Saturday, October 08, 2005

துணையும் தொழும் தெய்வமும் திரிபுர சுந்தரியே! (பாடல் 2)


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

இந்தப் பாடலின் பொருள் எளிதாய்ப் புரிய பாடலை கீழ்கண்டவாறு மாற்றி எழுதிக்கொள்ளலாம்.

பனி மலர்ப் பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி (என்) துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் ஆவது அறிந்தனமே!

பனி மலர்ப் பூங் கணையும் - குளிர்ந்த மலர் அம்பும்

கருப்புச் சிலையும் - கரும்பு வில்லும்

மென் பாசாங்குசமும் - மென்மையான பாசமும், அங்குசமும்

கையில் அணையும் - கையில் கொண்டு விளங்கும்

திரிபுர சுந்தரி - மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி

என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்

சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - வேதத்தின் கிளைகளும், இலைகளும், நிலத்தில் ஊன்றி நிற்கும் வேராகவும்

ஆவது அறிந்தனமே - அவள் இருப்பது அறிந்தேனே!

குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரி, வேதங்களின் வேராகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருக்கிறாள். அவளே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாகவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

4 comments:

said...

அந்தாதி விளக்கம் - போன பாடல் 'துணையே' என்று முடிந்தது. இந்தப் பாடல் 'துணையும்' என்று தொடங்குகிறது.

said...

சகோதரர் குமரன்,
பொதுவாக 'வேர் மேலும் இலைகள் கீழுமாக' பேசப்படும் மரத்தை உபநிடதத்திலும், கீதையிலும் காண்கிறோம். இங்கு கூறப்படும் மர-உருவகத்திற்கும் மேற் கூறியவற்றையும் தொடர்புபடுத்தி சிறிது விளக்க முடியுமா? நேரமிருந்தால்...
எனது வலைப்பதிவு முகப்பில் தங்கள் அபிராமி அந்தாதி சேவைக்கு ஒரு சுட்டி-இணைப்பு கொடுத்துள்ளேன். முடிந்தால் பாருங்க.
-நீலகண்டன்

said...

உங்கள் வலைப் பதிவில் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி திரு. நீலகண்டன். தலைகீழ் மரம் பற்றி சீக்கிரம் எழுதுகிறேன்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிரிந்தவர் ஒன்று சேரலாம்'.