Saturday, September 29, 2007

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் (பாடல் 57)



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே



ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு - சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு

அண்டம் எல்லாம் உய்ய - உலகம் எல்லாம் உய்யும் படி

அறம் செயும் - அறங்கள் செய்யும்

உன்னையும் போற்றி - உன்னைப் போற்றிப் பாடிவிட்டு

ஒருவர் தம் பால் - பின் வேறொருவரிரம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று - நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் - உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!

இதுவோ உந்தன் மெய்யருளே - இது தான் உந்தன் மெய்யருளா?

***

உலக மக்கள் எல்லோருக்கும் படி அளப்பவளாக இருக்கும் உன்னைப் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருந்த என்னை வேறொருவரிடம் சென்று படி அளக்கச் சொல்லிக் கேட்க வைக்கலாமா? அவர்களைப் புகழ்ந்து பொய்யாக நான் பாடலாமா? இப்படி வைப்பது உனக்கு அழகா?

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஐயனுமே என்று நிறைய இந்தப் பாடல் ஐயன் என்று தொடங்கியது. இந்தப் பாடல் அருளே என்று நிறைய அடுத்தப் பாடல் அருணாம்புயத்தும் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஐயன், உய்ய, செய்ய, மெய்யும்

மோனை: ஐயன் - அளந்த - அண்டம், உய்ய - உன்னையும் - ஒருவர், செய்ய - சென்று, மெய்யும் - மெய்யருளே.

Sunday, September 16, 2007

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் (பாடல் 56)


ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே

ஒன்றாய் அரும்பி - ஒரே பொருளாய் முதலில் அரும்பி

பலவாய் விரிந்து - பல பொருட்களாய் விரிந்து

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் - இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் - அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)

என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு - (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.


இப்பொருள் அறிவார் - (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே - பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஒன்றில்லையே என்று நிறைய இந்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஐயனுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ஐயன் அளந்தபடி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: ஒன்றாய், நின்றாள், பொன்றாது, அன்றாலிலை.

மோனை: ஒன்றாய் - உலகெங்குமாய், நின்றாள் - நீங்கி - நிற்பாள் - நெஞ்சினுள்ளே, பொன்றாது - புரிகின்றவாறு - பொருள், அன்று - ஆலிலை - ஐயனுமே.

Saturday, September 08, 2007

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது (பாடல் 55)


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் - ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை

அகம் மகிழ் ஆனந்தவல்லி - என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை

அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை - எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை

உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே - உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் சேர்மின்களே என்று முடிவுற இந்தப்பாடல் மின்னாயிரம் என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஒன்றில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: மின்னாயிரம், அன்னாள், முன்னாய், உன்னாது

மோனை: மின்னாயிரம் - மெய் - வடிவு - விளங்குகின்றது, அன்னாள் - அகம் - ஆனந்தவல்லி - அருமறைக்கு, முன்னாய் - முடிவாய - முதல்விதன்னை, உன்னாது - ஒழியினும் - உன்னினும் - ஒன்றில்லையே.