்லாம் தேவையில்லாத செயல்களே

மிகையே இவள் தன் தகைமையை நாம் நாடி விரும்புவதே - இப்படி இவளது அறிய இயலாத பெருங்குணங்களை நாடித் தெரிந்து கொள்ள விரும்புவதும் முயல்வதும் நம் தகுதிக்கு மிகையே.

இறைவியின் பெருமைகளைப் பேசப் புகுந்து போற்றுதலாகச் சொல்லும் சொற்களெல்லாம் அவளது பெருமையின் முன் எவ்வளவு சிறுமையானது என்பதை 'தன்னைத் தானே நகைத்துக் கொள்ளும்' வகையில் சொல்கிறார் பட்டர். உலகத்து அழகெல்லாம் அவள் அழகாக இருக்க அதில் ஏதோ ஒரு பூவின் மொட்டினைப் போல் அவள் திருமுலை இருக்கின்றது என்பதுவும், எல்லாக் கண்களும் அவள் கண்களாக இருக்க அதில் ஏதோ ஒரு வகைக் கண்களைப் போல் அவள் திருக்கண்கள் இருக்கின்றன என்பதுவும் எல்லாப் பிறவிகளாகவும் அன்னையே இருக்க அவள் மலைமகள் மட்டுமே என்பதுவும் உலகங்களை எல்லாம் ஈன்ற நாயகியின் திருக்குணங்களை சிறியோர்கள் அறிய விரும்பி முயல்வதும் மிகையானது தானே; நகைப்பதற்கு உரியது தானே.

அடியேன் சிறிய ஞானத்தன் என்று தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுர வரிகளை அடியேனின் பதிவு முகவுரையில் இட்டிருக்கிறேன். அங்கும் நம்மாழ்வார் சொல்லுவது இதே கருத்தினைத் தான்.

***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் முகிழ்நகையே என்று நிறைய இந்தப் பாடல் நகையே என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரும்புவதே என்று நிறைய அடுத்தப் பாடல் விரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நகையே, முகையே, வகையே, மிகையே

மோனை: நகையே - நாயகிக்கு, முகையே - முகிழ் - முலை - மானே - முதுகண் - முடிவு, வகையே - வம்பே - மலைமகள், மிகையே - விரும்புவதே.

Thursday, May 08, 2008

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே (பாடல் 92)


பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பதத்தே உருகி - உன் திருப்பெயர்களையும் உன் புகழையும் கூறும் சொற்களிலே ஒரு சொல் சொன்னவுடனேயே உருகி

நின் பாதத்திலே மனம் பற்றி - உன் திருவடிகளிலே மனத்தை நிலைபெறச் செய்து

உந்தன் இதத்தே ஒழுக - உந்தன் திருவுளத்திற்கு இதமான படி செயல்பட

அடிமை கொண்டாய் - என்னை அடிமையாகக் கொண்டாய்.

இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன் - இனி மேல் நான் வேறொருவர் கருத்திலும் அறிவினை இழக்க மாட்டேன்.

அவர் போன வழியும் செல்லேன் - அவர்கள் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்.

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே - மும்மூர்த்திகளும் மற்ற எல்லோரும் போற்றும் அழகான புன்னகையை உடையவளே

தேவரும் யாவரும் போற்றும் அழகிய புன்னகையை உடையவளே! உன் பெயரைச் சொன்னாலே உருகி, உன் திருவடிகளிலேயெ மனத்தை வைத்து, உன் மனத்திற்கு இசைந்தபடி நான் நடந்து கொள்ளுமாறு என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டாய். எல்லோருக்கும் அடிப்படையான நீயே என்னை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த உலகத்தில் வாழும் யாருடைய கருத்தையும் நான் கேட்டு அவர்கள் வழி செல்லவும் வேண்டுமோ? தேவையில்லை. நீயே முதல் மூவருக்கும் யாவருக்கும் முதன்மையான பொருள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பதந்தருமே என்று நிறைய இந்தப் பாடல் பதத்தே என்று தொடங்கியது. இந்தப் பாடல் முகிழ்நகையே என்று நிறைய அடுத்தப் பாடல் நகையே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பதத்தே, இதத்தே, மதத்தே, முதத்தேவர்

மோனை: பதத்தே - பாதத்திலே - பற்றி, இதத்தே - இனி, மதத்தே - மதி - மயங்கேன், முதல் - மூவரும் - முகிழ்ந்கையே.

Tuesday, May 06, 2008

அடியாரைத் தொழுதால் ஐராவதம் ஏறி உலா வரலாம் (பாடல் 91)


மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

மெல்லிய நுண் இடை மின்னனையாளை - மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை


விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன்னனையாளை - விரிசடைக்கடவுளாகிய சிவபெருமானால் அணைக்கப்பட்ட மெல்லிய முலையை உடைய பொன் போன்றவளை


புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் - புகழ்ந்து வேதங்கள் சொன்ன முறைப்படி தொழுகின்ற


அடியாரைத் தொழுமவர்க்கு - அடியவர்களைத் தொழும் அடியார்க்கடியாருக்கு


பல்லியம் ஆர்த்தெழ - பலவித இசைக்கருவிகள் முழங்கி வர

வெண்பகடு ஊரும் பதம் தருமே - வெள்ளையானையாம் ஐராவதத்தின் மேல் ஏறி ஊர்ந்து வரும் பதவியாகிய இந்திரப் பதவியைத் தருவாள்.

அடியவர்களுக்கு அன்னை அருளும் பதங்களைச் சொல்லிக் கொண்டிருந்த பட்டர் இந்தப் பாடலில் அந்த அடியவரைத் தொழுபவர்களுக்கு என்ன பதம் கிடைக்கும் என்று சொல்கிறார். மெல்லிய நுண்ணிய இடையும், இறைவரால் அணைக்கப்பட்ட மென்முலையும் கொண்ட மின்னலையும் பொன்னையும் ஒத்த இறைவி, அவளை முறைப்படித் தொழும் அடியவர்களைத் தொழுபவர்களுக்கு, இந்திர பதவி முதலிய செல்வங்களை அருளுவாள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மெல்லியலே என்று நிறைய இந்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கியது. இந்தப் பாடல் பதந்தருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பதத்தே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மெல்லிய, புல்லிய, சொல்லிய, பல்லியம்

மோனை: மெல்லிய - மின்னனையாளை, புல்லிய - பொன்னனையாளை - புகழ்ந்து, சொல்லிய - தொழும் - தொழுமவர்க்கு, பல்லியம் - பகடூரும் - பதந்தருமே.

Tuesday, April 29, 2008

இனி எனக்குக் கிடைக்காத பொருள் எதுவுமில்லை (பாடல் 90)


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே


வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து - நான் பிறப்பிறப்பு சூழலில் தொடர்ந்து வருந்தாத வகையில் என் மனத்தையே அவள் வீற்றிருக்கும் தாமரையாகக் கொண்டு அவளாக அவள் கருணையினால் வந்து புகுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக - பல நாட்களாகப் பழகிய பழைய இருப்பிடத்தைப் போல் நிலையாக அமர்ந்துக் கொண்டாள்

இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை - இனி எனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. நான் அப்படியே விரும்பினாலும் கிடைக்காத பொருள் எதுவும் இல்லை.

விண் மேவும் புலவருக்கு - விண்ணில் வாழும் அறிவில் சிறந்த புலவராம் தேவர்களுக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே - விருந்தாக கடலில் விளைந்த மருந்தான அமுதத்தைப் பெற்றுத் தரும் மென்மையான இயல்புடையவளே.

கிடைத்தற்கு அரியது கடல் மருந்தான அமுதம். அதனையே அன்னை விண்ணவர்களுக்குப் பெற்றுத் தந்தாள். மோகினி உருவமாக பெருமாள் அந்த அமுதத்தைத் தேவர்களுக்குத் தந்ததாகப் புராணம் சொல்லும். அந்த மோகினி இந்த அபிராமி தான் என்கிறார் பட்டர். அப்படி கிடைத்தற்கரிய அமுதத்தையே பெற்றுத் தருபவள் என் மனத்தாமரையில் பழைய இருப்பிடம் போல் பல நாள் பழகிய இருப்பிடம் போல் வந்து அமர்ந்த பின்னர் எனக்கு வேறு ஏது குறை?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் வருந்தியுமே என்று நிறைய இந்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கியது. இந்தப் பாடல் மெல்லியலே என்று நிறைய அடுத்தப் பாடல் மெல்லிய என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: வருந்தாவகை, இருந்தாள், பொருந்தாது, விருந்தாக

மோனை: வருந்தா - வகை - வந்து, இருந்தாள் - இருப்பிடமாக - இனி, பொருந்தாது - பொருள் - புலவருக்கு, விருந்தாக - வேலை.

Tuesday, April 22, 2008

சிறக்கும் கமலத் திருவே (பாடல் 89)


சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

சிறக்கும் கமலத் திருவே
- தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளே! சிறப்பான செல்வ வடிவானவளே!

நின் சேவடி சென்னி வைக்க - உன் சிறந்த திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் - உயர்ந்த வானுலகத்தை அருளும் தரும் உன் துணைவராம் இறைவரும் நீயும்

துரியம் அற்ற உறக்கம் தர வந்து - தன்னைத் தான் அறியும் நான்காவது நிலையையும் தாண்டிய என்றும் நிலைத்த உறக்கமாம் சாக்காட்டைத் தர வந்து

உடம்போடு உயிர் உறவு அற்று - உடம்போடு உயிர் உறவு இல்லாமல் பிரிந்து

அறிவு மறக்கும் பொழுது - அறிவு மயக்கம் ஏற்படும் போது

என் முன்னே வரல் வேண்டும் - என் முன்னே வர வேண்டும்

வருந்தியுமே - வருந்தி அழைக்கின்றேன்.

தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் உயர்ந்த செல்வ வடிவானவளே! அபிராமி அன்னையே! உயர்ந்த வானுலகத்தை அருள்பவர்கள் நீயும் உன் துணைவரான இறைவரும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற இயற்கையான மூன்று நிலைகளிலும் வேறுபட்ட நான்காவது நிலையான 'தன்னைத் தான் அறிதல்' என்னும் ஞான நிலையாம் துரியமும் கடந்த நிலை என்றும் நீங்காத் துயில் கொண்டு நீயும் இறைவரும் அருள வானுலகம் அடைதல். அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சி இல்லை. என் உடம்போது உயிர் உறவு அறும் போது, மதி மயக்கம் ஏற்படும் போது உன்னை நினைப்பது எளிதில்லை. அதனால் இப்போதே வருந்தி வேண்டுகிறேன். அந்த நிலையில் நீயும் உன் துணைவரும் உங்கள் திருவடிகளை என் சென்னி மேல் வைக்க என் முன்னே வரல் வேண்டும்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சிறந்தவளே என்று நிறைய இந்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் வருந்தியுமே என்று நிறைய அடுத்தப் பாடல் வருந்தாவகை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: சிறக்கும், துறக்கம், உறக்கம், மறக்கும்

மோனை: சிறக்கும் - சேவடி - சென்னி, துறக்கம் - தரும் - துணைவரும் - துரியம், உறக்கம் - உடம்பொடு - உயிர் - உறவு, மறக்கும் - முன்னே.

Friday, April 18, 2008

தரமில்லாதவன் என்று தள்ளிவிடாதே (பாடல் 88)


பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே


பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் - உன்னையே கதி என்று அடைந்த உன் பக்தர்களின் நடுவினில் இழிந்தவனான நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்

தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது - தகுதி இல்லாதவன் இவன் என்று எண்ணி இழிந்தவனான என்னைத் தள்ளாதே

தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய - தகாதவற்றைச் செய்த திரிபுராசுரர்களின் முப்புரங்களும் எரியும் படி மேரு மலையை வில்லாக ஏந்திய

போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான் - தாமரை மலரில் பிறந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சினம் கொண்டு அறுத்த கையை உடையவனான சிவபெருமானின்

இடப்பாகம் சிறந்தவளே - இடப்பாகத்தில் நீங்காமல் நிலை பெற்றவளே.

தகாதன செய்த திரிபுராசுரர்களைக் கொன்றவனும் தகாதன பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையை அறுத்தவனும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து விளங்கும் நீயும் 'தகாதன செய்தவன் இவன்; நம் பத்தருக்குள் இருக்கத் தகுதி இல்லாதவன்' என்று என்னைத் தள்ளக் கூடாது. நானும் உன்னையே கதி என்று அடைந்தேன்.

ஈருயிர் ஓருடல் என்று உலகவழக்கில் ஒற்றுமையைக் குறிக்கச் சொல்லுவார்கள். இங்கோ ஒரே உடலில் ஒரு பக்கம் ஐயனும் ஒரு பக்கம் அம்மையுமாகக் காட்சி தருகிறார்கள். ஐயனோ தகுதியில்லாதவர்கள் என்றால் தண்டிக்காமல் விடமாட்டான். அப்படிப் பட்டவனைச் சரணடைந்தாலும் நான் செய்த குற்றங்களை மனத்தில் கொண்டு என்னைத் தண்டித்துவிடுவான் என்று அன்னையே உன்னைச் சரணடைந்தேன். ஆனால் நீயோ அவன் உடலில் ஒரு பாகத்தில் சிறப்பாக விளங்குகிறாய். நீயும் அவனைப் போலவே தகுதியில்லாதவர்களைத் தண்டித்துவிடுவாயோ? அன்னையே நீ அப்படி செய்யக் கூடாது. உன்னையன்றி மற்றோர் கதி இல்லை என்று உன்னையே அடைந்துவிட்டேன்.

***
தரியலர் என்று தகாதன செய்த திரிபுரர்களைக் குறித்தார் பட்டர். மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுர அசுரர்களுடன் போருக்குச் சென்றதனால் பொருப்பு வில் வாங்கிய என்றார் பட்டர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன் தன்னைப் படைத்தவர் திருமால்; அவனும் சிவபெருமானும் ஓருருவானவர்கள் என்பதை மறந்துவிட்டு, தனக்கும் ஐந்து தலைகள் சிவனுக்கும் ஐந்து தலைகள் - அதனால் தானும் சிவனும் ஒரே தரத்தவர் என்று தகாதன பேசினான். அதனால் சினந்த சிவபெருமான் அவன் ஐந்தாவது சிரத்தை அறுத்தார். திருமாலின் உந்தியில் பிறந்தவர் என்பதைக் குறிக்க 'போதில்' என்றார் பட்டர். சினம் கொண்டு சிரத்தை அறுத்தான் சிவன் என்பதைக் குறிக்க 'செற்ற' என்றார் பட்டர். அப்படி சினம் கொண்டு அறுத்த சிரம் சிவபெருமானின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டதைக் குறிக்க 'கையான்' என்று சொன்னார் பட்டர். இப்படி திரிபுராசுரர்களைப் போல் தகாதன செய்தும் பிரம்மனைப் போல் தகாதன பேசியும் திரிந்த என்னையும் அவர் அவர்களைத் தண்டித்தது போல் தண்டித்துவிடாதே என்கிறார் பட்டர்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பராபரையே என்று நிறைய இந்தப் பாடல் பரமென்று என்று தொடங்கியது. இந்தப் பாடல் சிறந்தவளே என்று நிறைய அடுத்தப் பாடல் சிறக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பரமென்று, தரமன்று, புரமன்று, சிரமொன்று

மோனை: பரம் - பத்தருக்குள், தரம் - தள்ளத் - தகாது - தரியலர் - தம், புரம் - பொருப்புவில் - போதில், சிரம் - செற்ற - சிறந்தவளே.

Monday, April 07, 2008

விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற திருவுருவம் (பாடல் 87)
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் - எத்தனை தான் சொன்னாலும் உன் பெருமை சொல்லி முடியாது என்ற வகையில் மொழிக்கு எட்டாமலும், எந்த வகையில் நினைத்தாலும் உன் திருவுருவை எண்ணி முடியாது என்ற வகையில் நினைவுக்கு எட்டாமலும் இருக்கும் உன் திருவுருவம்எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் - என்னுடைய முன்வினைகளின் தடைகளையும் மீறி எந்தன் விழிகள் காணும்படி என் முன் நிற்கின்றதே! இது என்ன வியப்பு?!விழியால் மதனை அழிக்கும் தலைவர் - தன்னுடைய நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்த எங்கள் தலைவராம் சிவபெருமானின்


அழியா விரதத்தை - என்றும் தீராத தவமென்னும் விரதத்தை


அண்டம் எல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே - உடம்பின் இடப்புறத்தில் ஒரு பாகத்தையே கொண்டு இந்த அம்மை நிற்க அதன் பின்னரும் தவம் செய்வாரும் உளரோ என்று உலகம் எல்லாம் பழிக்கும் படி நிற்கின்ற பரதெய்வத்திற்கும் பரதெய்வமானவளே.

அம்மையே உன் திருவுருவம் மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத திருவுருவம். அந்தத் திருவுருவத்தின் பெருமைச் சொல்லி முடியாது. மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் தவத்தையே உலகோர் பழிக்கும் படி செய்யும் பேரழகுடைய திருவுருவம் நின் உருவம். அப்படிப் பட்ட வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவம் என்னுடைய முன்வினைப்பயன்கள் என்னும் தடைகளையும் மீறி என் கண்களுக்கு முன்னர் வந்து நிற்கின்றது என்றால் அது என்னுடைய முயற்சியாலும் தவத்தாலும் ஏற்பட்டது இல்லை. உன்னுடைய அளவில்லாத பெருங்கருணையாலே மட்டும் நடக்கின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பணிமொழியே என்று நிறைய இந்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பராபரையே என்று நிறைய அடுத்தப் பாடல் பரமென்று என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மொழிக்கும், விழிக்கும், அழிக்கும், பழிக்கும்

மோனை: மொழிக்கும் - மூர்த்தம், விழிக்கும் - வினைக்கும் - வெளி - விழியால், அழிக்கும் - அழியா -அண்டம், பழிக்கும் - பாகம் - பராபரையே.

Tuesday, April 01, 2008

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே (பாடல் 86)மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

மால் அயன் தேட - திருமாலவனும் பிரம்மனும் தேட
மறை தேட - வேதங்கள் தேட
வானவர் தேட - வானவர் தேட
நின்ற காலையும் - நிற்கும் திருப்பாதங்களையும்
சூடகக் கையையும் கொண்டு - வளையல்கள் சூடிய திருக்கைகளையும் கொண்டு
கதித்த கப்பு வேலை - பல கிளைகளை கொண்ட வேலை (சூலத்தை)
வெங்காலன் என் மேல் விடும் போது - வெம்மையுடைய காலன் என் மேல் விடும் போது
வெளி நில் கண்டாய் - முன் வந்து நின்று அருள்வாய்

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே - பாலைப் போன்ற, தேனைப் போன்ற, பாகைப் போன்ற இனிமையான திருக்குரலை உடையவளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் மாலையுமே என்று நிறைய இந்தப் பாடல் மாலயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பணிமொழியே என்று நிறைய அடுத்தப் பாடல் மொழிக்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மாலயன், காலையும், வேலை, பாலை.

மோனை: மாலயன் - மறை - வானவர், காலை - கையை - கொண்டு - கதித்த - கப்பு, வேலை - வெங்காலன் - விடும்போது - வெளிநில், பாலையும் - பாகையும் - போலும் - பணிமொழியே.

Wednesday, March 26, 2008

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)


காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும். வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே. 'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார். பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர். தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார்.

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே


பார்க்கும் திசைதொறும் - நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது

பாசாங்குசமும் - அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும்

பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் - பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும்

கரும்பும் - கரும்பு வில்லும்

என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் - என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும்

சிற்றிடையும் - சிறு இடையும்


வார்க்குங்கும முலையும் - கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும்


முலைமேல் முத்து மாலையுமே - அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பார்த்திருமே என்று நிறைய இந்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் மாலையுமே என்று நிறைய அடுத்தப் பாடல் மாலயன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பார்க்கும், ஆர்க்கும், தீர்க்கும், வார்க்குங்கும

மோனை: பார்க்கும் - பாசாங்குசமும் - பனிச்சிறை, ஆர்க்கும் - ஐந்தும் - அல்லல், தீர்க்கும் - திரிபுரையாள் - திருமேனியும், வார்க்குங்கும - முலையும் - முலை - மேல் - முத்து - மாலையுமே.

Sunday, March 23, 2008

வஞ்சகர் நெஞ்சு அடையாள்! (பாடல் 84)உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே


உடையாளை - உலகங்களையும் உயிர்களையும் உடைமைகளாகக் கொண்டவளை


ஒல்கு செம்பட்டுடையாளை - ஒளிவீசும் சிவந்த பட்டு உடையை அணிந்தவளை


ஒளிர்மதிச் செஞ்சடையாளை - ஒளிரும் நிலவை அணிந்த செம்மையான சடையை உடையவளை


வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சகர்களின் நெஞ்சில் தங்காதவளை


தயங்கு நுண்ணூல் இடையாளை - தயங்கித் தயங்கி அசையும் நுண்ணிய நூல் போன்ற இடையை உடையவளை


எங்கள் பெம்மான் இடையாளை - எங்கள் தலைவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பவளை


இங்கு என்னை இனிப் படையாளை - இந்த உலகத்தில் இனி என்னைப் படைக்காதவளைஉங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - உங்களையும் இனிப் பிறக்காமல் செய்யும் வண்ணம் வணங்குங்கள்

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் உடையவரே என்று நிறைய இந்தப் பாடல் உடையாளை என்று தொடங்கியது. இந்தப் பாடல் பார்த்திருமே என்று நிறைய அடுத்தப் பாடல் பார்க்கும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: உடையாளை, சடையாளை, இடையாளை, படையாளை

மோனை: உடையாளை - ஒல்கு - உடையாளை - ஒளிர்மதி, சடையாளை - தயங்கு, இடையாளை - எங்கள் - இடையாளை - இங்கு - என்னை - இனி, படையாளை - படையாவண்ணம் - பார்த்திருமே.

Thursday, March 13, 2008

இந்திரன் ஆகும் வழி (பாடல் 83)


உலகத்தில் இருக்கும் எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திர பதவி இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களுக்கெல்லாம் உயர்ந்த இன்பம் என்பது வெள்ளிடைமலை. அப்படிப்பட்ட இந்திர பதவியை வேண்டி அடைய வேண்டாதபடி என்றைக்கும் உடையவராக ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை இந்தப் பாடலில் சொல்கிறார் அபிராமி பட்டர்.

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே


விரவும் புது மலர் இட்டு - தேன் சிந்தும் புதிய மலர்களை இட்டு

நின் பாத விரைக்கமலம் - மணம்மிக்க உன் திருவடித் தாமரைகளை

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் - இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையவர்கள்


இமையோர் எவரும் பரவும் பதமும் - தேவர்கள் எல்லாம் போற்றி வணங்கும் இந்திர பதவியையும்

அயிராவதமும் - வெள்ளையானையாம் ஐராவதத்தையும்

பகீரதியும் - ஆகாய கங்கையையும்

உரவும் குலிசமும் - வலிமையுடைய வஜ்ஜிராயுதத்தையும்

கற்பகக் காவும் -வேண்டியதை எல்லாம் தரும் கற்பகச் சோலையையும்

உடையவரே - இயல்பாகவே உடையவர்கள் (வருந்தி அடைய வேண்டாம்).

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரகே என்று நிறைய இந்தப் பாடல் விரவும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் உடையவரே என்று நிறைய அடுத்தப் பாடல் உடையாளை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரவும், இரவும், பரவும், உரவும்

மோனை: விரவும் - விரைக்கமலம், இரவும் - இறைஞ்ச - இமையோர், பரவும் - பதமும் - பகீரதியும், உரவும் - உடையவரே.

Sunday, March 09, 2008

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (பாடல் 82)


இறைச்சக்தி உருவமற்றது. அதற்கு உருவம் ஏற்படுத்திக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பக்தர்கள். என்னே இவர்களின் அறிவீனம்? - இப்படியெல்லாம் தத்துவ ஆராய்ச்சி செய்து மிகப்பெரியவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ உருவமற்ற இறைசக்தியை வணங்குவது உயர்கல்வியைப் போன்றது; உருவத்தில் இறைசக்தியை வணங்குதல் தொடக்கக் கல்வியைப் போன்றது; அவரவர் ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஏற்ப இறைசக்தியை வணங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இது சரி தானா, உண்மை தானா என்று எப்படி எனக்குத் தெரியும்? இந்தப் பாடலில் அபிராமி பட்டரோ வேறு மாதிரி சொல்கிறார். அன்னையின் திருவுருவத்தை நினைக்கும் போதெல்லாம் ஆன்மிக அனுபவங்களில் மிக உயர்ந்த அனுபவம் கிட்டுகிறதாம். உருவத்தை வணங்கும் இவர் தொடக்ககல்வி நிலையில் இருக்கிறாரா உயர்கல்வி நிலையில் இருக்கிறாரா அனைத்துக் கல்வியையும் கற்று மிகத் தேர்ந்தவராக இருக்கிறாரா தெரியவில்லை.

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.

அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற - எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.

ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் - அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்

களியாகி - பெருமகிழ்ச்சி பெருகி

அந்தக்கரணங்கள் விம்மி - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி

கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு

வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.

எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - உனது பேரறிவினை எப்படி மறப்பேன்

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பேரளியே என்று நிறைய இந்தப் பாடல் அளியார் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விரகே என்று நிறைய அடுத்தப் பாடல் விரவும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அளியார், ஒளியாக, களியாகி, வெளியாய்

மோனை: அளியார் - ஆரணங்கே - அகிலாண்டமும், ஒளியாக - ஒளிர் - உள்ளுந்தொறும்,
களியாகி -கரணங்கள் - கரைபுரண்டு, வெளியாய் - விரகினையே.

அருஞ்சொற்பொருள்:

அளி - கருணை (சென்ற பாடலில் பயன்படுத்திய பொருள்), வண்டு (இந்தப் பாடலில் பயன்படுத்திய பொருள்)
விரகு - பேரறிவு.

***

Wednesday, March 05, 2008

வஞ்சகரோடு இணங்க மாட்டேன்! (பாடல் 81)


சில நேரங்களில் சில மனிதர்கள் வஞ்சகர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுடன் இணங்கி இருக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. சுயநலத்தால் எல்லோருமே அப்படி செய்வது அவரவர் அனுபவமாக இருக்கும். அன்னையின் அருளிருந்தால் அப்படி வஞ்சகரோடு இணங்கியிருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதை அபிராமி பட்டர் அருமையாகக் கூறுகிறார்.

அறிவு ஒன்றும் இல்லாதவன் நான். என் மேல் நீ வைத்த பெருங்கருணையை என்ன என்று சொல்லுவேன்? தெய்வங்களில் சிறந்தவளே. எல்லா தெய்வங்களும் நின் பரிவாரங்கள். நீயே என் மேல் கருணை கொண்டு விட்டதால் எதற்காகவும் எந்த நோக்கத்திற்காகவும் உலகத்தில் உன்னையன்றி மற்றவரை நான் வணங்க வேண்டியதில்லை; அதனால் வணங்கேன். அவர்களை நெஞ்சில் வாழ்த்தவும் தேவையில்லை; அதனால் வாழ்த்துகிலேன். வஞ்சகர்களோடு இணங்க வேண்டிய தேவையும் இல்லை; அதனால் இணங்கேன். தம்முடையது எல்லாம் அன்னையே உன்னுடையது என்று இருக்கிறார்களே சில மெய்யடியார்கள் அவர்கள் வெகு சிலரே; அப்படிப்பட்டவர்களோடு எந்தக் காரணத்தாலும் சண்டை போட மாட்டேன். பிணங்கேன்.

அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே


அணங்கே - ஒரே தெய்வமே


அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால் - எல்லாத் தெய்வங்களும் உன் பரிவாரங்கள் ஆகையினால்


வணங்கேன் ஒருவரை - இன்னொருவரை வணங்க மாட்டேன்


வாழ்த்துகிலேன் நெஞ்சில் - நெஞ்சிலும் மற்றவரை வாழ்த்த மாட்டேன்


வஞ்சகரோடு இணங்கேன் - வஞ்சகர்களோடு இணங்க மாட்டேன்


எனது உனது என்று இருப்பார் சிலர் - தங்களுடையது எல்லாம் உன்னுடையது என்று இருப்பார்கள் சிலர்


யாவரொடும் பிணங்கேன் - அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களோடு பிணக்கு கொள்ள மாட்டேன்.


அறிவு ஒன்றும் இலேன் - அறிவு ஒன்றுமே இல்லாதவன் நான்

என் கண் நீ வைத்த பேரளியே - என் மேல் நீ வைத்தப் பெருங்கருணையை என்ன என்று போற்றுவேன்?

***


அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஆரணங்கே என்று நிறைய இந்தப் பாடல் அணங்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் பேரளியே என்று நிறைய அடுத்தப் பாடல் அளியார் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: அணங்கே, வணங்கேன், இணங்கேன், பிணங்கேன்

மோனை: அணங்கே - அணங்குகள் - ஆகையினால், வணங்கேன் - வாழ்த்துகிலேன் - வஞ்சகரோடு, இணங்கேன் - எனது - என்றிருப்பார் - யாவரொடும், பிணங்கேன் - பேரளியே

Friday, February 29, 2008

ஆடகத் தாமரை ஆரணங்கே (பாடல் 80)


முதலில் அடியார் கூட்டத்தில் சேர்தல்; அந்த சேர்தலையே காரணமாகக் கொண்டு இறைவியின் திருவருள் வருதல்; அந்தத் திருவருளால் அவளது திருவுருவைக் காட்டுதல்; அப்படிக் கண்ட காட்சியில் கண்ணும் மனமும் களித்தல்; அந்தக் களிப்பில் நடம் ஆடுதல் - என்று இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் எல்லாமே அன்னையின் கருணையின் அடிப்படையிலேயே நடக்கிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று அருளாளர்கள் சொன்னதைப் போல்.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே


கூட்டியவா என்னைத் தன் அடியாரில் - என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்ததையும்

கொடிய வினை ஓட்டியவா - எனது கொடிய வல்வினைகளை ஓட்டியதையும்

என் கண் ஓடியவா - என்னை நோக்கி ஓடி வந்து அருள் செய்ததையும்

தன்னை உள்ள வண்ணம் காட்டியவா - உனது மெய்யுருவை உள்ளவண்ணம் காட்டியதையும்

கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா - அப்படித் திருவுருவைக் கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றதையும்

ஆட்டியவா நடம் - அந்தக் களிப்பில் என்னை நடம் ஆட்டிவைப்பதும் (என்னே உன் கருணை?)

ஆடகத் தாமரை ஆரணங்கே - பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகானவளே

***

இந்தப் பாடலில் கூட்டியவாறும், ஓட்டியவாறும், ஓடியவாறும், காட்டியவாறும், களிக்கின்றவாறும், ஆட்டியவாறும் என்ற சொற்கள் ஈறு கெட்டு கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா, காட்டியவா, களிக்கின்றவா என்று நின்றன.

அந்தாதித் தொடை: சென்ற பாடல் கூட்டினியே என்று நிறைய இந்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆரணங்கே என்று நிறைய அடுத்தப் பாடல் அணங்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: கூட்டியவா, ஓட்டியவா, காட்டியவா, ஆட்டியவா

மோனை: கூட்டியவா - கொடியவினை, ஓட்டியவா - ஓடியவா - உள்ளவண்ணம், காட்டியவா - கண்ட - கண்ணும் - களிக்கின்றவா, ஆட்டியவா - ஆடக - ஆரணங்கே.

Sunday, February 24, 2008

கயவரோடு இனி என்ன கூட்டு? (பாடல் 79)


எல்லாம் வல்ல தெய்வத்தை வழிபட விரும்பும் மனம் நமக்கு இருக்கிறது. அப்படி இருந்தும் தெய்வத்தை நம்பாமல் கிண்டலும் கேலியும் பேசி பழி பாவங்களே செய்து நரக வழியிலேயே செல்ல விரும்பும் கயவர்களோடு நமக்கு ஏன் கூட்டு மனமே?

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு - அபிராமவல்லியின் திருவிழிகளுக்கு எம் மேல் தனிப்பட்ட அருள் கட்டாயம் இருக்கிறது.

வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு - நமக்கோ வேதங்கள் காட்டுகின்ற வழிகளிலேயே அவளை வழிபட மனம் உண்டு.


அவ்வழி கிடக்க - அப்படிப்பட்ட நல்வழிகள் இருக்கும் போது

பழிக்கே சுழன்று - தேவையின்றி கெட்ட வழியிலேயே திரிந்து

வெம்பாவங்களே செய்து - கொடிய பாவங்களையே செய்து

பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் - பாழும் நரகக் குழியிலேயே அழுந்தி வாடும்


கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே - கெட்டவர்கள் தம்மோடு இனி என்ன தொடர்பு?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விழிக்கே என்று நிறைய இந்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கூட்டினியே என்று நிறைய அடுத்தப் பாடல் கூட்டியவா என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விழிக்கே, வழிக்கே, பழிக்கே, குழிக்கே

மோனை: விழிக்கே - உண்டு - வல்லிக்கு - வேதம், வழிக்கே - வழிபட - உண்டு - வழிகிடக்க, பழிக்கே - பாவங்களே - பாழ்நரக, குழிக்கே - கயவர் - கூட்டினியே

Friday, February 22, 2008

உன் திருவுருவம் என் கண்களில் நிறைகின்றதே (பாடல் 78)


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே


செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் - புகழ்ந்து பேசத்தக்க பொற்குடம் போன்ற உன் திருமுலைகளின் மேல்


அப்பும் களப அபிராம வல்லி - பூசப்பட்ட சந்தன மணம் கமழும் அபிராமவல்லியே!


அணி தரளக் கொப்பும் - நீ அணிகின்ற முத்துக் கொப்பும்

வயிரக் குழையும் - வைரத் தோடுகளும்

விழியின் கொழுங்கடையும் - அருளைச் சிந்தும் உன் கடைக்கண் பார்வையையும்

துப்பும் நிலவும் - அன்பைச் சிந்தும் நிலவு போன்ற திருமுகமும்
எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே - என் இரு விழிகளிலும் நிலைத்து நிற்கும் வண்ணம் செய்துவைத்தேன்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் செப்புவரே என்று நிறைய இந்தப் பாடல் செப்பும் என்று தொடங்கியது. இந்தப் பாடல் விழிக்கே என்று நிறைய அடுத்தப் பாடல் விழிக்கே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: செப்பும், அப்பும், கொப்பும், துப்பும்

மோனை: செப்பும் - திருமுலைமேல், அப்பும் - அபிராமவல்லி - அணிதரள, கொப்பும் - குழையும் - கொழுங்கடையும், துப்பும் - துணைவிழிக்கே.

Monday, February 18, 2008

நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவோம் (பாடல் 77)


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே


பயிரவி - கொடியவர்களுக்கு அச்சம் தரும் வடிவை உடையவளே


பஞ்சமி - ஐந்து தொழில்கள் உடையவளே


பாசாங்குசை - பாசமும் அங்குசமும் ஏந்தியவளே


பஞ்சபாணி - ஐந்து மலர்க்கணைகள் தாங்கியவளே


வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சகர்களின் உயிரை காணிக்கையாக ஏற்று உண்ணும் உயர் சண்டிகையே


காளி - மகாகாளியே


ஒளிரும் கலா வயிரவி - ஒளிவீசும் கலைகளைத் தருபவளே


மண்டலி - சூரிய, சந்திர மண்டலங்களிலும் வழிபடுவோர் உருவாக்கும் சக்கர மண்டலங்களிலும் வசிப்பவளே


மாலினி - மாலைகள் சூடியவளே


சூலி - சூலத்தை ஏந்தியவளே


வராகி - வராக உரு கொண்டவளே


என்றே - என்றென்றே அடியார்கள்


செயிர் அவி நான்மறை சேர் - குற்றங்குறைகளைத் தீர்க்கும் நான்மறைகளில் கூறப்பட்ட


திருநாமங்கள் செப்புவரே - உனது திருநாமங்களைச் சொல்லுவார்கள்.

இந்தப் பாடல் ஒரு நாமாவளியாகவே அமைந்திருக்கிறது. புரிந்த வரையில் பொருள் சொல்லியிருக்கிறேன். சரியான பொருள் சொல்லவில்லை என்றால் திருத்துங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் பயிரவியே என்று நிறைய இந்தப் பாடல் பயிரவி என்று தொடங்கியது. இந்தப் பாடல் செப்புவரே என்று நிறைய அடுத்தப் பாடல் செப்பும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: பயிரவி, உயிரவி, வயிரவி, செயிரவி

மோனை: பயிரவி - பஞ்சமி - பாசாங்குசை - பஞ்சபாணி, உயிரவி - உண்ணும் - உயர்சண்டி - ஒளிரும், வயிரவி - வராகி, செயிரவி - சேர் - செப்புவரே.

Wednesday, February 13, 2008

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் (பாடல் 76)


குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் - எல்லா நேரங்களிலும் உன் திருவுருவங்களையே மனத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.


நின் குறிப்பு அறிந்து - உன் திருவருளைத் துணையாகக் கொண்டு

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி - யமன் வரும் வழியினை அடைத்துவிட்டேன். இனி எனக்கு மரணம் இல்லை.


வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் - வண்டுகளால் துளைக்கப்பட்டு வெறியூட்டும் தேன் சொட்டுகின்ற கொன்றைப்பூக்களைச் சூடிய திருமுடியை உடைய சிவபெருமானின்


ஒரு கூற்றை மெய்யில் பறித்தே குடிபுகுதும் - உடம்பில் ஒரு பாகத்தை உன் உரிமையாகக் கொண்டு அங்கே குடிபுகுந்தாய்


பஞ்ச பாண பயிரவியே - ஐந்து மலர்க்கணைகளைக் கொண்டு உலக நடப்பை எல்லாம் நடத்தும் அம்மையே

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் குறித்தவரே என்று நிறைய இந்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் பயிரவியே என்று நிறைய அடுத்தப் பாடல் பயிரவி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: குறித்தேன், மறித்தேன், வெறித்தேன், பறித்தே

மோனை: குறித்தேன் - கோலம் - குறிப்பு, மறித்தேன் - மறலி, வெறித்தேன் - வேணிப்பிரான், பறித்தே - பஞ்ச - பாண - பயிரவியே.

Tuesday, February 05, 2008

கொங்கிவர் பூங்குழலாள் (பாடல் 75)


முதல் வார்த்தையில் பாராட்டிவிட்டு இரண்டாவது வார்த்தையில் சபிப்பதைப் போல் பாடியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாடலைப் பாருங்கள். உண்மையில் அந்த சாபமும் வாழ்த்து தான் என்பது கொஞ்சம் நெருங்கிப் பொருளைப் பார்த்தால் புரிகிறது.

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் - பிறப்பிறப்பில்லாத அன்னையின் உலகத்தில் கற்பக மரத்தின் நிழலில் வாழுவார்கள்


தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை - குற்றம் நிறைந்த பிறவிகள் இன்றியும் பிறவிகள் இல்லாததால் பெற்றெடுக்கும் தாயர் இன்றியும் மண்ணில் மங்கிப் போவாரக்ள் (மீண்டும் பிறக்க மாட்டார்கள்)


மால் வரையும் - மலைக்க வைக்கும் பெரிய மலைகளையும்

பொங்கு உவர் ஆழியும் - அலைகளால் பொங்கும் உவர்ப்புச் சுவை கூடிய கடல்களையும்


ஈரேழ் புவனமும் - பதினான்கு உலகங்களையும்


பூத்த உந்திக் - தன் திருவயிற்றினில் பெற்ற உலக அன்னையாம்


கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - தேன் சொரியும் பூக்களை அணிந்த கூந்தலையுடைய அபிராமி அன்னையின் திருமேனியைத் தொழுதவர்களே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தங்குவரே என்று நிறைய இந்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் குறித்தவரே என்று நிறைய அடுத்தப் பாடல் குறித்தேன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தங்குவர் - மங்குவர் - பொங்குவர் - கொங்கிவர்

மோனை: தங்குவர் - தாருவின் - தாயர், மங்குவர் - மண்ணில் - மால்வரையும், பொங்குவர் - புவனமும் - பூத்த, கொங்கிவர் - குழலாள் - குறித்தவரே.

Wednesday, January 30, 2008

மூவரும் போற்றும் தேவி (பாடல் 74)


எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளைப் பெற்றவர்கள் வேறு ஒன்று பெற தனி முயற்சி செய்யவும் வேண்டுமா? மரத்தின் வளர்ச்சிக்கு நீர் வார்க்க நினைப்பவர்கள் மரத்தின் ஒவ்வொரு இலையிலும் பூவிலும் காயிலும் கனியிலும் காம்பிலும் நீரைத் தெளிக்காமல் மரத்தின் வேரில் தானே நீரை வார்ப்பார்கள். வேரில் இட்ட நீர் மரத்தின் எல்லா பகுதிக்கும் சென்று மரத்தைத் தழைக்க வைக்குமே. அப்படி எது வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பொருளை வேண்டினால் நினைப்பவை எல்லாம் கிடைக்குமே. ஆனால் அதில் ஒரு பிரச்சனை உண்டு. எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை வேண்டி அதனைப் பற்றியதும் மற்ற எதுவுமே தனக்குப் பொருளில்லை என்ற நிலையை அல்லவா ஒருவர் அடைந்துவிடுகிறார்?! அந்த நிலையைத் தான் இங்கே அபிராமிபட்டர் பாடியிருக்கிறார்.

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?

நயனங்கள் மூன்றுடை நாதனும் - முக்கண் முதல்வனும்

வேதமும் - வேதங்களும்

நாரணனும் - எங்கும் நிறை நாராயணனும்

அயனும் - எல்லா உலகங்களையும் படைக்கும் பிரம்மனும்

பரவும் - போற்றும்

அபிராமவல்லி அடி இணையைப் - அபிராமவல்லியின் திருவடி இணைகளைப்


பயன் என்று கொண்டவர் - பெரும் பயன் என்று பற்றிக் கொண்டவர்கள்

பாவையர் ஆடவும் பாடவும் - தேவப் பெண்கள் பாடி ஆடி மகிழ்விக்க

பொன் சயனம் பொருந்தும் - பொன்னால் ஆன படுக்கையை உடைய

தமனியக் காவினில் தங்குவரே? - பாரிஜாதக் காட்டினில் தங்கி மகிழும் பயனை வேண்டுவாரோ?


மும்மூர்த்திகளே வணங்கும் திருவடிகளைப் பயன் என்று கொண்ட பின்னர் இந்திர போகமும் வேண்டாம் என்கிறார். அச்சுவை பெறினும் வேண்டேன் என்று மற்றொரு அருளாளர் சொன்னதைப் போல்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நயனங்களே என்று நிறைய இந்தப் பாடல் நயனங்கள் என்று தொடங்கியது. இந்தப் பாடல் தங்குவரே என்று நிறைய அடுத்தப் பாடல் தங்குவர் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நயனங்கள், அயனும், பயன், சயனம்

மோனை: நயனங்கள் - நாதனும் - நாரணனும், அயனும் - அபிராமவல்லி - அடியிணையை, பயன் - பாவை - பாடவும் - பொன், சயனம் - தமனிய - தங்குவரே.