Wednesday, July 16, 2008

மெய்யடியார் நெஞ்சில் புகுந்திருப்பவள் (பாடல் 98)


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே


தை - தையலே; பெண்களில் சிறந்தவளே.

வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு - நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு

கை வந்த தீயும் - கையிலிருந்த தீயும்

தலை வந்த ஆறும் - திருமுடி மேல் இருந்த கங்கையும்

கரந்ததெங்கே - மறைந்ததெங்கே?

மெய் வந்த நெஞ்சின் அல்லால் - உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி

ஒரு காலும் - ஒரு போதும்

விரகர் தங்கள் - வஞ்சகர்களில்

பொய் வந்த நெஞ்சில் - பொய் தங்கும் நெஞ்சில்

புகல் அறியா மடப்பூங்குயிலே - புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே

***

திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது.

அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் தையலையே என்று நிறைய இந்தப் பாடல் தைவந்து என்று தொடங்கியது. இந்தப் பாடல் பூங்குயிலே என்று நிறைய அடுத்தப் பாடல் குயிலாய் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: தைவந்து, கைவந்த, மெய்வந்த, பொய்வந்த

மோனை: தைவந்து - தாமரை, கைவந்த - கரந்தது, மெய்வந்த - விரகர், பொய்வந்த - புகலறியா - பூங்குயிலே.

4 comments:

said...

அபிராமி வந்துட்டா :) அழகான விளக்கம். இரண்டுமே பொருந்தி வருகின்றன.

மெய் வந்த நெஞ்சாய் என்
நெஞ்சகத்தை மாற்றி - என்றும்
அகலாமல் நிறைந் திடுவாய்
அன்னை அபிராமியே!

said...

நல்லா சொன்னீங்க கவிநயா அக்கா. மெய்யடியார் நெஞ்சில் தங்குபவள் என்ற போது அந்த மெய்யடியாரில் நானில்லை என்று எண்ணிக் கொண்டேன் போலும். அவள் அருளாலே தான் அவள் தாள் வணங்கவேண்டும்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'வஞ்சகர் செயலால் வருத்தம் உண்டாதிருக்கும்'.

said...

அம்மை வஞ்சகர் நெஞ்சில் தங்காள் என்றதால் இந்தப் பாராயணப் பயன் போலும் சிவமுருகன். நன்றி.