Friday, December 29, 2006

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது! (பாடல் 23)


கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது - உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்

அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் - உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)

பரசமயம் விரும்பேன் - உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.

வியன் மூவுலகுக்கு உள்ளே - மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே

அனைத்தினுக்கும் புறம்பே - இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே

(அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)

உள்ளத்தே விளைந்த கள்ளே - உள்ளத்தில் விளைந்த அமுதமே

களிக்கும் களியே - எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே

அளிய என் கண்மணியே - எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே

கொடியே இளவஞ்சிக் கொம்பே (பாடல் 22)



கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

கொடியே - கொடி போன்றவளே!

இளவஞ்சிக் கொம்பே - இளமையான வஞ்சிக் கொம்பே!

எனக்கு வம்பே பழுத்த படியே - தகுதியில்லாத எனக்குத் தானே காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!

மறையின் பரிமளமே - வேதங்களின் மணமே!

பனி மால் இமயப் பிடியே - பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே!

பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே - பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.

Sunday, October 01, 2006

மங்கலை செங்கலசம் முலையாள் (பாடல் 21)



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

மங்கலை - மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவளே.

மலையாள் - மலைமகளே. இமயத்தரசன் மகளே.

வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் - வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே

உடையாள் - எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.

பிங்கலை - பொன்னிறத்தவளே.

நீலி - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.

செய்யாள் - சிவந்தவளே.

வெளியாள் - வெண்மை நிறம் கொண்டவளே.

பசும் பெண்கொடியே - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

***

இந்தப் பாடல் முழுக்க முழுக்க தோத்திரமாகவே அன்னையில் புகழைப் பாடுவதாகவே அமைந்திருக்கிறது.

உலகத்தில் எத்தனையோ குணநலன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம் தந்து உருவகித்துப் பேசுவது மரபு. அந்த எல்லா குணநலன்களும் அன்னையே; அவளிடமிருந்து தோன்றியவையே என்று குறிப்பால் உணர்த்தும் முகமாக அபிராமி பட்டர் அன்னையை 'பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே' என்கிறார் போலும்.

Wednesday, March 08, 2006

157: உறைகின்ற நின் திருக்கோயில் (பாடல் 20)


உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

உறைகின்ற நின் திருக்கோயில் - அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது

நின் கேள்வர் ஒரு பக்கமோ - உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ - ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

கஞ்சமோ - தாமரை மலரோ?

எந்தன் நெஞ்சகமோ - என்னுடைய நெஞ்சமோ?

மறைகின்ற வாரிதியோ - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?

பூரணாசல மங்கலையே - எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!

எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? தாமரை மலரோ? என்னுடைய நெஞ்சமோ? எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும்.

Wednesday, February 15, 2006

147: ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? (பாடல் 19)

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து - நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து)

விழியும் நெஞ்சும் - பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.

கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது - உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.

என்ன திருவுளமோ? - உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே. நான் வேண்டியவுடன் வான வெளியில் மாதொருபாகனாக திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவேயில்லை. கருத்தினுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் திறம் தான் என்னே?

Friday, February 10, 2006

144: காலன் வரும்போது வெளி நிற்கவே (பாடல் 18)

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் - உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,

உங்கள் திருமணக்கோலமும் - உங்கள் திருமணக் கோலத்துடனும்

சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து - என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து

வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே - கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்

அபிராமி அன்னையே! உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்.

Thursday, January 26, 2006

132: *நட்சத்திரம்* - அதிசயம் ஆன வடிவுடையாள் (பாடல் 17)


அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே


அதிசயம் ஆன வடிவுடையாள் - அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள்.

அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி - அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள்

துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் - அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.

தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே - அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.

அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள். அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.

***

ஆனனம் - திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் - யானைமுகன்; ஷடானனன் - ஆறுமுகன்; பஞ்சானனன் - ஐந்துமுகன் (சிவன்).

சயம் - ஜெயம் - வெற்றி

அபசயம் - அபஜெயம் - தோல்வி

மதி சயம் - மதி ஜலம் - மதி நீர்

மதி சயம் - மதியை வெற்றி

Monday, January 23, 2006

125: *நட்சத்திரம்* - இது அதிசயமே (பாடல் 16)

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

கிளியே - அழகிய கிளி போன்றவளே!

கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே - உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!

ஒளிரும் ஒளிக்கு இடமே - அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே!

எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே - எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!

வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே - வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே!

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே - கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?

அழகிய கிளி போன்றவளே! உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே! அப்படி ஒளிக்கும் ஒளிக்கு இடமானவளே! எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே! கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?

Wednesday, January 04, 2006

102: மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? (பாடல் 15)

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் - இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?

மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் - சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்

அழியா முக்தி வீடும் அன்றோ - என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே - இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.

இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பைங்கிளியே. அபிராமி அன்னையே. உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் மிகுந்த முயற்சியுடன் செய்பவர், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.