Saturday, October 08, 2005

அபிராமி எந்தன் விழுத்துணையே (பாடல் 1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


உதிக்கின்ற செங்கதிர் உச்சிதிலகம் - உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அம்மை தன் நெற்றியின் உச்சியில் அணிந்திருக்கும் திலகம்

உணர்வுடையோர் - பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம் போது - மாதுளம்பூ மொட்டு

மலர்க்கமலை - தாமரையில் வீற்றிருக்கும் மலர் மகளாம் திருமகள் (மஹாலக்ஷ்மி)

துதிக்கின்ற மின் கொடி - துதிக்கின்ற மின்னல் கொடி

மென் கடிக் குங்குமத் தோயம் - மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர்

என்ன - போன்ற

விதிக்கின்ற மேனி - விளங்குகின்ற திருவுடலைக் கொண்ட

அபிராமி எந்தன் விழுத்துணையே - அபிராமி எனக்கு சிறந்த துணையாவாள்.

உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள்.

7 comments:

said...

நண்பர்களே! இந்த பாடல் முதல் எல்லா பாடலிலும் அந்தாதி பயின்று வருவதை கவனிக்கவும்.

said...

குமரன் அவர்களுக்கு வணக்கங்கள்,

தங்கள் வலைப்பதிவு சேவைகளுக்கு நன்றி. முடிந்தால் திருக்கடவூர் அன்னையின் சித்திரங்களையும் இணையுங்கள். தேன் தேடும் வண்டுகளை விசையுடன் ஈர்க்கவும் படிக்கும் போது மேலும் நெஞ்சம் நெகிழ்வடையவும் உதவும். தங்கள் சேவை சிறப்பாக உள்ளது.

said...

நன்றி திரு. நீலகண்டன்! அபிராமி அன்னையின் திருவுருவச் சித்திரங்களை விரைவில் இணைக்கிறேன். அடிக்கடி வந்து எதிர்கால பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

said...

Migga Nalla Sevvai.

Mikka nandru.

Anbudan,
Nattu

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நல்வித்தையும் ஞானமும் பெறலாம்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

நல்ல முயற்சி நன்றியும் பாராட்டுக்களும். நாகராஜன் மலேசியா