Sunday, November 06, 2005

சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.

சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.

சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!

முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.

முறை முறையே பன்னியது - தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது

உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே

செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.

8 comments:

said...

செய்யுளும் உங்கள் பதவுரையும் நன்று!
அபிராமி பட்டர் எழுதிய செய்யுள்கள் அனத்தும் தேன்.

said...

நன்றி திரு வெளிகண்ட நாதர். வாரத்திற்கு ஒரு பாடல் பதிக்கலாம் என்று இருக்கிறேன். தொடர்ந்து வந்து படியுங்கள்.

said...

குமரன், இந்தப் பன்னியது என்ற சொல்லை விளக்க முடியுமா?

said...

'பன்னியது' மீண்டும் மீண்டும் படிப்பது என்ற பொருள் தரும். பல முறை (பன்முறை) படிப்பது 'பன்னுவது'.

'பனுவல்' என்று மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கதைக் குறிப்பிடுவார்கள். கேட்டிருப்பீர்கள்.

'பத்ததி' என்றால் 'வழிமுறை', 'தொடர்ச்சி', 'தொகுப்பு' என்ற பொருள்களைத் தரும்.

said...

ஏன் கேட்டேன் என்றால் ஆண்டாளும் சொல்லியிருக்கிறார்.

அரங்கற்குப் பன்னும் திருப்பாவை - இங்கு பாடிடும் என்ற பொருளில் வருகிறது. அதாவது செய்யுளைப் படைக்கும் பொழுதே பாடிப் படைப்பது. இது பழந்தமிழ் வழக்கம். அதனால்தான் பாக்கள் வெண்பாவாகவும் அகவலாகவும் முதலில் இருந்தன. பிறகு கலி, வஞ்சி என்று நிறையவும் வந்தன.

அந்தப் பன்னுதல்தான் இந்தப் பன்னுதலா என்பதற்காகக் கேட்டேன்.

said...

ஆமாம் ராகவன்...அந்த பன்னுதல் தான் இந்த பன்னுதல்...

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மந்திர சித்தி பெறலாம்'

said...

நன்றி சிவமுருகன்