Wednesday, January 04, 2006

102: மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? (பாடல் 15)

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் - உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் - இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?

மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் - சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்

அழியா முக்தி வீடும் அன்றோ - என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே - இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.

இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பைங்கிளியே. அபிராமி அன்னையே. உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் மிகுந்த முயற்சியுடன் செய்பவர், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.

16 comments:

said...

குமரன், ஒரு சின்ன சந்தேகம். யாமளை என்றால் கூந்தலா? சொல்லைச் சொல்கையில் கூந்தலை ஏன் இங்கு இழுக்கின்றார் அபிராமி பட்டர்? ஏதேனும் சிந்தனைத் துளிகள்?

said...

நன்று! நன்று!!

said...

//பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே//
ராகவன் இலக்கியங்களில் ஒருவர் நன்றாக இருக்கிறார் என்பதற்கு இவ்வாறு வாசணைப் பூக்களை சூடி நறுமண கூந்தலுடன் உள்ளாள் என்று கூறுவர்

said...

//யாமளை என்றால் கூந்தலா//

இராகவன். கையும் களவுமா புடிச்சீங்க. :-) எனக்கு யாமளை என்றால் என்னவென்று தெரியவில்லை. அதன் பக்கத்தில் பரிமள என்று இருக்கவே அதனைக் கூந்தல் என்று எழுதிவிட்டேன்.

இப்போது இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஒரு பொருள் 'சிவனின் இணை' என்று சொல்கிறது. இன்னொரு பொருள் 'ருத்ரனின் தோழி' என்று கூறுகிறது. இன்னொரு பொருள் 'மெய்ஞானச் சடங்குகள்' என்று சொல்கிறது. இதனை நான் இந்தப் பொருள் எழுதும் முன்பே செய்திருக்க வேண்டும். பாடலின் பொருளையும் மாற்றி எழுதுகிறேன்.

said...

நன்றி ஞானவெட்டியான் ஐயா. கம்பநாடன் தன் இராமகாதையை திருவரங்கத்தில் அரங்கேற்றும் போது அங்கே கோவில் கொண்டிருக்கும் நரசிம்மர் சிரக்கம்பம் (தலையாட்டுதல்), கரக்கம்பம் (கையை மேலே தூக்கி ஆஹா என்னல்) செய்து இராமகாதையை ரசித்தார் என்று படித்துள்ளேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த போது அது தான் என் முன் தோன்றியது. நீங்களும் தலையை ஆட்டி, கையை மேலே வீசி 'நன்று, நன்று' என்று கூறுவது போல். மிக்க நன்றி.

said...

என்னார் ஐயா. நீங்கள் சொன்ன உவமையை நானும் படித்திருக்கிறேன். மிக்க நன்றி.

said...

தங்களது பாடலுக்கும் ,விளக்கத்திற்கும் மிக்க நன்றி.தொடர்க!

said...

இப்பொழுது விளக்கம் பொருந்தி வருகிறது குமரன். நல்ல விளக்கம். :-)

said...

நன்றி நடேசன்.

said...

நன்றி இராகவன்.

said...

ஆன்மீக எழுத்தாளர்களில் சிறந்த ஒரு நிலையை அடைந்து இருக்கிறீர்கள். தாங்களும் ராகவனும் செய்யும் ஆன்மீகப் பணி என்றென்றும் புகழ் சொல்லும். வாழ்த்துக்கள் குமரன்.

கீழே பல ஆன்மீகத் தளங்கள் உள்ளன:-

http://212.77.100.212/DMOZ/World/Tamil/224174154224174174224175130224174149224174174224175141/224174174224174164224174174224175141/224174185224174191224174168224175141224174164224175129/?ticaid=6e17

said...

மிக்க நன்றி மூர்த்தி அண்ணா. அந்த சுட்டியைத் தட்டிப் பார்த்தேன். அருமையான பட்டியல். இராகவன் பார்த்தால் மிக மகிழ்ச்சி அடைவார்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறலாம்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

அன்பு குமரன்,
யாமளம் = பச்சை, இளமை, தோடு
யாமளை = உமாதேவி, பார்வதி, பச்சை நிறமுடைய மலைமகள், காளி

said...

ஞானவெட்டியான் ஐயா. யாமளம் என்றாலும் ச்யாமளம் என்றாலும் ஒன்று தானா? நீங்கள் யாமளத்துக்கு சொன்ன பொருள் எல்லாம் நான் ச்யாமளத்துக்கு நினைத்திருந்தேன். இப்போது பொருத்தமான பொருள் வருகிறது.