Friday, December 30, 2005

96: சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் (பாடல் 14)

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் - உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே

பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே - ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

எங்கள் தலைவியே. உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும். உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே. உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே. ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.

5 comments:

said...

இந்தச் செய்யுளில் சிறந்த பகுதியே தானவர் என்று சொல்லாமல் தானவர் ஆனவர் என்று சொல்வதுதான்.

பொதுவாகவே மனிதரில் நல்லவர் கெட்டவர் என்போம். கெட்டவராக யாரும் பிறப்பதில்லை. நல்லவராகவே பிறக்கின்றோம். பிறகு கெட்டவராக ஆகின்றோம்.

அது போலத்தான் தானவர் ஆனவர். விளக்கம் சரிதானா?

said...

தானவர் ஆனவருக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதே. இந்த ஆனவர் என்ற சொல்லை மூன்று விதமாகப் பொருள் கொண்டேன். முதலில் 'ஆனவர்' என்பதற்கு உனக்கென ஆனவர்கள், அடியார்கள் என்ற பொருள் வந்தது. இரண்டாவதாக் 'வானவர் தானவர் ஆனவர்கள்' என்பதற்கு 'வானவர் தானவர் போன்றவர்கள்' என்ற பொருள் வந்தது. மூன்றாவதாக நீங்கள் சொன்ன பொருள் வந்தது. நான் இரண்டாவதைக் கூறினேன். ஆனால் மூன்றுமே பொருந்திவரும் பொருள் தான். நன்றி இராகவன்.

said...

தூணிலும் இருப்பாள் துரும்பிலும் இருப்பாள் ஆணவமற்ற அடியார்கள் உள்ளத்தில் அன்போடு இருப்பாள் என்று ச்ரி ஹரிதாஸ ச்வாமிகள் பாடியது நினைவுக்கு வருகிறது. அன்பன் தி. ரா. ச

said...

நன்றி தி.ரா.ச.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'தலைமை நிலை பெறலாம்'.