Friday, October 28, 2005

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை (பாடல் 5)

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே

பொருந்திய முப்புரை - உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும், பொருந்தி இருப்பவளே.

செப்புரை செய்யும் புணர்முலையால் - புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் விளங்கும் கூடி நிற்கும் முலைகளால், அவற்றின் பாரத்தால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி - வருந்திய கொடிபோன்ற இடையுடைய, அன்பர்களை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் மனோன்மணியே.

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை - தேவர்களும் அசுரர்களும் அமுதம் அடைவதற்காக அன்று பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீண்ட சடையை உடைய சிவபெருமான் அருந்தும் போது அவர் திருக்கழுத்தின் மேல் உன் திருக்கரங்களை வைத்து அந்த நஞ்சை அமுதமாக்கிய அம்பிகையே.

அம்புயமேல் திருந்திய சுந்தரி - நீரில் பிறக்கும் தாமரை மலர் மேல் அழகிய உருவுடன் அமர்ந்திருப்பவளே

அந்தரி பாதம் என் சென்னியதே - உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமும் ஆனவளே - உன் அழகிய பாதத்தை என் தலை மேல் அணிந்துகொண்டேன்.

உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல்; இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம்; பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம்; போன்ற மூம்மூன்று நிலைகளில் முப்புரையாய் பொருந்தி இருப்பவளே. மிக்க அழகுடன் கூடி, இணையாய் நிற்கும் பெருமுலைகளின் பாரத்தால் வருந்தும் கொடியிடை கொண்ட மனோன்மணியே. அன்று சிவபெருமான் உண்ட நஞ்சை அமுதாக்கிய அம்பிகையே. மென்மையான தாமரையில் அமர்ந்துள்ள உன் திருவடிகளை நான் என் தலை மேல் அணிந்து கொள்கிறேன்.

7 comments:

said...

அற்புதமான விளக்கம் குமரன்.

இந்தப் பாடலில் கவனித்தீர்களா! சென்னியதே என்று சொல்லை உருவாக்கியிருக்கிறார் அபிராம பட்டர். தலை பணிவது என்பதற்கு ஈடாக மற்றொரு சொல். அழகான பா. அதற்கு அழகான விளக்கம். தொடரட்டும்.

said...

நன்றி ராகவன். சென்னியதே புதிய சொல் அல்லவே. சென்னிமலை என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் வடமொழிப் பெயர் 'சிரகிரி'. சஷ்டி கவசத்தில் கூட வருமே 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக'. 'சென்னி' என்ற சொல்லை நான் பல இடங்களில் படித்துள்ளேன். ஆனால் அபிராமி அந்தாதியில் தான் அது முதலில் பயின்று வருகிறதா என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரியவில்லை.

said...

miga nalla sevai

said...

நன்றி அனானிமஸ் நண்பரே. அடுத்த முறை உங்கள் பெயரையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

said...

// 'சென்னி' என்ற சொல்லை நான் பல இடங்களில் படித்துள்ளேன். ஆனால் அபிராமி அந்தாதியில் தான் அது முதலில் பயின்று வருகிறதா என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரியவில்லை. //

குமரன் சென்னி என்ற சொல்லை நான் பல இடங்களில் படித்திருக்கிறேன். நிறைய இடங்களில். ஆனால் சென்னியதே என்று சொல்வது? நான் எங்கும் படித்ததில்லை. இது சினையாகு பெயர். ஒரு செயலை அதைச் செய்யும் உறுப்பின் மேல் ஏற்றுவது. சென்னியதே என்றால் சென்னி பணிவது. இங்கே பணிவது என்றைச் சொல்லாமல் சினையாகு பெயராக சென்னியதே என்று சொல்வதை வேறெங்கும் நான் படித்ததில்லை.

said...

விளக்கத்திற்கு நன்றி ராகவன். இன்னும் எனக்குப் புரிந்தும் புரியாத மாதிரிதான் உள்ளது. இன்னும் பல முறைப் படித்து புரிந்து கொள்கிறேன். :-)

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனக்கவலை தீரும்'.