Sunday, February 04, 2007

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே (பாடல் 29)



சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே


சித்தியும் - எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்

சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும் - அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும்

சக்தி தழைக்கும் சிவமும் - பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும்

தவம் முயல்வார் முத்தியும் - தவம் புரிபவர்களுக்கு இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும்

முத்திக்கு வித்தும் - அந்த விடுதலைக்கு காரணமும்

வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் - விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய நினைவும்

புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே - அந்த மனத்தின் உள்ளே நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும் திரிபுரசுந்தரி தானே.

9 comments:

said...

எல்லாமே அபிராமி.
எங்கும் அபிராமி.
கலங்கும் அகத்தையும்,கலங்கவைக்கும் புரத்தையும்
தெளிவித்து உன் பாதங்களில் சேர்த்துக்கொள்.

வேறொன்றும் வேண்டாம்.

said...

படத்தில் எம்மைப் புரக்கும் புரத்தை மதுரை ஆளும் மீனாட்சியம்மை.

said...

இந்தப் பதிவில் இடுகைகள் இட்டு மின்னஞ்சலில் சொல்லுவதற்கு முன்னரே வந்து படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி வல்லியம்மா. உங்களுக்காகவே வாரம் தவறாமல் இந்தப் பதிவில் இடுகைகள் இட முயல்கிறேன்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெறலாம்'.

said...

குமரன்,
பதிவுக்கு நன்றி. நல்ல பாடல். எளிமையான விளக்கம்.
தொடருங்கள். அடுத்த பாடலைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

said...

'சித்தியும்' என்று தொடங்கி பலவாறாக அம்மையை இந்தப் பாடலில் சொல்லுவதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் 'அணிமாதி அஷ்ட சித்திகளும் கிடைக்கும்' என்ற பலன் பொருத்தமே. நன்றி சிவமுருகன்.

said...

வாராவாரம் குறைந்தது இரண்டு பாடல்களுக்காவது பொருள் எழுதிக் கொண்டிருக்கிறேன் வெற்றி. தொடர்ந்து வந்து படித்துப் பாருங்கள்.

உங்களுக்காக 'அணிமாதி அஷ்ட சித்திகள்' என்பதற்கான விளக்கம். தவ முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எட்டுவிதமான சித்திகள் கிடைக்கும் என்பது சித்த மரபில் வரும் ஒரு நம்பிக்கை. அந்த எட்டு சித்திகள்: அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்), மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது), கரிமா (அதிக எடையைக் கொண்டிருப்பது), லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), ப்ராப்தி (நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), ப்ராகாம்யா (எண்ணியதெல்லாம் அடைதல்), ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவது), வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும் வசப்படுத்துவது). இந்த விளக்கங்களிலிருந்தே தெரியும் இவையெல்லாம் உடையவன் இறைவன் ஒருவனே என்பது. சித்தர்கள் இறைவனின் இந்த குணங்களையெல்லாம் தவ வலிமையால் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

said...

முக்தி, முத்தி, இரண்டும் சரிதானோ? நிறைய பாடல்களில் முத்தி என்பதாகவே பார்க்கிறேன்...

said...

இரண்டும் ஒன்று தான் கவிநயா. பக்தி என்பதும் பல இடங்களில் பத்தி என்று வருவதைப் பார்க்கலாம்.