Friday, December 30, 2005

96: சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் (பாடல் 14)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் - உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே

பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே - ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

எங்கள் தலைவியே. உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும். உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே. உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.

Thursday, December 29, 2005

93: கறை கண்டனுக்கு மூத்தவளே (பாடல் 13)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பூத்தவளே புவனம் பதினான்கையும் - பதினான்கு உலகங்களையும் பெற்றவளே

பூத்தவண்ணம் காத்தவளே - எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே

பின் கரந்தவளே - பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே - பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே

மாத்தவளே - மாபெரும் தவம் உடையவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

பதினான்கு உலகங்களையும் பெற்றவளே. எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே. பின் அவற்றை உன்னுள் மறைத்துக்கொள்பவளே. கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே.என்றைக்கும் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் இளையவளே. மாபெரும் தவம் உடையவளே. உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

Wednesday, December 28, 2005

91: நான் முன் செய்த புண்ணியம் ஏது? (பாடல் 12)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

கண்ணியது உன் புகழ் - நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் - நான் எப்போதும் கற்பது உன் நாமம்

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் - என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து - நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன்.

நான் முன் செய்த புண்ணியம் ஏது - இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்?

என் அம்மே - என் தாயே

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஏழு உலகையும் பெற்ற என் தாயே. அபிராமி அன்னையே. எப்போதும் என் பாடல்களின் பொருளாய் இருப்பது உனது புகழே. எப்போதும் நான் சொல்லுவதும் உனது நாமமே. என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில். நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன்?

89: ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ (பாடல் 11)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

ஆனந்தமாய் - எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்

என் அறிவாய் - உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்

நிறைந்த அமுதமுமாய் - அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்

வான் அந்தமான வடிவுடையாள் - மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.

மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்

தவள நிறக் கானம் - சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்

தம் ஆடரங்காம் - தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட

எம்பிரான் முடிக் கண்ணியதே - என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள். அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

Saturday, December 24, 2005

86: எங்கும் என்றும் நினைப்பது உன்னை (பாடல் 10)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் - நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே

எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே - யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே

அருளே உமையே - அருள் வடிவான உமையே

இமயத்து அன்றும் பிறந்தவளே - இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே

அழியா முத்தி ஆனந்தமே - என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே

அருள் வடிவான உமையே. இமயமலைக்கரசன் மகளே. எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே. நான் நிற்கும் போதும் அமரும் போதும் கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே. நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே.

Friday, December 09, 2005

78: அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9)

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.

வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.

பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.

பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்

ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்

செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்

முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு

நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.

அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.

Saturday, November 26, 2005

66: சுந்தரி எந்தை துணைவி (பாடல் 8)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

சுந்தரி - அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

Thursday, November 17, 2005

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி (பாடல் 7)

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.

தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் - அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.

கமலாலயனும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்

மதியுறு வேணி மகிழ்நனும் - நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்

மாலும் - திருமாலும்

வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் - என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே

சிந்துரானன சுந்தரியே - சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.

Sunday, November 06, 2005

சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.

சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.

சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!

முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.

முறை முறையே பன்னியது - தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது

உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே

செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.

Friday, October 28, 2005

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை (பாடல் 5)

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே

பொருந்திய முப்புரை - உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும், பொருந்தி இருப்பவளே.

செப்புரை செய்யும் புணர்முலையால் - புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் விளங்கும் கூடி நிற்கும் முலைகளால், அவற்றின் பாரத்தால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி - வருந்திய கொடிபோன்ற இடையுடைய, அன்பர்களை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் மனோன்மணியே.

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை - தேவர்களும் அசுரர்களும் அமுதம் அடைவதற்காக அன்று பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்தும் போது அவர் திருக்கழுத்தின் மேல் உன் திருக்கரங்களை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கிய அம்பிகையே.

அம்புயமேல் திருந்திய சுந்தரி - நீரில் பிறக்கும் தாமரை மலர் மேல் அழகிய உருவுடன் அமர்ந்திருப்பவளே

அந்தரி பாதம் என் சென்னியதே - உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆனவளே - உன் அழகிய பாதத்தை என் தலை மேல் அணிந்துகொண்டேன்.

உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல்; இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம்; பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம்; போன்ற மூம்மூன்று நிலைகளில் முப்புரையாய் பொருந்தி இருப்பவளே. மிக்க அழகுடன் கூடி, இணையாய் நிற்கும் பெருமுலைகளின் பாரத்தால் வருந்தும் கொடியிடை கொண்ட மனோன்மணியே. அன்று சிவபெருமான் உண்ட நஞ்சை அமுதாக்கிய அம்பிகையே. மென்மையான தாமரையில் அமர்ந்துள்ள உன் திருவடிகளை நான் என் தலை மேல் அணிந்து கொள்கிறேன்.

Thursday, October 20, 2005

என் மனதில் எந்நாளும் தங்க வேண்டும். (பாடல் 4)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து - மனிதர்களும் தேவர்களும் என்றும் வாழும் முனிவர்களும் வந்து

சென்னி குனிதரும் - தலையால் வணங்கும்

சேவடிக் கோமளமே - சிறப்பு மிகுந்த சிவந்த பாதங்களை உடைய மென்மையானவளே (கோமளவல்லியே)

கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - கொன்றைப்பூ அணிந்த நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்துள்ள

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - புனிதராம் உன் கணவரும் நீயும் என் புத்தியில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.

மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத பெருவாழ்வு வாழும் முனிவர்களும் வந்து தங்கள் தலையால் வணங்கும் சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே. நீண்ட சடைமுடியில் குளிர்ச்சி தரும் நிலவும் பாம்பும் கங்கையும் கொன்றைப்பூவும் அணிந்துள்ள புனிதராம் சிவபெருமானும் நீயும் என் மனதில் எந்நாளும் இருந்து அருளவேண்டும்.

Tuesday, October 11, 2005

செறிந்தேன் உனது திருவடிக்கே! (பாடல் 3)

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய் விளங்க பாடலைக் கீழ்கண்டவாறு மாற்றி எழுதலாம்.

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகில் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே வெருவிப் பிறிந்தேன். (நான்) அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே!

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் - மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் பார்க்காமல்

நரகில் மறிந்தே விழும் - தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்

நரகுக்கு உறவாய மனிதரையே - நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை

வெருவிப் பிறிந்தேன் - (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை - யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).

அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே - அன்பர்கள் (அடியவர்கள்) விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) - அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.

அடியவர் விரும்பும் அனைத்தும் அருளும் திருவே! யாரும் அறியா மறைப்பொருளை நான் உன் அருளால் அறிந்து கொண்டு உன் திருவடிக்கே சரணம் என அடைந்தேன். கருமப்பயனால் உன் அடியவர் பெருமையை அறியாத நரகத்தில் விழக் கூட்டம் கூட்டமாய் (ஆட்டு மந்தையைப் போல்) இருக்கும் மனிதர்களை நான் வெறுத்து விலகிவிட்டேன்.

Saturday, October 08, 2005

துணையும் தொழும் தெய்வமும் திரிபுர சுந்தரியே! (பாடல் 2)


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய்ப் புரிய பாடலை கீழ்கண்டவாறு மாற்றி எழுதிக்கொள்ளலாம்.

பனி மலர்ப் பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி (என்) துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் ஆவது அறிந்தனமே!

பனி மலர்ப் பூங் கணையும் - குளிர்ந்த மலர் அம்பும்

கருப்புச் சிலையும் - கரும்பு வில்லும்

மென் பாசாங்குசமும் - மென்மையான பாசமும், அங்குசமும்

கையில் அணையும் - கையில் கொண்டு விளங்கும்

திரிபுர சுந்தரி - மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி

என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்

சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - வேதத்தின் கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும்

ஆவது அறிந்தனமே - அவள் இருப்பது அறிந்தேனே!

குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரி, வேதங்களின் வேராகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருக்கிறாள். அவளே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாகவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அபிராமி எந்தன் விழுத்துணையே (பாடல் 1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் - உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம்

உணர்வுடையோர் - பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம் போது - மாதுளம்பூ மொட்டு

மலர்க்கமலை - தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)

துதிக்கின்ற மின் கொடி - துதிக்கின்ற மின்னல் கொடி

மென் கடிக் குங்குமத் தோயம் - மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்

என்ன - போன்ற

விதிக்கின்ற மேனி - விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட

அபிராமி எந்தன் விழுத்துணையே - அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள்.

உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள்.

Friday, October 07, 2005

கார் அமர் மேனிக் கணபதி

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே -
கார் அமர் மேனிக் கணபதியே - நிற்கக் கட்டுரையே.

தார் அமர் கொன்றையும் - மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ - கொன்றைப் பூ மாலையும்
சண்பக மாலையும்
சாத்தும் - அணியும்
தில்லை ஊரர் - தில்லையில் - சிதம்பரத்தில் வாழும் நடராஜன்
தம் பாகத்து - அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும்
உமை - சிவகாமி - பார்வதி
மைந்தனே - மகனே
உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி - சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும்
அந்தாதி - அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல்
எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க
கார் அமர் மேனி கணபதியே - மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே
கட்டுரையே - அருள் புரிவாய்.

கொன்றை மாலையும் சண்பக மாலையும் அணியும் நடராஜனுக்கும் அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமையம்மைக்கும் மைந்தனே! மேகம் போல் கரிய உடல் கொண்ட கணபதியே! உலகேழையும் பெற்ற அன்னையாம் அபிராமியின் புகழை கூறும் இந்த அந்தாதி என் சிந்தையுள் எப்போதும் நிற்க நீ அருள் புரிவாய்.

Monday, October 03, 2005

முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் இங்கு கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

அன்பு குமரன்